கைக்குட்டைக் காகிதங்கள், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129f0a2315565756&attid=0.1&disp=inline&realattid=f_gbuy2div0&zw

கைக்குட்டைக் காகிதங்கள், நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி


நூல் ஆசிரியர் : கவிஞர் வாலிதாசன்


மூன்று தலைமுறைக் கவிஞர் கவியரசு கவிஞர் வாலிக்கு தாசனாக நூல் ஆசிரியர் கவிஞர் வாலிதாசன் என்ற புனைப்பெயர் சூடி எழுதியுள்ள ஹைக்கூ கவிதைகளை பரப்பி வரும் தேனீ நூலாசிரியர். துடிப்பு மிக்க இளைஞர், முகவைக்கு பெருமை சேர்க்கும் முத்தாய்ப்பான கவிஞர் வாலிதாசன்.

நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. கைக்குட்டைக் காகிதங்கள் துடைத்து விட்டு குப்பையில் போடப்படும். ஆனால் இவரது ஹைக்கூ கவிதைகள் படிக்கும் போதே பதிவாகி விடுகின்றது. கல்வெட்டு ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. கைக்குட்டைக் காகிதங்கள் முகம், கரம் இவற்றின் அழுக்கினை அகற்றும். இந்நூல் மன அழுக்கினை அகற்றும் விவசாயமும், விவசாயியும் மதிக்கப்படவில்லை என்ற விரக்தியில், விவசாயிகள் விளை நிலங்களை எல்லாம் விற்பனை செய்து விட்டு விவசாயத்திலிருந்து விடுபடும் நிலை நாட்டில் பெருமளவில் நடைபெற்று வருகின்றது. அதனை உணர்த்தும் ஹைக்கூ.

துளிர்கிறது உழும் மாடு
புஞ்சை நடுவில்
வரப்பில் நில வியாபாரம்

பெற்ற தாயின் நலன் பேணாமல் ஆன்மீகவாதிகளாக நடித்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் கன்னத்தில் அறையும் ஹைக்கூ இதோ!

பூஜையறை எங்கும் விரதப்படையல்
வயிற்றுப் பசியுடன்
வயதான தாய்

நிலாவைப் படாதே கவிஞன் இல்லை. நிலாவைப் பாடாதவன் கவிஞனே இல்லை. கவிஞர் வாலிதாசனும் நிலாவைப் பாடியுள்ளார். அவரது பார்வையில் நிலா,

இரவு வேவு பார்க்க வரும்
வெள்ளைக்காரி
நிலா

இந்த உலகில் அநாதையாக இருப்பது மிகவும் கொடுமையானது. வலி மிக்கது. இதன் வலி உணர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களைப் பற்றியும் பாடி உள்ளார்.

இறந்தது அனாதை
கூட்டமாய் கூடின
ஈக்கள்

குடி குடியைக் கெடுக்கும் என்று படித்து விட்டு குடிக்கும் குடிமகன் பற்றிய ஹைக்கூ

தமிழனின் தடுமாறலில் தான்
நடக்கிறது
மதுபானம் விற்கும் அரசு

அன்பை போதிக்க தோன்றியதாகச் சொல்லிய மதங்கள் இன்று வம்பை வளர்க்கின்றன என்பதை உணர்த்தும் ஹைக்கூ.

மதங்களின் போட்டியில்
வெட்டிக் கொள்கின்றன
மனித நேயங்கள்

இந்தியா வல்லரசாகின்றது. ஏவுகணைகள் ஏவுகின்றோம் என்று ஒருபுறம் மார் தட்டினாலும் மறுபுறம் வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை என்ற உண்மையை உணர்த்திடும் ஹைக்கூ.

நிரம்பி வழிகிறது
நகர வீதி எங்கும்
பிச்சைக்காரர்களின் குரல்

இன்றைய அரசியல்வாதிகள் பணத்தாசை பிடித்து அலைகிறார்கள். கோடிக்கு மேல் கோடி குவிக்கிறார்கள். அவர்களுக்கு குடிமக்களை விட கோடிகளே பெரிது.அன்று நல்லவர்கள் அரசியலுக்கு வந்தனர். இன்று நல்லவர்கள் அரசியலிருந்து ஒதுங்கி விட்டனர்.

எங்கும் தேவை
காசுப் பைத்தியங்களை விரட்டியடிக்க
காமராசர்,கக்கன்

இப்படி நூல் முழுவதும் சமுதாய விழிப்புணர்வு விதைக்கும் வண்ணம், சிந்தனை மின்னல் வெட்டும் வண்ணம் உள்ள ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு இந்நூல். படிக்க சுவையாக உள்ளது. இருபொருள் தரும் ஹைக்கூ. பறக்கும் பட்டங்கள் வந்து சிக்கிய மரத்தையும் குறிக்கும் பட்டம் பெற்று வேலையின்றி வாடும் இளைஞனையும் குறிக்கும் ஹைக்கூ.

தெருவில் தான் நிற்கிறது
பட்டங்கள் வாங்கிய
பல மரங்கள்

ஒரு வேளை உணவு கூட இன்றி வாடும் ஏழைகள் கோடிக்கணக்கில் உள்ளனர் என்பதை உணர்த்தும் ஹைக்கூ

அடிக்கடி நடக்கிறது
உண்ணாவிரதம்
ஏழைக்குடிசைகளில்

இப்படி நல்ல பல ஹைக்கூ கவிதைகள் நூலில் உள்ளது. வாசித்துப் பார்த்தால் நான் கூறியது உண்மை என்பதை உணருவீர்கள். அருமைத்தம்பி கவிஞர் வாலிதாசன் அவர்களிடம் சிறிய வேண்டுகோள் எழுதிய அனைத்தையும் நூலாக வெளியிடாமல் நீங்களே தேர்வு செய்து வெளியிட்டால் இன்னும் இனிமையாக இருக்கும். எண்ணிக்கையை விட தரம் முக்கியம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

கருத்துகள்

கருத்துரையிடுக