நூல் ஆசிரியர் : கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
நூலின் அட்டைப்பட ஓவியம் சிறப்பாக உள்ளது. நூல் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம் நாடறிந்த நல்ல பேச்சாளர். எழுத்து ஆற்றலும் வரும் என்று நிரூபித்து உள்ள நூல் இது. இந்நூலிற்கு சாகித்ய அகதெமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன் பெண்ணிய எழுத்தாளர் அ.வெண்ணிலா ஆகியோரின் அணிந்துரை அழகு சேர்க்கின்றது. ஒவியர் ஸ்ரீரசா அவர்களின் ஓவியங்கள் நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.
இயந்திமயமாகி விட்ட காலத்தில் மனித மனங்களும் இயந்திரமாகி விடுகின்றது. இயல்பான நிலைக்குத் திரும்ப இது போன்ற நகைச்சுவை விதைக்கும் நூல்கள் உதவுகின்றன. செம்மலர் இதழில் பிரசுரமானவற்றை தொகுத்து நூலாக வழங்கி உள்ளனர். நல்ல முயற்சி, பாராட்டுக்கள்.
கிராமத்து மனிதர்களை படம்பிடித்து, கிராமிய மொழியிலேயே வடித்து உள்ளார். ‘பாவாடை ராசு” முதல் கட்டுரை இவர் பற்றி, ‘ராசு அண்ணன் சட்டை போட்டிருந்து யாரும் பார்த்ததில்லை. அவர் கல்யாணத்தின் போது ஒரே ஒரு நாள் சட்டை போட்டிருந்ததாகவும், தாலி கட்டிய உடனேயே உடம்பெல்லாம் அரிக்கிறது என்று சொல்லி உடனே கழற்றி எறிந்து விட்டதாகவும் தகவல் உண்டு, இருந்தாலும் இதை நேரடியாகப் பார்த்ததற்கு இப்போது யாரும் சாட்சியில்லை”.
கிராமத்தில இன்றும் சட்டை போடாத மனிதர்கள் பலர் உண்டு. அவர்கள் நம் நினைவிற்கு வந்து விடுகின்றனர். ஒரு நாள் இரவு அவசரத்தில் துண்டுக்குப் பதிலாக மனைவியின் பாவாடையை தோளில் போட்டு சென்றதன் காரணமாக அவருக்கு பாவாடை ராசு என்று பெயர் வந்த காரணம் கட்டுரையில் உள்ளது. இரண்டு ரூபாய் சாப்பாடு என்று நினைத்து சாப்பிட்டவரிடம், கூச்சப்படாமல் சாப்பிடுங்க என்று சொல்லி, சின்னச் சின்ன கண்ணங்களில் கறி, கோழி, மீன் வைத்து இவை எல்லாம் தனிக்கணக்கு என்று ரூ.150 ஆகியதால், கடைசியில் ஊருக்கு நடந்த வந்த கதை. இப்படி சின்னச் சின்ன நிகழ்வுகளின் தொகுப்பில் நகைச்சுவை ஊருக்கு நடந்த வந்த கதை. இப்படி சின்னச் சின்ன நிகழ்வுகளின் தொகுப்பில் நகைச்சுவை விதைக்கிறார் நூல் ஆசிரியர். ஆனால் இன்றைக்கு அளவு சைவ சாப்பாடே 45 ரூபாய். விலைவாசி விலா எலும்பை முறிக்கும் காலம் இது.
‘கவர்மெண்டு கந்தசாமி”. கந்தசாமி வாயிலிருந்து ஒரு நாளைக்கு நூறு முறையாவது கவர்மெண்ட் என்கிற வார்த்தை வெளியே வந்து விடும். இன்றைக்கு தமிங்கிலம் நகரத்தை மட்டுமல்ல கிராமங்களையும் பிடித்து ஆட்டுகின்றது என்பதை அழகாகப் பதிவு செய்துள்ளார். இவரை வில்லங்கம் கந்தசாமி, சுருட்டல் கந்தசாமி என்றெல்லாம் அழைப்பது அவருக்குத் தெரியும். ஏனென்றால். ஏப்ப சாப்பையானவர்கள் பெயரில் நிலமிருந்தால் தனது பெயரில் அதை மாற்றிச் சுருட்டிக் கொள்வதிலும் யாராவது தன்னை எதிர்ப்பதாகத் தெரிந்தால் போலீசில் சொல்லி வில்லங்கத்தில் மாட்டி விடுவதிலும் அவர் பலே கில்லாடி.
