அம்பேத்கர் , நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
தமிழாக்கம் : திரு.ஆர்.முத்துக்குமார்
தனக்கு மறுக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் எதிர்காலச் சமுதாயத்துக்குப் பெற்றுத் தருவதற்காகப் பேராடிய புரட்சியாளர் அம்பேத்கர் சிலிரிக்க வைக்கும் வாழ்கையைச் சரித்திரம் சிறிய கையடக்க நூலாக வந்துள்ளது. பிரோடிஜி நிறுவனம் பதிப்பித்து உள்ளது.
இந்த உலகில் பிறந்த மனிதர் யாவரும் சமம். எங்கே ஆதிக்க உணர்வு தலைதூக்கி பிறரை அடிமைப்படுத்தும் போது அங்கே புரட்சி வெடிக்கின்றது.மாமனிதர் அம்பேத்கர் மாணவராக இருந்த போது சந்தித்த சாதியக் கொடுமைகள் அவரது உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
தீண்டாமை கொடுமை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பிறந்தவர் அம்பேத்கர். அவரது இயற்பெயர் பீமாராவ். பள்ளிப்பருவத்தில் பள்ளியில் தண்ணீர் தாகம் எடுத்தால் நேரடியாக பானையிலிருந்து எடுத்து அருந்தத் தடை, யாராவது உயர் சாதி மாணவன் ஊற்றினால் கைகளில் ஏந்தி அருந்த வேண்டும். சிந்திய நீரைத்துடைத்து விட வேண்டும். இது போன்ற மனிதாபிமனம் இல்லாத தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழுந்து உரிமை முழக்கம் செய்தார், உணர்ச்சி ஊட்டினார், தட்டிக் கேட்டார் தயங்கவில்லை.
அம்பேத்கர் வாழ்வில் அவரது பள்ளிப்பருவம் தொடங்கி, இந்தியாவின் சட்ட அமைச்சராக முத்திரை பதித்தது வரை நூலாசிரியர் ஆர்.முத்துக்குமார் சுவைபட விளக்கி உள்ளார். இன்றைய இளைய சமுதாயம் அவசியம் படித்து உணர வேண்டிய அற்புத நூல். நூலின் அட்டைப்பட வரிகளில் புரட்சியாளர் அம்பேத்கர் என்பத்றகு பதிலாக, புரட்சியாளர் அம்பேத்பர் என்று எழுத்துப்பிழை உள்ளது. அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள்.
அவமானம், புறக்கணிப்பு,அவலம் எல்லாவற்றையும் மென்று விழுங்கினார் அம்பேத்கர். அவற்றைத் தன்னுடைய வளர்ச்சிக்கான உரமாகவும் மாற்றினார். நோக்கம் ஒன்று தான், தாழ்த்தப்பட்ட மக்கள் சுதந்திரமாகப் பேச, எழுத, செயல்பட வேண்டும். முக்கியமாக சுவாசிக்க வேண்டும். இதற்காக எதையும் செய்யத் தயாராக இருந்தார். வாழ்வின் ஒவ்வொரு நொடியையும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவே செலவிட்ட போராளியின் தியாக வாழ்க்கையை நூலில் மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
அம்பேத்கர் அப்பா வீட்டில் தம்ளரில் தான் தேநீர் குடிப்பார். ஆனால் தேநீர் கடையில் கொட்டங்கச்சியில் குடிப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். ஏன்? இந்த நிலை என்று தந்தையிடம் கேட்ட போது, அவர் பதில் சொல்லாமல், மௌனமாக இருந்தது கண்டு தர்மசங்கடமான கேள்வியை அப்பாவிடம் கேட்டு விட்டோம் என்று நினைத்து தீண்டாமைக் கொடுமையை வெறுத்தார்.
� பிராமணர்களின் சாலையில் நடந்து வரும் போது, கையில் ஒரு மணியை எடுத்து ஆட்டுவாங்க, சத்தம் கேட்டதும் நம்மளை மாதிரி ஆளுங்க, ஒரமாக ஒதுங்கி அவுங்க போறதுக்கு வழி விட்டுடணும், அப்படி செய்யலைன்னா நம்ம மேல இருக்கிற தீட்டு அவங்க மேல ஒட்டிக்குமாம்�. அண்ணன் சொல்வதைக் கேட்டு அம்பேத்கருக்கு பகுத்தறிவு வேலை செய்தது? ஏன்? எதற்கு? என்ற கேள்விகளைக் கேட்டுக் கொண்டு பின்னாளில் தீண்டாமைக்கு எதிராக உரக்கக் குரல் எழுப்பி எழுச்சி ஊட்டினார்.
அம்பேத்கரின் திருமணத்திற்கு மண்டபம் தரப்படாததால் மீன் மார்க்கெட்டில் நடந்தது குடும்ப சூழ்நிலை காரணமாக பரோடாவிற்கு வேலைக்குச் சென்றது, தந்தை நோய்வாய்ப்பட்டதும் பம்பாய் திரும்பியது.1913 ஜீலை மூன்றாவது வாரம் படிக்க நியூயார்க் சென்றது, எப்போது நேரம் கிடைத்தாலும் படித்துக் கொண்டே இருப்பார், இப்படி பல்வேறு தகவல்கள் நூலில் மிக எளிமையான நடையில் எல்லோருக்கும் எளிதில் புரியும் வண்ணம் பதிவு செய்தது சிறப்பு.
ஊமைகளின் தலைவன் என்ற பெயரில் இதழ் தொடங்கினார்கள். பல்வேறு கட்டுரைகள் எழுதி புரட்சிக்கு வித்திட்டார். மாமனிதர் அம்பேத்கரும் ஊமைகளின் தலைவனாகி மக்களுக்காக இவர் பேசினார், எழுதினார், செயலாற்றினார்.
மாமனிதர் அம்பேத்கரும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் இந்த உலகில் தோன்றியிருக்கா விட்டால், கற்பனை செய்து பார்க்கவே அச்சமாக உள்ளது. அன்று இருந்த மூடப்பழக்கவழக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தீண்டாமைக்கும் எதிராக உரக்கக் குரல் கொடுத்து சமதர்ம சழுதாயம் மலர பாடுபட்ட இவர்களின் உழைப்பு,என்றும் மறக்க முடியாதது.
அம்பேத்கர் பல போராட்டங்கள் நடத்தி எழுச்சியூட்டி இருக்கிறார். நாசிக்கில் இருக்கும் காலாராம் ஆலயத்துக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கு உயர்சாதிக்காரர்களின் எதிர்ப்பு கண்டு கொதித்து எழுத்தார். கர்நதியடிகளிடம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று உரக்கக் குரல் கொடுத்தார்.
எந்தவொரு சமுதாயம் பள்ளிப்பருவத்தில் தீண்டாமை காட்டி ஒதுக்கியதோ, அந்த சழுதாயத்திற்கு பயன்படும் வகையில் பணியாற்றினார்.1948 அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் அறிமுகம் செய்து பேசினார்.அரசியல் நிர்ணய சபைத் தலைவராக இருந்த டாக்டர். இராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பல தலைவர்கள், அம்பேத்கருக்குப் பாராட்டு மழை பொழிந்தனர்.
ஆதிக்க வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்தி, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வின் விடியல் விளைய கடைசி மூச்சு வரை உழைத்த ஒப்பற்ற தலைவர் அம்பேத்கரின் வரலாறு படித்து முடித்தவுடன் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார் போராளி அம்பேத்கர்.
கருத்துகள்
கருத்துரையிடுக