அறிவுக்கோர் ஆவணம் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129ef628b71572eb&attid=0.1&disp=inline&realattid=f_gbullb6z0&zw
அறிவுக்கோர் ஆவணம் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் : பொன்.குலேந்திரன்


“அறிவுக்கோர் ஆவணம்” நூலின் பெயர் மட்டுமல்ல காரணப்பெயர் என்றே கொள்ளலாம். உண்மையிலே அறிவுக்கோர் ஆவணமாக நூல் திகழ்கின்றது. தகவல் களஞ்சியமாக ஆவணப்படுத்த வேண்டிய அற்புத நூல். இந்நூலிற்கு பெருங்கவிக்கோ தனது வைர வரிகளால் கவிதையால் வாழ்த்துரை வழங்கி இருப்பது நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அறிஞர் சாமி அப்பாத்துரையின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. முத்திரை பதிக்கின்றது.

இன்றைக்கு உலக அளவில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையதளம் அதிகம் உள்ள மொழி தமிழ் மொழி உலக அரங்கில் இந்தப் புகழை தமிழுக்கு தேடித்தந்தவர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள். தமிழ் உயர்தனிச் செம்மொழியாக அறிவித்துள்ள நாளில் உலக அளவில் இணையத்தின் மூலம் தமிழை உயிர்த்தெழ வைத்தவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்றால் மிகையன்று. உலகில் உள்ள பெரும்பாலான தமிழ் இணையதளங்களை இயக்குபவர்கள். நடத்துபவர்கள் இலங்கைத் தமிழர்கள் சொந்த மண்ணில் உரிமைக்கு போராடிக் கொண்டும் இணையம் நடத்துகின்றனர். குடும்ப சூழ்நிலை காரணமாக புலம் பெயர்ந்த போதும் மண்ணையும், மொழியையும் மறக்காமல் தமிழ் வளர்க்கும் வல்லுனர்களில் ஒருவர் தான் பொன் குலேந்திரன். இவர் குவியம் என்ற இணையத்தின் மூலம் தமிழ் வளர்த்தவர். படைப்பாளியால் சோம்பேறியாக சும்மா இருக்க முடியாது. பொன் குலேந்தின் அவர்கள் மதுரை வரும் செய்தியை பெருங்கவிக்கோ தொலைபேசி மூலம் தெரிவித்தவுடனேயே இவருக்கு சிலமணிநேரத்திற்குள் பாராட்டு விழாவை இலக்கியப்பறவைகளின் வேடந்தாங்கலான மதுரை நியூ காலேஜ் ஹவுசில் பொன்மனம் படைத்த புரவலர் மணிமொழியனார் முன்னிலையில் ஏற்பாடு செய்தோம். நூல் ஆசிரியர் மனம் மகிழ்ந்தார்கள் சிறந்த உரை திகழ்த்தினார்கள். ஆற்றிய உரையில் சிலவற்றை இந்த நூலிலும் சேர்த்து இருக்கிறார்கள்.

இந்நூலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு பாடநூலாக்கலாம். எந்த நுலிலும் படித்திராத புதிய செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள் குவியம் இணைய இதழில் நான் படித்த பல கட்டுரைகளை நூலாகப் படிக்கும் போது பரவசம் அடைந்தேன். நல்ல நடை, எளிய நடை ஆசிரியரின் மொழிப்பற்று,மொழியறிவு நன்கு புலப்படுகின்றது.

மகாகவி பாரதியார் சொன்ன கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் விதமாக அறிவியல் கருத்துக்களை அழகு தமிழில் எளிதில் புரியும் வண்ணம் அற்புதமாக வடித்து

இருக்கிறார். கனடாவில் வாழ்ந்த போதும் கண்டியை மறக்காதவர்.

தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரப்பி வருபவர். இலங்கைப் பரங்கியர் என்ற முதல் கட்டுரையில் தொடங்கி தீக்குளிப்பு என்று முடியும் கட்டுரை வரை 38 கட்டுரைகளை ஆதாரங்களுடன் ஆணித்தரமாக மறுப்பு யாரும் சொல்ல முடியாத அளவிற்கு வரலாற்று ஆவணமாக சுவடு பதித்து இருக்கிறார் ஆசிரியர். இணைய இதழின் ஆசிரியர் என்பதால் கட்டுரை எப்படி? எழுத வேண்டும் என்ற சூத்திரம் அறிந்தவர் என்பதனால் கட்டுரையை மிகச்சிறப்பாக எழுதி உள்ளார். படிக்கின்ற ஆர்வத்தை தூண்டும் வண்ணம் மிகச்சிறப்பாக எழுதி உள்ளார். படித்து விட்டு தூக்கிப் போடும் சராசரி புத்தகம் அல்ல இது. இலங்கையைப் பற்றி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும். தெரிந்தவர்கள் மகிழ்ந்து கொள்ளவும் உதவுகின்ற உன்னத நூல். உலகத் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

இலங்கையில் சிங்களர்தான் பெரும்பான்மையினர் என்று உலகம் நம்பிக் கொண்டு இருக்கிறது.ஆனால் நூலாசிரியர் தமிழர்கள் மற்றும் நிட்டாவோ, பரங்கியர்கள், காப்பிரிகள், பட்டாணியர்கள் இப்படி பல இனத்தவர் நிறைந்து உள்ளதென ஆதாரங்களுடன் எடுத்து இயம்புகின்றார். கொழும்பில் செட்டிமார் கட்டிய கோயில்கள், இப்படி பல தகவல்கள், சிங்கள இனத்தில் மேல்நாட்டு சிங்களவர், கீழ்நாட்டு சிங்களவர் என இரு பகுதிகள் இருப்பதை உணர்த்துகிறார். முத்துக்குளித்தல் செய்து முத்து எடுத்தவர்களுக்கு முக்குவர்கள் என்று பெயர் இப்படி இலங்கையில் வாழ்ந்தவர்களின் வரலாற்றை விரிவாக விளக்குகிறார்.

மனிதனை வைத்து மனிதன் இருக்கும் ரிக்ஷோ என்பது ஏகாதிபத்தியத்தின் சின்னம் என்பதை விளக்கி மனித நேயத்தை பறைசாற்றுகிறார். இலங்கையில் தற்போது ரிக்ஷோ மறைந்து விட்டது என்பதை உணர்த்துகிறார்.

இயற்கையில் உருமறைப்பு என்பது ஏமாற்று வித்தை என்பதை அறிவியல் கருத்துக்களை வாசகர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் விளக்குகின்றார். பொதுவாக இலங்கைத் தமிழர்களின் தமிழ் இனிக்கு இன்றைக்கு மொழிக் கலப்படமின்றி தமிழைத் தமிழாகவே பேசுவதில் வல்லவர்கள் இலங்கைத் தமிழர்கள். பேசுவதில் மட்டுமல்ல பிறமொழி கலப்பின்றி அழக தமிழில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவதிலும் வல்லவர்கள் நாங்கள் என்பதை பறைசாற்றி உள்ளார். பொன். குலேந்திரன்.

முதலைக் கண்ணீர் கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆசிரியரின் அறிவியல் விளக்கம் அருமை.

கொடூர சுனாமியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இந்தியாவையும், இலங்கையையும் சுனாமி புரட்டிப் போட்டது. துக்கத்தில் ஆழ்த்தியது பலரை பலி கொண்டது. சேதங்கள் பல கோடிகளைத் தாண்டியது “கடற்கோள்கள்” கட்டுரையில் புள்ளி விபரங்களுடன் மிக நுட்பமாக விளக்கி உள்ளார். இலங்கை தீவாக இருக்கின்ற காரணத்தால் கடல் எளிதில் உட்புகுந்து விடுகின்றது.

