கைக்குட்டைக்குள் தொலைந்த வானம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

  • q.jpg





கைக்குட்டைக்குள் தொலைந்த வானம் நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


நூல் ஆசிரியர் : கவிஞர் துளிர்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

நூலின் தலைப்பைப் போலவே அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது. இந்நூல் தாய்க்கும், தமிழுக்கும் என்று காணிக்கையாக்கி, தாய்ப்பற்றையும், தமிழ்ப்பற்றையும் பறைசாற்றியுள்ளார் நூலாசிரியர் கவிஞர் துளிர். மாற்றுத் திறன் உடைய சகோதரர் கவிஞர் துளிர், கவிஞர் மட்டுமல்ல, சிறந்த பேச்சாளர் என்பதையும் பதிவு செய்தார். தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தில் செந்தமிழ்க் கல்லூரி முதல்வர் பட்டிமன்ற நடுவர் க.சின்னப்பா அவர்களின் அணிந்துரை முத்திரை பதிக்கின்றது. திரைப்படப் பாடலாசிரியர் விவேகா, புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் மா.ஜெயராஜ் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது.

நூலின் தலைப்பிற்கான கவிதை இதோ!

கடித்த கடலை மிட்டாயிலும்
மடித்த கைக் குட்டையாலும்
ஒவ்வொரு
அம்மாவின் கைக் குட்டையாலும்
அந்த அழகான வானம் திருடப்பட்டிருக்கிறது.

இருட்டு இதிகாசம்

உறக்கத்தில் எழு! ஏழுதுகோலால் உழு!
கவிதையைத் துடைத்து காகிதத்தில் படை

இப்படி இவர் இளமைக் காலத்தில், காகிதத்தில் படைத்த படைப்புகளை நூலாக்கி உள்ளார்.ஹைக்கூ கவிதைகளும் நூலில் உள்ளது கூடுதல் சிறப்பு.

மாநாடு

வறுமை ஒழிப்பு மாநாடு
அறிவிப்புப் பலகையில்
பிச்சைக்காரர்கள் நுழையத் தடை

இனிப்பு

அன்னையர் தின விழாவில்
அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறது
அனாதை இல்லத்திலுள்ள குழந்தை

இந்த ஹைக்கூ படித்தவுடன் சிந்தையில் சிறு மின்னல் வருகின்றது. அது தான் படைப்பாளியின் வெற்றி.

ஆசை

கரைந்து போகும் கிராமத்துப் பண்பாட்டை
கருவறையில் சேமிக்க ஆசை
தொலைந்து போன தொன்மைக் கலைகளை
தோண்டியெடுக்க ஆசை

உலகமயம் தாராளமயத்தால் தமிழன் இழந்து வரும் அடையாளத்தை பதிவு செய்கின்றார்.

வெற்றுத் தாளாய் இரு

வெற்றுத் தாளாய் இரு மனிதா
அங்கு தான் நீ நிரப்பப்படுகிறாய்

உண்மையிலும் உண்மை வைர வரிகள். எல்லாம் தெரிந்தவன் என்று ஏற்கெனவே எழுதப்பட்ட தாளாக இருந்தால் பதிதாக எழுதிட இடம் கிடைப்பதில்லை. மிகப் பெரிய கருத்தை மிக எளிதாக விளக்கி உள்ளார்.

நூலில் சிந்தனை விதைக்கும் கவிதைகள் உள்ளது, காதல் கவிதைகளும் உள்ளது. ஹைக்கூ விற்கு தலைப்பு போடாமல் 3-வது வரியில் தலைப்புக் கொண்டு வந்தால் ஹைக்கூ சிறக்கும். கவிஞர் துளிர் எதிர்காலத்தில் ஹைக்கூவை நன்கு உள் வாங்கிக் கொண்டு இன்னும் சிறப்பாக படைக்க வேண்டும் என்பது என் ஆசை. துளிர்க்கும் கவிஞரின் கன்னி முயற்சி முதல் படைப்பு. பாராட்டுக்குரிய படைப்பு. தொடர்ந்து பல நூல்களை படைக்க வேண்டும். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், முழு மனிதன் என்பதற்கு கூறும் இலக்கணத்திற்கு ஏற்ப கவிஞர் துளிர் நூல் எழுதி வெளியிட்டமைக்குப் பாராட்டுக்கள்.

நிறைய கவிதைகள் எழுதி வைத்துக் கொண்டு, நூலாக்கத் தயங்கும் கவிஞர்கள் ஏராளம். ஆனால் கவிஞர் துளிர் உடன் நூலாக்கிய துணிவிற்குப் பாராட்டுக்கள். நிறைய வாசியுங்கள். குறைவாக எழுதுங்கள்.

இன்னும் பல கவிதை நூல்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றது இலக்கிய உலகம் தொடர்ந்து படைத்து முத்திரை பதிக்க வாழ்த்துக்கள். உலக அளவில் மாற்றுத் திறன் உடையவர்கள் வியக்கத்தக்க வகையில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞர் துளிர். கவிதை நூல் வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.

கருத்துகள்