நகைச்சுவை நாயகர்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா.மோகன்
தாமரை பதிப்பகத்தின் தரமான பதிப்பாக வந்துள்ளது. அட்டைப்படமே அற்புதம். பதிப்புரை நூலின் சிறப்பை பறைசாற்றும் விதமாக உள்ளது. சிறந்த சிந்னையாளரும், எழுத்தாளருமான திரு.வெ.இறையன்பு அவர்களின் முத்தாய்ப்பான அணிந்துரை நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றது. நூல் ஆசிரியர் பற்றி அணிந்துரையில் குறிப்பிட்டுள்ள வரிகள் இதோ !
பேராசிரியர் எழுதிய புத்தகங்களை அடுக்கி வைத்தால் அது அவரது உயரத்தை அநேகமாக இந்நேரம் தாண்டியிருக்கும் என்று கருதுகிறேன். தொடர்ந்து இயங்கும் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
உண்மை தான்,75 நூல்களை எழுதிக் குவித்த எழுத்துக் கரங்களுக்கு, சொந்தக்காரரான நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா.மோகன் உடல் உயரத்தால் சற்று குள்ளமாக இருந்தாலும,; உள்ளத்தால் இமயத்தை விட உயர்ந்தவர் நகைச்சுவை நூல் என்பதால் அணிந்துரையிலேயே மெல்லிய நகைச்சுவை முத்திரை பதித்து உள்ளார்.
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ இரா.மோகன் அவர்களை நடமாடும் தமிழ்ப்பல்கலைக்கழகம் என்றே சொல்லலாம். எத்தனை நூல் படித்து இருப்பார் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது.ஆனால் சங்கத்தமிழ் முதல் இன்றைய நிகழ்வு வரை அனைத்தும் அறிந்தவர் ஒப்பிலக்கியத் துறைத் தலைவர் என்பதால் இலக்கிய விருந்து படைத்துள்ளார். ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியார் தொடங்கி கணினி யுகத்திற்கு அருணகிரிநாதர் அவரை 30 தலைப்புகளில் மிக மென்மையான, மறக்க முடியாத, நடந்த நகைச்சுவைகளைத் தொகுத்து தோரணமாக வழங்கி உள்ளார்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, நகைச்சுவையை மட்டும் கூறாமல், திரு.டி.கே.சி. பிறந்த நாள் ஆகஸ்டு 18ஆண்டு 1881 வாழ்ந்த காலம் 71 ஆண்டுகள் 6 மாதங்கள்.இப்படி புள்ளி விபரங்களுடன் நூல் நம்மை வியப்பில் ஆழ்த்துக்கின்றது.
“ஒரு முறை புது டில்லிக்கு திரு.டி.கே.சி. சென்ற போது, பிரதமர் நேரு தம்முடைய வீட்டிற்கு விருந்தினராக வரும்படி அழைத்தார். டி.கே.சி. நேருவின் வீட்டிற்கு ஓட்ஸ் சாதம் வாங்கிக் கொண்டு போனார்.அதைப் பார்த்த நேரு, ஓ நீங்கள் மிகவும் ஆசாரம் போலிருக்கிறேதே? என்று வியந்து கேட்டார்.
இல்லை நான் ஆசாரமே இல்லை, எனக்கு எல்லா வகையான ஆகாரங்களும் சாப்பிட வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் என் வயிறு இருக்கிறதே, அது தான் ஆசாரம் என்றாராம். டி.கே.சி. தம்முடைய சர்க்கரை நோயைப் பற்றி இங்ஙனம் நகைச்சுவையுடன் வெளியிட்ட பாங்கினை நேருவும் மற்ற விருந்தினர்களும் மிகவும் அனுபவித்துச் சிரித்தார்களாம். இப்படி நூல் முழுவதும் தரமான நகைச்சுவைகள் ஏராளம், தாராளம். சங்க இலக்கியங்களை மிக எளிமையாக்கி வழங்கி உள்ளார் நூலாசிரியர்.
இளமை குன்றாமல் இருப்பதற்குப் பிசிராந்தையார் காட்டும் வழிமுறை.
