காகிதப்பூவில் தேன் துளிகள் மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி நூல் ஆசிரியர் : கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன்
நூலின் முகப்பு அட்டை நூலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் அழகிய வடிவமைப்பு. படைப்பாளியை காயப்படுத்தாமல் மயிலிறகால் வருடுவது போன்ற விமர்சனம் செய்யக்கூடிய மிகச்சிறந்த மனிதர். சிற்றிதழ்களின் வளர்ச்சிக்கு உதவிய அமரர்.திரு.வல்லிக்கண்ணன் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது. நூல் ஆசிரியர் திரு.சந்திரசேகரன் இனிய நந்தவனம் என்ற மாத இதழின் ஆசிரியர் என்பதால் அச்சில் கூடுதல் கவனம் செலுத்தி மிகவும் வித்தியாசமாக படைத்து இருக்கிறார். நூலின் உள்ளே மஞ்சள் வண்ண காகிதம் பயன்படுத்தி அழகுபடுத்தி இருக்கிறார். உலகத் தமிழர் மாமன்ற மாநிலத்துணைப் பொதுத் செயலர் புலவர் தியாகசாந்தனின் ஆய்வுரை அமுத உரையாக உள்ளது. நூலின் தலைப்பே நம்மை சிந்திக்க வைக்கின்றது. பூவில் தேன் இருக்கும் உண்மை.
காகிதப் பூவில் தேன் துளிகள் இருக்குமா? என்ற கேள்வி நமக்குள் உதிக்கின்றது. அதற்கு விடை என்ன தெரியுமா? மரபுக்கவிதை என்ற மலரில் மட்டும் தான் என்ற தேன் இருக்கும் என்று புதுக்கவிதை புறக்கணித்து விடாதீர்கள். புதுக்கவிதை என்ற காகிதப்பூவிலும் தேன் துளிகள் உண்டு ரசனையோடு ருசித்துப் பாருங்கள் என்று சொல்லும் விதமாக கவிதைகள் உள்ளன. புதுக்கவிதைகள் தாத்தா மேத்தா என்பார்கள். மேத்தா தாத்தா என்றால் புதுக்கவிதையின் முப்பாட்டன் திருவள்ளுவர் ஆம் 2039 ஆண்டுகளுக்கு முன்பே மரபு அல்ல என்று ஏற்றுக் கொள்ள மறுத்த புலவர்களிடையே ஒன்றே முக்கால் அடியில் உலகை அளந்த புதுக்கவிஞன் திருவள்ளுவர்.
மாறவே மாறாதா? என்ற முதல் கவிதையிலேயே படிக்கும் வாசகர்களை வியப்பில் ஆழ்த்துகின்றார். வரிசையாக மாற்றங்களை பட்டியலிட்டு விட்டு கடைசியாக முடிக்கும் முத்திரை வரிகள் இதோ
மாறவே மாறாதா
மதங்களாலும் சாதியாலும்
மூடத்தனத்தாலும்
முடங்கிக் கிடக்கும்
இந்த சமூகம்?
கடைசியாக இருக்கும் அந்த கேள்விக்குறியில் கவிஞரின் கோபம் கொப்பளிக்கின்றது. சாதியால் மதத்தால் மனிதன் என்பதையே மறந்து சிந்திக்காமல் விலங்கென மோதி வீழும் விந்தை மனிதர்களின் கன்னத்தில் அரையும் கவிதை.
கவிதைகள் முழுவதும் மனித நேயத்தை வலியுறுத்துகின்றார்.மூடநம்பிக்கைகளை முற்றாகச் சாடுகின்றார். பகுத்தறிவை விதைக்கின்றார் படைப்பாளியின் கடமையை உணர்ந்து மனிதனை நெறிப்படுத்தும், கவிதைப் பண்படுத்தும் கவிதை பண்படுத்தும் கவிதை என பாமாலை தொடுத்துள்ளார். சிசுக்கொலைக்கு கண்டனத்தை உரக்கப் பதிவு செய்கிறார்.
தமிழினத்திற்கு மானமும் அறிவும் கற்பித்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றிய பூமிக்கு வாருங்களய்யா என்ற தலைப்பிலான கவிதையில்
பொறுக்கித் தின்னத்தான்
அரசியலுக்கு வருகிறான்
என்றீர்கள்
இங்கே
பொறுக்கித் தின்னதோடு
நாட்டை
கூறு போட்டல்லவா
சிதைக்கிறார்கள்.
என்று முடிக்கிறார். சுயநல வெறிபிடித்து ஆடும் இன்றைய போலி அரசியல்வாதிகளுக்கு சவுக்கடி தரும் உணர்ச்சி மிக்க வைரவரிகள்.
உனக்குள் நீ என்ற கவிதையில் ஒவ்வொருவருக்குள் இருக்கும் திறமையை உணர்த்தும் விதமாக சிறப்பாக எழுதி உள்ளார். இன்றைய இளைய சமுதாயத்திற்கு நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சும் நல்ல கவிதை இதோ
நம்பிக்கையை மட்டும்
நங்கூரமாய் வை
நாளை நீயும்
களங்கரை விளக்கமாய்
பிரகாசிப்பாய்
தீபாவளி என்ற மூடநம்பிக்கைக் கதையை கவிதையால் சாடி பகுத்தறிவு ஊட்டுகின்றார். நூல் முழுவதும் கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன. சிலிர்க்கவும் வைக்கின்றன. மானுடம் காப்போம் என்ற கடைசி கவிதை வரை அட்டை முதல் அட்டை வரை கருத்துக் களஞ்சியமாக உள்ளது பாராட்டுக்கள்.
ஊடகங்களால் குறிப்பாக தமிழக தொலைக்காட்சிகளால் சிதைக்கப்பட்டும், செந்தமிழை இன்னும் சிதையாமல், அழியாமல் காத்து வரும் பெருமை ஈழத்தமிழர்களுக்கு உண்டு, புலம் பெயர்ந்த வலிமை மிகுந்த வேதனை வாழ்க்கையிலும் தமிழருக்காக இணையத்தளங்கள், தொடங்கி தமிழை உலக அளவில் பறைசாற்றி வரும் பெருமைக்கு உரியவர்கள், ஈழத்தமிழர்கள். இந்நூல் ஆசிரியர் கவிஞர் சந்திரசேகரன் தமிழகத்தில் திருச்சியில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர் என்பதால் அவர் கவிதைகளில் உணர்ச்சிப் பிழம்பாக உள்ளது.
|
கருத்துகள்
கருத்துரையிடுக