கிராமத்தில் உள்ள பாமரர்களை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் உள்ளது என்ற கருத்தை நகைச்சுவை கலந்து விளக்குகின்றார் நூலாசிரியர். அய்யப்பனுக்கு மாலை போடுகிறேன் என்ற பெயரில் பலர் தாடி வளர்ப்பது, வண்ணத்துண்டு அணிவது என தோற்றம் மாறி காணப்படுவார்கள், ஆனால் சில காவல்துறை காவலர்களும் இந்தக் கோலத்தில் காட்சியறித்து விடுவதை கிண்டல் செய்யும் விதமாக ‘அய்யப்ப போலீஸ்” என்ற கட்டுரை உள்ளது. நமது அய்யப்ப போலீஸ் பனிரெண்டு மாதமுமே அய்யப்பன் கெட்டப்பில் தான் இருப்பார். டூட்டியின் போது காக்கி உடை போட்டிருந்தாலும், வீபதி, சந்தனம், குங்குமம் வைத்துக் கொள்வதோடு, ஒரு கலர் துண்டும் போட்டிருப்பார். இவர் எப்போது அய்யப்பனாக இருக்கிறார், எப்போது சாதாவாக இருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியாது.
மதசார்பற்ற நாட்டின் காவல்துறைக் காவலர்களுக்கு இதுபோன்ற விதிவிலக்கு வழங்கக் கூடாது. பணியில் இருக்கும் போது இவற்றை அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு சிந்தனைகளை விதைக்கின்றது. பல்பொடி வடுவாயி, எம்.ஜி.ஆர். கிழவி, எலக்சன் ஏகாம்பரம், பொடி பொன்னுசாமி, சிரிப்புக்காட்டி செல்லையா, சிலோன் ஜெயபால், பண்டிதர் பரமசிவம், நூலகர் பூவலிங்கம், உடுக்கு முனி இப்படி பல்வேறு பாத்திரங்களை அவர் கண்டு ரசித்த, கேள்விப்பட்ட நபர்களை மிகச் சிறப்பாக கட்டுரையாக்கி வழங்கி உள்ளார். பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.
கவிஞர் ஸ்ரீ ராசா ஓவியம் பாத்திரங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றது. நூலைப் படித்து முடிந்தவுடன் ஒவ்வொரு பாத்திரமும் நம் மனக்கண் முன் வந்து விடுகின்றனர். அது தான் ஒரு படைப்பாளியின் வெற்றி. கிழவி எம்.ஜி.ஆர் படம் பார்த்தால் அடுத்த படம் வருகிற வரை முதல் படத்தின் கதையையே சொல்லிக் கொண்டிருக்கும், எந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். எந்தக் காட்சியில் எந்த உடை அணிந்திருந்தார், எந்தச் செருப்புப் போட்டிருந்தார் என்ற புள்ளி விபரம் கிழவிக்கு அத்துப்படி, எம்.ஜி.ஆர். படக்கடை வசனத்தை கிழவி. அந்தப்பட இயக்குநரை விட சிறப்பாகச் சொல்லும். எம்.ஜி.ஆர். கண்ணாடி போட்ட கிழவி ஓவியம் மிகச் சிறப்பு.
உண்மைதான், இது போன்ற கிழவிகள் கிராமங்களில் வாழ்கிறார்கள். நானும் பார்த்து இருக்கிறேன், கேட்டும் இருக்கிறேன். எம்.ஜி.ஆரிடம் ஒரு கிழவி, யாரை கூட வைத்தாலும், நம்பியாரை கூட வைக்காதே என்று சொன்ன நிகழ்வு நினைவுக்கு வந்தது. எலக்சன் ஏகாம்பரம், இவர் வாக்களித்தால், வாக்களித்த நபர் தோற்று விடுவார் என்ற மூட நம்பிக்கை, அதன் காரணமாகக இவரிடம் யாரும் வாக்குக் கேட்பதில்லை. இது போன்ற பல மூட நம்பிக்கைகள் கிராமங்களில் இன்றும் உள்ளது. சாப்பாடு இலையில் தண்ணீர் தெளிப்பது தூசி போக, ஆனால் இரவில் இரவில் இலைக்குத் தண்ணீர் தெளிக்கக் கூடாது என்பார்கள். இப்படி மூடநம்பிக்கை உண்டு.
சிரிப்புக்காட்டி செல்லையா, மயான வெட்டியான் அவர் சொல்லும் வசனம், ‘எல்லாப் பயலும் கடைசியா எங்கிட்டாத் தான் வரணும்” இப்படி நூல் முழுவதும் மறக்க முடியாத கதாபாத்திரங்களை நகைச்சுவை கலந்து வழங்கி உள்ளார். பேச்சில் நகைச்சுவை எளிது, எழுத்தில் நகைச்சுவை கடினம், கடினமான பணியை மிக எளிதாகச் செய்து உள்ளார். மனம் இலகுவாக இந்த நூல் உதவும். மனபாரம், கவலை, சோர்வு உள்ளவர்கள் இந்த நூலைப் படித்து நகைச்சுவை உணர்வை, புத்துணர்வைப் பெறலாம். நூலாசிரியர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களுக்குப் பாராட்டுக்கள். கிராமங்களிலும் திமிங்கிலம் தவழ்வது உண்மை தான். ஆனால் படைப்பாளிகள் அவற்றைத் தவிர்த்து எழுத வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
கருத்துகள்
கருத்துரையிடுக