திருக்குறள் அறத்துப்பால் வெண்பா பாங்கில் கவிதை விளக்கம் , நூல் விமர்சனம்: கவிஞர் இரா.ரவி
நூல் ஆசிரியர்:கவிஞர் மதுரை பாபாராஜ்
ஆப்பிள் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த நூலின் அட்டைப்படத்தை கம்பீரமாக அலங்கரிக்கின்றார் திருவள்ளுவர்.திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி இல்லை,திருக்குறளை மொழி பெயர்க்காத மொழி மொழியே இல்லை. உலக பொது மொழிகள் அனைத்திலும் பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். உலகப் பொதுமறையாம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மைய அரசுக்கு இன்னும் மனம் வரவில்லை என்பது வேதனை.
திருக்குறளுக்கு பரிமேலழகர் தொடங்கி,பல்வேறு அறிஞர்கள் உரை எழுதி இருக்கிறார்கள்.ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு சுவையாக இருக்கும். படிக்கப் படிக்க திகட்டாத ஒப்பில்லா இலக்கியம் திருக்குறள்.ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருக்கும் மதுரை கவிஞர் பாபராஜ் மிகச்சிறந்த மரபுக் கவிஞர்.கவிதைகளுக்காக பல்வேறு பரிசும்,பாராட்டும்,விருதும் பெற்றவர்.வித்தியாசமாக சிந்திப்பவர்.எல்லோரையும் போல் உரை எழுதினால் பத்தோடு ஒன்று,பதினொன்றாகப் போய் விடும் என்று கருதி,திருக்குறளை புதுமையாக வெண்பா பாங்கில் தந்து தனித்த முத்திரை பதித்துள்ளார்.
திருவள்ளுவர் ஒன்றே முக்கால் அடிகளில் வழங்கிய அறத்துப்பால் நான்கு வரிகளில் நச்சென்று எழுதி உள்ளார்.நூலிற்கான அணிந்துரையிலேயே நகைச்சுவை முத்திரை பதிக்கிறார் மறைந்த மாமேதை தென்கச்சி கோ.சுவாமிநாதன்.
என்க்கெல்லாம் அறுபது வயது ஆனவுடன் இனிமேல் சும்மா இருக்கலாம் என்றுதான் தோன்றியது என்னுடைய நண்பர் மதுரை பாபாராஜ் அவர்களுக்கோ அறுபது வயது ஆனவுடன் இனிமேல் சும்மா இருக்கக்கூடாது என்று தோன்றியிருக்கிறது.
ஆறுபதிலும் ஆசை வரும்,கவிஞர் பாபாராஜ் அவர்களுக்கு,திருக்குறளை வெண்பா வடிவில் வடிக்க ஆசைப்பட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார். எல்லோருக்கும் வாய்ப்பதில்லை இந்தத் திறமை,மரபுக் கவிஞர் என்பதால் மொழிப் புலமை இருந்ததால் திருக்குறள் உரைகள் பலவற்றை ஊன்றி படித்து உள் வாங்கிய காரணத்தால் வடிக்க முடிந்தது. நூலைப் படிக்கும் போது நூலாசிரியரின் உழைப்பை உணர முடிகின்றது.சிற்ப்பியின் நுட்பத்துடன்,கல்லில் தேவையற்ற பகுதி நீக்கும் போது சிற்பமாகின்றது.வெண்பாவில் தேவையற்ற சொல் எதுவுமின்றி சொற் சிக்கனத்துடன் வெண்பா விருந்து வைத்துள்ளார்.
வெண்பா எழுத வராது என்று சொல்லும் புதுக்கவிஞர்கள் கூட இந்நூலை படித்து முடித்தால்,வெண்பா எழுதிட கற்றுக் கொள்வார்கள்.வெண்பா பற்றி புரிதலையும் திருக்குறளின் கருத்து ஆழத்தையும் உணர்த்திடும் நூல்.திருக்குறள் புரியவில்லை,சொற்கள் கடினமாக உள்ளது என்று சொல்லும் இன்றைய இளைய தலைமுறையினர் அவசியம் இந்த நூலைப் படிக்க வேண்டும்.படித்தால் திருக்குறள் எளிதில்; நன்கு விளங்கும்.
இந்நூலில் 380 திருக்குறளுக்கு வெண்பா வடிவில் வடித்துள்ளார்.பதச்சோறாக சில மட்டும் தங்கள் பார்வைக்கு இதோ!
34.மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகல நீர பிற
மனத்திலேயே மாசற்று வாழ்தல் அறமாம்!
மனத்தூய்மை இன்றி நடித்துத் - தினந்தினம்
நற்செயல்கள் செய்தால் அவைகள் பகட்டென்னும்
அற்பத்தின் ஊடகந்தான் சாற்று.
திருவள்ளுவரின் அறத்துப்பால் முழமையும் பறைசாற்றும் விதமாக இந்த ஒரு திருக்குறள் வெண்பாவே போதும்.
45.அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
உள்ளத்தில் ஊறுகின்ற உண்மையான உள்ளன்பே
இல்லறத்தின் மேன்மையான பண்பாகும்-இல்லறத்தில்
முற்றிக் கதிராடும் நற்பயனே நல்லறமாம்!
பற்றிப் படர்ந்தால் நலம்.
திருவள்ளுவர் திருக்குறளை எழுதும் போது கூட இவ்வளவு பொருள் உள்ளதா என அறிந்து இருக்க மாட்டார்.திருவள்ளுவர் எண்ணியதை விட கூடுதலாக பொருள்படும் விதத்தில் விளக்கமாக,அதே நேரத்தில் வேற்று மொழிச் சொற்கள் எதுவுமின்றி எளிய தமிழ்மொழிச் சொற்களை மட்டுமே பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர்.
34.கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும தொழும்
எந்த உயிரையும் இவ்வுலகில் கொல்லாமல்
இங்கே இறைச்சியைப் பாவமென-தின்ன
மறுத்தேதான் வாழ்பவனை மற்ற உயிர் எல்லாம்
நிறைந்து வணங்கும் நினைந்து
இந்தத் திருக்குறளை குறித்து வெண்பா படித்து முடிந்ததும் என்னுள் தோன்றியது.திருவள்ளுவர் விலங்காபி மானத்தோடு வடித்தார்.மனிதாபிமானமின்றி தமிழ் இனத்தை பூண்டோடு அழித்த கொடியவன் இராஜபக்சே-வை இந்த உலகமே பழிக்கும்.மொத்தத்தில் உலகப் பொதுமறை திருக்குறள் தமிழில் உள்ளதற்காக உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ள வேண்டும்,நான் பிறந்த மண்ணில் பிறந்த மதுரையில் பிறந்த பாபாராஜ் திருக்குறள் வெண்பா வடித்ததற்காக மதுரை பெருமை கொள்கின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக