- நூலின் பெயர் : குட்டியூண்டு
- நூல் ஆசிரியர் : கவிஞர் வசீகரன்
- மதிப்புரையாளர் : கவிஞர் இரா.ரவி
நூலின் அட்டைப்படமே வசீகரமாக உள்ளது. பின் அட்டையில் நூல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் புகைப்படமும். இந்நூல் பற்றிய கருத்து அவரது மொழியிலேயே.
குழந்தைகள் நம் வாழ்வின் வெளிச்சங்கள் அவர்களின் உலகம் என்பதே தனி, அந்த உலகத்துக்குள் நாம் ஒரு முறை கற்பனையாக நுழைந்து வந்தால் கூட போதும், அந்த சுகமே தனி, அந்த தனி உலகத்துக்குள் நுழைந்து நடத்தப்பட்ட எளிய கற்பனை படப்பிடிப்பில் மலர்ந்த மூவரி கவிதைகளே இந்த குட்டியூண்டு.
நூலாசிரியர் கவிஞர் வசீகரன் பொதிகை மின்னல் மாத இதழின் ஆசிரியர். சிந்தையைக் கவரும் சிந்தனை மிக்க வைர வரிகளை குருந்தகவல் மூலம் அனுப்பி வருபவர். தொய்வின்றி நூல்களை வெளியிட்டு சாதனை புரிபவர். இளைப்பாற நேரமின்றி இலக்கிய உலகில் இயங்கி வரும் இனிய உழைப்பாளி. சிறந்த சிந்தனைவாதி உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஆழ்ந்து படித்து உணர்ந்தவர். இயந்திரமயமான சென்னை மாநகரத்தில் மனித நேயத்தோடு வாழும் பண்பாளர். மதுரை மற்றும் புதுவை இலக்கியப் பறவைகளின் வேடந்தாங்கலாகத் திகழ்பவர்.
காவல்துறை கவிஞர் சுடர் முருகையா அவர்களின் அணிந்துரை சுடரொளி வீசுகின்றது.குழந்தைகளுக்கான ஹைக்கூ என்ற போதிலும்; ஆறிலிருந்து அறுபது வரை படித்து மகிழும் சிறந்த நூலாக உள்ளது. பல்வேறு சிந்தனைகளை விதைத்து சிந்திக்க வைக்கின்றது. எள்ளல் சுவையும் துள்ளலாக உள்ளது. குட்டிக் குழந்தைக்கான ஹைக்கூ. இந்நூலை வாங்கி அவசியம் குழந்தைகளிடம் கொடுத்து படிக்கச் சொல்ல வேண்டும். மொழி அறிவும் கேள்வி ஞானமும் குழந்தைகளுக்கு வளரும். முதல் ஹைக்கூ கவிதையிலேயே முத்திரை பதிக்கிறார். குட்டியூண்டு நூலின் தலைப்பே குழந்தை மொழியில்.
சாப்பிட மறுத்து
செல்ல அடி வாங்குகிறது
குழந்தையிடம் பொம்மை
இந்த ஹைக்கூவை படிக்கம் போது பல்வேறு சிந்தனைகள் வருகின்றது. அது தான் ஹைக்கூவின் வெற்றி. பொம்மை சாப்பிடாது அடிக்காதே என குழந்தைக்கு உணர்த்துகின்றது. குழந்தையே நீ சாப்பிட்டு விடு இல்லை என்றால்,நீ பொம்மையை அடிப்பதைப் போல உன்னை அன்னை அடிப்பார்கள், இப்படிப் பல உணர்வுகள் இந்த மூன்று வரிகளில் உள்ளது. இப்படி 144 ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு இந்நூல்.
கணினியுகம், விஞ்ஞான வளர்ச்சி, வசதிகள் பெருகி விட்டது. அதை விட விவகாரத்துகளும் பெருகி விட்டது. காரணம் சகிப்புத்தன்மை, பொறுமை,மனிதநேயம்,அன்பு இவை மறந்து கோபம், எரிச்சல், விரக்தி இவை வளர்ந்து விட்டது. முன்பு போல நீதிநெறிக் கதைகளை படிக்க நேரமில்லை, போதிக்க ஆளும் இல்லை. இதனால் மனக்கசப்பு உண்டாகி குடும்பத்தில் பிரிவினை பெருகியது.
பிரிந்த அப்பா அம்மா
தூது போகிறது
குழந்தை
குழந்தையின் காரணமாகவே கட்டயாத்தின் பேரில் சிலர் பிரியாமல் வாழ்கின்றனர் என்பதை உணர்த்துகி;ன்றது. குழந்தை இல்லை என்றால் பலர் எப்போதே பிரிந்திருப்பேன் என்பார்கள். ஒரு மனிதனை உலகமே பாராட்டும், ஆனால் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பகைமை பாராட்டுவார். இந்நிலை பலரிடம் காண்கிறோம். பெரியவர்கள் சண்டை போட்டாலும், குழந்தைகள் ஒற்றமையாகவே இருக்கின்றன என்பதை உணர்த்தும் ஹைக்கூ.
பக்கத்து வீட்டோடு
அம்மா அப்பா அடிதடி
கூட்டாஞ்சோறில் குழந்தை
அமைச்சர் வருகின்றார் என்ற தகவலின் பேரில் பள்ளிக்குழந்தைகளை வரவேற்க வெயிலில் நிறத்தும் கொடுமைகளை சாடும் ஹைக்கூ.
சுள்ளென்று வெயில்
வரிசையில் குழந்தைகள்
எப்ப வருவார் அமைச்சர்?
குட்டி போடவில்லையே
கவலையில் குழந்தை
புத்தகத்தில் மயிலிறகு
குழந்தை மனத்தை படம் பிடித்து காட்டுகின்றது. நிறைய இல்லங்களில் கேட்ட உரையாடல் இது. பெற்றோரைப் பார்த்து குழந்தைகள் உங்க திருமணம் நாங்க பார்க்கவில்லையே என்று, அதனை உணர்த்தும் அழகிய ஹைக்கூ
பெற்றோரை குற்றஞ் சொல்லி
அழுதது குழந்தை
உங்க கல்யாணத்துக்கு ஏன்? கூப்பிடல
இப்படி எள்ளல் சுவையுடன் ஏராளமான ஹைக்கூ கவிதைகள், சிந்திக்க வைக்கும் சிறந்த ஹைக்கூ, போதிக்கும் ஹைக்கூ, பலவகையான ஹைக்கூ நூலில் உள்ளன.
அப்பா வைத்தார்
எலிக்கூண்டில் வடை
பதறும் மழலை மனசு
குழந்தை மனசு பெரியவர்களுக்கும் இருந்தால் நாட்டில் வன்முறையே இருக்காது.
கணினியில் அமர்ந்து
சொல்லிக் கொடுத்தது குழந்தை
கற்கும் அப்பா
இக்கட்சி இன்று நிறைய வீடுகளில் நடந்து கொண்டிருக்கும் உண்மை.
துப்பாக்கியால் மிரட்டி
டுமீல் எனச் சுட்டது குழந்தை
பொய்யாகச் சாகும் தந்தை
நம் கண் முன் நடந்த காட்சிகளை காட்சிப்படுத்தி வெற்றி பெறுகிறார் நூல் ஆசிரியர் வசீகரன்.
மகிழ வைக்கும்
ஒரே அழுகை
பிறந்த மழலை
முரண் சுவையுடன் சிறந்த ஹைக்கூ
பாடையில் தாய்
அழும் குழந்தை
எழுந்து சோறு போடும்மா
சோகத்தை கூட காட்சிப்படுத்தி கண் கலங்க வைத்து உள்ளார். இது தான் படைப்பாளியின் வெற்றி. மிக மிக எளிமையான சொற்களால் மிக மிக மிக வலிமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளார் ஹைக்கூ வடிவில். சில அறிவு ஜீவிகள் இது என்ன ஹைக்கூவா? ஏன விமர்சனம் செய்யக் கூடும். அவர்களுக்கான பதில் “இது தான் ஹைக்கூ” என்பதாகும். ஹைக்கூ உலகில் தனி முத்திரை பதித்து வரும் நூலாசிரியர் கவிஞர் வசீகரனுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், தொடர்ந்து படையுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக