நம்ப முடியாத சம்பவங்கள் , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர்: திரு.சி.நடராசன்
நூல் ஆசிரியர் மதுரை மாலை முரசு நாளிதழில் முரசு மலர் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.பல்வேறு நூல்களைப் படித்து பயனுள்ள பல நூல்களை எழுதி வெளியிட்டு வருபவர்.75 வயதைக் கடந்த இளைஞர்.துடிப்புடன் செயல்பட்டு வரும் சிறந்த எழுத்தாளர்.
அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி பற்றி பல அரிய செய்திகள் அழகு தமிழில் வழங்கி இருக்கும் இந்த நூலில் 27 கட்டுரைகள் உள்ளது. "இரண்டு வயதான நோயாளிக் குழந்தையை இனி பிழைக்காது" என்று பெற்றவர்கள் நினைத்தனர். பனிரெண்டு வயதில் மறுபடியும் மரணப்படுக்கை. பிரபல பிரிட்டிஷ் டாக்டர் கூட ஒராண்டில் இறந்து விடுவார் எனக் கணித்தார். ஆயினுட் உலகப்போரில் வீர சாகசம் புரிந்தார். விருதுகள் அடைந்தார். நாற்பத்தி மூன்றே வயதில் நாட்டின் ஜனாதிபதியானார் ஜான் கென்னடி. இப்படி பல்வேறு தகவல்களின் சுரங்கமாக நூல் உள்ளது. ஓராண்டில் இறப்பார் என கணிக்கப்பட்டவர், அளப்பரிய சாதனை நிகழ்த்தியதை படிக்கும் போது நமக்குள் தன்னம்பிக்கை விதைக்கப்பட்டது. கட்டுரை எல்லோருக்கும் புரியும் வண்ணம் மிக எளிய நடையில் ஜான் கென்னடி அட்டிசன் நோயால் போராடி வாழ்வில் வெற்றி பெற்ற வரலாற்றை சுவைபட வடித்துள்ளார். 1939-ல் ஜான் கென்னடி குடும்பத்துடன் எடுத்த அரிய பல புகைப்படங்கள் நூலில் உள்ளது.
பிடி 109 யுத்தப் படகின் கமாண்டராக ஜான் கென்னடி இருந்தது. 1952-ல் ஜான் கென்னடி சென்ட்டராகப் பதவியேற்ற புகைப்படம், கென்னடி மனைவி ஜேக்குலின் புகைப்படம், வாக்கு கேட்ட புகைப்படம் என பல்வேறு ஆதாரங்களுடன் நூல் உள்ளது. ஜான் கென்னடி முச்சந்தியில் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து குருச்சேவ் கதறி அழுதார் என்ற செய்தி வரை பதிவாகி உள்ளது.ஜான் கென்னடியை கொலை செய்தவன் பெயர் ஆஸ்வால்டு இவன் யார்? எதற்காக சுட்டுக் கொன்றான்.?கொலை செய்யுமாறு தூண்டியது யார்?ஆஸ்வால்டைச் சுட்டுக் கொள்ள ஜேக் ரூபியைப் போலீசார் அனுமதித்தது ஏன்?ஜேக் ரூபிக்கு சிறையில் திடிரெனப் பைத்தியம் பிடிக்கக் காரணம் என்ன?அவன் தற்கொலை செய்து கொண்டது உண்மையா?அல்லது ஜோடைனையா?என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை என்பதையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார். புரியாத புதிராக இன்றும் உள்ளது.
மார்டின் லூதர் கிங் நிகழ்வும் நூலில் உள்ளது.பொது மேடையில் பேசிய போது அவர் மீது செருப்பு ஒன்று வீசப்பட்டது.அவர் கோபப்படாமல் எனக்குக் காலணி தேவை எனக் கருதி யாரோ இரக்கமுள்ள ஒரு புண்ணியவான் இதை எறிந்திருக்கிறார்.அவருக்கு நன்றி,தயவுசெய்து இன்னொரு செருப்பையும் இப்போதே எறிந்து விடுங்கள் என்றார்.அங்கு கூடியிருந்த நீக்ரோக்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.இப்படி பல நிகழ்வுகள் நூலில் உள்ளது.இந்த நிகழ்வு உலகப் பொதுமறையாம் திருக்குறள்,"இன்னா செய்தாரை"என் நினைவிற்கு வந்தது.