ஐய்ந்தறிவு ஜீவன்கள் என மிருகங்களை நாம் இழிவாக எண்ணுகின்றோம். ஆனால் யாருடைய அறிவிப்பையும் எதிர்பாராமல் தாமாவே மிருகங்களும் பறவைகளும் வரப்போகும் பூகம்பத்தை முன்கூட்டியே அறியக்கூடிய அறிவுத்திறன் மிக்கவைகளாக இருப்பதை விளக்குகின்றார் நூலில் கண்டி ராஜ்ஜியம் தமிழ்நாட்டு நாயக்கர் வசம் இருந்ததை விளக்குகிறார்.

ஈழத்தின் பண்டைய துறைமுகங்கள் பற்றி சோழ ஆட்சி பற்றி மாந்தை துறைமுகம் சாம்பு கோவளம் துறைமுகம் பற்றி கட்டுரையில் பதிவு செய்துள்ளார். ஒலி பற்றி அனைவரும் அறிவோம். ஒலி பற்றி இத்தனை சிறப்பான விளக்கத்தை இது வரை நான் எந்த நூலிலும் படித்தது இல்லை. ஒலியின் பயனை எடுத்து இயம்புகின்றார் மிகவும் ரசனையோடு.

தந்தை பெரியாராலும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியாலும் ஒழிக்கப்பட்ட தேவதாசி முறையை விளக்கி இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் கோயில் திருவிழாக்களில் ஆடும் பெண்களை சின்ன மேளம் என்று அழைத்து இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் சின்ன வீடு என் சொல் போல என்பதையும் குறிப்பிடுகிறார். மூட நம்பிக்கைகளை சாடுகிறார். பகுத்தறிவை ஊட்டுகிறார். அறியாமையை அழிப்போம் என்ற தலைப்பிட்டு கட்டுரையை முடிக்கிறார். ஒரு படைப்பாளியின் கடமையை செவ்வன செய்துள்ளார். சமூகத்தை சீர்படுத்தும் நோக்கம் உள்ளது ஆசிரியருக்கு. தேடல் உள்ளவர்கள் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். தேடுலம் பகிர்தலும் கட்டுரை தேடலின் விதத்தையும் அவசியத்தையும் விளக்குகின்றது. இணையதளத்தில் உள்ள புகழ்பெற்ற தேடுதளங்களான கூகுள், யாகு, எம்எஸ்என், ஆல்டாவிஸ்டா, ஹாட்பாட், வரிசைப்படுத்தி வாசகர்களுக்கு பயனுள்ள பலதகவல்களை தொகுத்து வழங்கி உள்ளார். ஆசிரியரின் கடின உழைப்பு உணரமுடிகின்றது. சாதித்தீட்டு இருந்ததை சாடுகின்றார். யாழ்குடா நாட்டின் பண்டைய கட்டடக்கலையை தமிழ் நாட்டிற்கும், கேரளாவிற்கும் இருந்த தொடர்பு பற்றி கூறுகிறார். கிராமிய வீடுகள் கலை அம்சத்துடன் இருந்தது பற்றி விளக்குகிறார். ஆங்கிலக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து வழங்கி உள்ளார்.

சிங்களர்கள் புத்தரை வணங்கினாலும் புத்தர் சொன்ன ஆசையே அழிவுக்கு காரணம் என்ற பொன்மொழியை உணருவதில்லை. அவர்கள் புத்தரை மட்டுமல்ல கண்ணகி, திரௌபதி, மாரியம்மன் போன்ற தெய்வங்களை வணங்கும் பழக்கம் உள்ளவர்கள் என்று நூலாசிரியர் பதிவு செய்கிறார். தெய்வங்களை வணங்குவது முக்கியமல்ல மனிதனை மதிக்க வேண்டும் என்பதை உணர்ந்தால் இலங்கையில் அமைதி நிலவும். இந்த நூல் அறிவுக்கோர் ஆவணம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை வாங்கி படித்துப் பாருங்கள் அறிவை விரிவு செய்யுங்கள்

கருத்துகள்