பிள்ளைகளின் தோள்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129eae165a39bf6a&attid=0.1&disp=inline&realattid=f_gbtcboxs0&zwபிள்ளைகளின் தோள்கள் , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசிரியர் : கவிஞர் ந.பாண்டுரங்கன்

நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது. நூலின் பெயரும் சிந்திக்க வைக்கின்றது. நூல் ஆசிரியர் கவிஞர் ந.பாண்டுரங்கன் நூலக அலுவலராக இருந்து ஒய்வு பெற்றாலும் இலக்கியத்திலிருந்து ஒய்வு பெறாதவர். நூலகராக பண்புரிந்த காலத்தில் பல்வேறு நூல்களை படிக்கின்ற வாய்ப்பும், பலதரப்பட்ட பணியாளர்களையும் பொதுமக்களையும் சந்திக்கும் வாய்ப்பு இருந்த காரணத்தால் சிறுகதையை மிக நேர்த்தியாக எழுதி உள்ளார். கதையில் வரும் உரையாடல்கள் மிக இயல்பாக உள்ளது. ஆங்கிலச் சொற்களை மட்டும் வருங்காலங்களில் தவிர்க்க வேண்டும்.

நகைச்சுவை துணுக்குகளையும்,சாதாரண நிகழ்வுகளையும் சிறுகiதை என்று எழுதி வரும் காலத்தில் ஒரு சிறுகதை எப்படி?தொடங்க வேண்டும் எப்படி?முடிக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளது.ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு செய்தி உள்ளது.கடைபிடித்து நடந்தால் வாழ்க்கை சிறக்கும்.23 சிறுகதைகள் நூலில் உள்ளது.கதைகளுக்கு பொருத்தமாக ஓவியம் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.பதிப்பகத்தின் பதிப்புரையே நூலுக்கு தோரண வாயிலாக உள்ளது.புத்தக பதிப்பகத்தில் தனி முத்திரை பதித்து வரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் தரமான பதிப்பக நூல் வந்துள்ளது."ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"என்பது போல "வீட்டுமனை" என்ற முதல் கதையிலேயே நூல் ஆசிரியர் கவிஞர் ந.பாண்டுரங்கன் முத்திரை பதிக்கின்றார்.

தனியார் நிதி நிறுவனங்களை நம்பி மோசம் போகாதீர்கள் என்று அறிவுரை கூறும் நல்ல கதை.மக்களும் தினந்தோறும் செய்தித் தாளிலும்,தொலைக்காட்சிகளிலும்,தனியார் நிதி நிறுவனங்களின் மோசடிகளை தோலுரித்த போதும், உழைக்கும் மக்கள் ஏமாறுவது தொடர் கதையாகி வருகின்றது. வீட்டுமனைக்கு மாதம் தோறும் பணம் செலுத்தி ஏமாந்த மைக்கேல் கதை வாசகருக்கு படிப்பினை. நூலாசிரியருக்கு கிராமிய மொழியும் இயல்பாக வருகின்றது என்பதை உணர்த்துகின்றது "சகமனுஷி"சிறுகதை

நடுத்தர வர்க்கமும்,ஏழை வர்க்கமும் வட்டிக்கு வாங்கி வாடுவதை விளக்குகின்றது."கைமாற்று"கதை அதில் உள்ள ஒரு வசனம்,கடன் அன்பை மட்டுமல்ல,வாழ்க்கை முழவதையும் கூட விஷமாக்குகிறது.அரசு ஊழியர்களில் சிலர் வட்டிக்கு வட்டி கொள்ளையடிப்பதை தோலுரிக்கும் கதை.

பிள்ளைகளின் தோள்கள்" என்ற கதையின் தலைப்பையே நூலிற்கு பெயராக சூட்டியது சிறப்பு. இந்தக் கதையில் சமூக நீதியை நிலைநாட்டுகின்றனர்.பல்லக்கு தூக்குவதை பாரம்பரியமாக செய்து கஷ்டப்படுகின்றது ஒரு இனம்.பல்லக்கு மேலே அமர்ந்து பவுசு காட்டுது பரம்பரையாக ஒரு இனம்.ஏன்?இந்த இழிநிலை.உலகில் பிறந்த மனிதர்கள் யாவரும் சமம் தான் என்பதை உணர்த்தும் கதை.நீலமேகம் பல்லக்கு சுமந்து தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகளின் தோளுக்கு வந்து விடக் கூடாது என கடவுளிடம் வேண்டுவது முத்தாய்ப்பான முடிப்பு.பரம்பரையாகத் தொடரும் கொத்தடிமை வேலை முறைக்கு வேட்டு வைக்கும் சிறுகதை.

கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமாகவே மாறி நூலாசிரியர் வசனம் எழுதி இருப்பது நல்ல நடை.இயந்திரமயமான இந்தக் காலத்திலும்,அலுப்பு சலிப்பில்லாமல் ஆர்வமாக படிக்கும் விதமாக கதைகள் உள்ளது.

நூலைக் கையிலெடுத்து படிக்க ஆரம்பித்தால்,முழுவதும் படித்து விட்டுத் தான் கீழே வைக்கத் தோன்றும்.அந்த அளவிற்கு சிறப்பாக உள்ளது.

"அம்மா" என்ற சிறுகதையில் அவசரத்திற்கு வட்டிக்கு அல்லாமல் கடனாக தந்த பணத்தை தராமல் ஏமாற்றும் போக்கையும்,பெற்ற தாய்க்கு சேலை கூட வாங்கித் தராத மகனுக்கு புத்தி புகட்டும் விதமாக உள்ளது கதை.

மொத்தத்தில் நூல் முழுவதிலும் உள்ள 23 கதைகளும் நமக்கு சிறுகதை படிப்பது போன்ற உணர்வைத் தராமல்,உண்மையிலேயே நிகழ்வுகளை பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகின்றன.இது தான் எழுத்தாளனின் வெற்றி.படித்து முடித்தவுடன்; கதைகள் நம்மை அசை போட வைக்கின்றன.

அன்று பள்ளிகளில்,"நீதி போதனை"என்று தனியாக ஒரு வகுப்பு நடக்கும்.இன்றைக்கு பெரும்பாலான பள்ளிகளில் இந்த வகுப்பை எடுத்து விட்டனர்.ஊடகங்களின் தாக்கத்தால் நமது பண்பாடு சிதைந்து வரும் காலத்தில், பண்பாட்டை, மனித நேயத்தை,வாழ்வியில் நெறியை போதிக்கும் விதமாக உள்ளது இந்நூல்.நூலாசிரியர் கவிஞர் ந.பாண்டுரங்கன் தொடர்ந்து இது போன்ற நூல்களை எழுதி நல்ல சிறுகதை ஆசிரியருக்கான உயர்ந்த பல விருதுகளை பெற்று சிறக்க வாழ்த்துக்கள்.

கருத்துகள்