“நான் முறையான இல்வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன். என் மனைவி குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற மாட்சிமை மிக்க குணங்கள் பொருந்தியவர். அறிவும் கொண்டவர். என் மக்களும் அறிவு நிரம்பியவர்கள்.
;என் பணியளார்கள் இளைஞர்கள், நான் நினைப்பதைத் தாம் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். என் நாட்டு வேந்தனும் முறையில்லாத செயலை ஒரு போதும் செய்ய மாட்டான். அது மட்டுமின்றி, குடிமக்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து அவர்களைப் பாதுகாப்பான். இவை மட்டும் அல்லாமல், யான் குடியிருந்து வருகின்ற ஊரில் கொள்கை பிடிப்பு கொண்ட சான்றோர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அறிவு நிரம்பி புலன்கள் அவிந்து, அருளில் படிகின்ற உயரிய வாழ்க்கை முறையை உடையவர்கள். இவையே நான் நரைதிரை இல்லாமல் இளமையோடு இருப்பதற்கான காரணங்கள்” ஆகும். யாண்டு பல வாக நரைஇல ஆகுதல்
யாங்கா கியர் ? என வினவுதிர் ஆயின்
என்ற புகழ்பெற்ற பாடலுக்கு மிகச்சிறந்த விளக்கவுரை இந்த நூலில் உள்ளது, ரசிக்கும்படி உள்ளது. இளமை குன்றாமல் இருப்பதற்கு நான் மட்டும் அல்ல சுற்றியுள்ளவர்களும் பொறுப்பு என்பதை விளக்கும் பாடல். இது போன்ற பல்வேறு இலக்கியச்சுவை நூல் முழுவதும் நிரம்பி வழிகின்றது.
கணினி யுகத்திற்கு அருணகிரிநாதர் கட்டுரையில், கோபத்தை தவிர்க்க வேண்டிய அவசியத்தை விளக்கி உள்ளார். அருணகிரிநாதர் பாடலான, “விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள்” -சிறந்த விளக்கம் எழுதி உள்ளார்.
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற மொழிக்கு ஏற்ப நூலாசிரியர் தான் கற்று அறிந்த தரமான நகைச்சுவைகளைத் தொகுத்து வழங்கி உள்ளார்.
மகாகவி பாரதியார், ஞானரதத்தில் படித்துக் காட்டி இருக்கும் பொய்த் தலைவலி மறக்க முடியாத நகைச்சுவை. கல்கியின் பொன்னியின் செல்வம் அய்ந்தாம் பாகம் நகைச்சுவை. சிறுகதைத் தந்தை புதமைப்பித்தன் நகைச்சுவை, வாரியார் சுவாமிகள், அறிஞர் அண்ணா, கவியரசு கண்ணதாசன் – இப்படி பலரது வாழ்வில் நடந்த நகைச்சுவை, அவர்களது படை;பில் உள்ள நகைச்சுவை என ஆய்வுக் கட்டுரையை சுவையான கட்டுரையாக வழங்கி உள்ளார்கள்.
நூலாசிரியரின் கட்டுரைகளை புதகைத் தென்றல், இல்லம் சங்கீதம், மனித நேயம், தமிழ் மாருதம் போன்ற இதழ்களில் மாதாமாதம் படித்து இருந்த போதிலும், ஒட்டுமொத்த நூலாக படித்ததில் முழு மனநிறைவு, மன மகிழ்ச்சி. கவலை, சோகம் உள்ளவர்கள் இந்த நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள், கவலை, சோகம் அதனால் எற்படும் சோம்பல் இரண்டும் காணாமல் போகும். வுhழக்;கை என்பது வாழ்வதற்கே, முன்னோர்களின் இயல்பான நகைச்சுவைகளைப் படிக்கும் போது நாமும் வாழ்வை எளிதாக வாழ்வோம். சினம் அழிப்போம், முகத்திலும், அகத்திலும் புன்னகை புரிவோம் என படிப்பிக்கும் நூல்.
கருத்துகள்
கருத்துரையிடுக