இது போன்ற அனுபவம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்கும் நிகழ்ந்ததை நாம் அறிவோம்.ஆங்கில நூல்கள் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு,ஆங்கிலம் அறியாதவர்களுக்கு பயன் தரும் சிறந்த நூல்.புள்ளி விபரங்களுடன் மேல்நாட்டு மேதைகள் பலரின் வரலாற்றை சிறப்பாக எழுதி உள்ளார் நூல் ஆசிரியர்.பல நூல்கள் படித்த மன நிறைவைத் தருகின்றது.
பிரான்ஸ் நாட்டின் சர்வாதிகாரி சார்லஸ் டிகாலே காரில் சென்ற போது அவரை வழிமறித்துத் துப்பாக்கியால் சுட்டனர்.எனினும் காயமின்றி உயிர் தப்பிய டிகாலே,"குறி பார்த்து சுடத் தெரியாத வெட்டிப்பயல்கள்�என்று அவர்களை ஏசினார்.
இப்படி எள்ளல் சுவையுடன் பல நிகழ்வுகள் நூலில் உள்ளது.இசைமேதை பீதோவின் வரலாறு உள்ளது.காலடியில் கண்ட பாம்பை தடியால் அடிக்கவோ, கல் வீசிக் தாக்கவோ முயற்சிக்கவில்லை என்றதும் பாம்பு கொத்தாமல் விரைந்து ஊர்ந்து சென்றது என்ற சொந்த நிகழ்வையும் கட்டுரையாக வடித்து உள்ளார். பொதுவாக பாம்பை நாம் மிதிக்கவில்லை என்றால், அடிக்கவில்லை என்றால் கொத்துவது இல்லை. கொடிய பாம்பு தொல்லை தந்தால் தான் கொத்தும். எல்லா பாம்பிற்கும் விஷம் இருப்பதில்லை. சில பாம்புகள் கடித்தால் தான் மரணம் வரும். பாம்பு கடித்து விட்டது என்ற மனபயத்திலேயே பலர் இறக்கின்றனர்.
பாம்புகளின் தன்மையை ஆய்வு செய்து பல கட்டுரைகள் எழுதி உள்ளார். விரியன் பாம்பு தரையில் எப்போதும் மெதுவாக ஊர்ந்து செல்லுமெ தவிர, வேகமாக ஒடாது. தெரியாத்தனமாக கவனக்குறைவாக அதை நாம் மிதித்தால், சீற்றமடைந்து கடிக்கும். இப்படி பாம்பு பற்றி பல உண்மைகள் உள்ளது. பாம்பை நாம் அடித்துக் கொன்றால் அதன் ஜோடி நம்மைப் பழிவாங்கும் என்பது சுத்தக் கற்பனை, மூட நம்பிக்கை என்பதை பதிவு செய்துள்ளார். இந்த மூடநம்பிக்கையை வைத்து நீயா? என்ற ஒரு திரைப்படம் எடுத்து காசு சேர்த்தனர் என்பதும் நாம் அறிந்த ஒன்று.
இந்திய நாட்டில் ஓராண்டில் பாம்பு கடிபட்டவர்கள் மாநிலம் வாரியாக புள்ளிவிபரம் நூலில் உள்ளது.படித்து விட்டு வியந்து போனேன். இவரால் எப்படி இவ்வளவு தகவல்களை சேகரிக்க முடிகின்றது. படித்துக் கொண்டே இருப்பார்,இதுவரை எத்தனை நூல்கள் படித்து இருப்பார் என்றும் கணிக்க முடியாது. பல ஆங்கில நூல்களும் படித்து அதில் உள்ள பயனுள்ள முக்கிய நிகழ்வுகளை மொழிபெயர்த்து அழகு தமிழில் நூலாக்கி வருகிறார். மகாகவி பாரதியின் கூற்றுப்படி பிறமொழி இலக்கியங்களை தமிழில் வழங்கி வரும் எழுத்தாளர் சி.நடராசன் பாராட்டுக்கு உரியவர். சளைக்காமல் தொடர்ந்து நூல் எழுதி வெளியிட்டு வருபவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக