ஜப்பானிய ஹைக்கூ 400 நால்வர் நானூறு

https://mail.google.com/mail/?ui=2&ik=b81c859f46&view=att&th=129eef8b64bcb94c&attid=0.1&disp=inline&realattid=f_gbuhg4xl0&zw

ஜப்பானிய ஹைக்கூ 400 நால்வர் நானூறு

நூல் ஆசிரியர் : கவிஞர் அமரன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.ரவி

நூலின் அட்டைப்படமே முழு நிலவு நாளில் மரத்தடியில் புத்தன் அமர்ந்திருப்பதைப் போன்ற ஓவியம் சிறப்பாக உள்ளது. முனைவர் வி.கணேசன் அணிந்துரை மிகச் சிறப்பாக உள்ளது. ஜப்பான் மொழி தமிழ் மொழியோடு எந்த அளவுக்கு ஒப்புமை கொண்டுள்ளது என்பதைச் சில உதாரணங்களுடன் நன்கு விளக்கி உள்ளார்.


பாஷோ ,பூஸன்,இஸ்ஸா,ஷகி என்ற புகழ்பெற்ற நால்வர்களின் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை நூலாசிரியர் கவிஞர் அமரன் உலகின் முதல்மொழியாம் தமிழிலும், உலகமொழியாம் ஆங்கிலத்திலும் நுட்பமாக மூலம் சிதையாமல் மூலத்தை மிஞ்சும் வகையில் மிகச் சிறப்பாக வழங்கி இருக்கிற தரத்திற்கு பாராட்டுக்கள். கவிஞர் கண்ட காட்சியை வாசகனுக்கும் உணர்த்தி விடுகிறார்.


“ஹைக்கூ ” என்ற சொல் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. காந்தியடிகள் திருக்குறளின் மொழிபெயர்ப்பை படித்துவிட்டு, அதன் மூல மொழியான தமிழிலே படிப்பதற்காக தமிழனாக பிறக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அந்த அளவிற்கு சிறப்பு மிக்கது நமது திருக்குறள். அது போல, இந்த நூலைப் படித்து முடித்ததும் எனக்கு இந்த ஹைக்கூ கவிதைகளை அதன் மூல மொழியான ஜப்பான் மொழியில் படிப்பதற்காக ஜப்பானியராக பிறக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அது தான் அந்த நூலின் வெற்றி.


மகாகவி பாரதியார் குறிப்பிட்டதைப் போல வேற்று மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழுக்குப் பெருமை சேர்த்து உள்ளார் நூல் ஆசிரியர் கவிஞர் அமரன். தமிழ் ஹைக்கூ எழுதும் படைப்பாளி என்பதால் ஹைக்கூ சூத்திரம் அறிந்து சுவைபட மொழியாக்கம் செய்து உள்ளார்.


ஹைக்கூ கவிதை வடிவத்தில் சிறிதாக இருந்தாலும், பொருள் கொள்ளும் போது மட்டுமே கடினத்தை உணர முடியும். உற்று கவனித்தல், தேடுதல், கண்டுபிடித்தல் மற்றும் உருவாக்குதல் இவ்வளவு நுட்பம் ஹைக்கூ படைப்பில் அடங்கி உள்ளது. நால்வரின் 100 ஹைக்கூ நூலில் இடம் பெற்றுள்ளது. எனக்குப் பிடித்த சில ஹைக்கூ மட்டும் உங்கள் பார்வைக்கு.


ஆன்மநேயன் பாஷோ ஹைக்கூ


ஓரு குயிலின்
வளைந்து நெளிந்து தேயுதே
கலைந்தோடும் தண்ணீர்


எழுந்திரு எழுந்திரு நீ
வழித்துணை எனக்கு நீயே
துயில் பட்டாம் பூச்சி


ஓயாத இருமல்
மாயாது மாயாது
பாழான தனிமை


ஆ என் மலைக்குருவி
ஆழம் நீ தான் அதிகரிக்க
மூளும் என் தனிமை


வாரீர் குழந்தைகளே
பார்க்கலாமா வெளியே ஓடி
ஆலங்கட்டி மழை


சிறைப்பிடித்த விரல்களில்
தீபம் ஏற்றியது
மின்மினி


பழைய குளம்
தவளை உட்குதிக்க
கிளக்கெனும் நீர்


பயணத்தே நோயுற
அமர்ந்த கண்கள் கனவுகளில்
உலைந்த ஒரு சிற்றூர்


இந்த ஹைக்கூ கவிதைகள் பற்றி பேராசிரியர் க.வேங்கரமணி திறனாய்வுரையும் நூலில் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.


மாலைப் பூந்தென்றல்
காலில் ஏரி அலை மோத
நில நீர் நாரை


கண்ணுக்குக் குளிர்ச்சி
பெண்ணே நின் வெண்மை விசிறி
கண்ணே என் காதலி


அப்போதே அம்மா
உப்பவைக்க நீ வலையா,ஓ
சப்பமூக்குப் பொம்மை?


இலையுதிர் காலப் புயல்
சுருட்டிப் போக ஏதுவாச்சோ
புரிவலோட்டி நீள்கழி?


இலையுதிர் நாள் மாலை
அலைபாயும் வாழக்கை ஓய்வுத்
தருணங்கள் இனிமை


எத்தனை துயர் தொல்லை
அத்தனையும் மறந்து போச்சே
புத்தம் புத்தாடை


இளைத்து மிகக் களைத்து
வயதாகித் தளர்ந்தவென் பின்னால்
விழுகின்ற மலர்கள்.


ஊதந் தளிர்காற்று
வீடு திரும்பும் ஒரு புரவி
பாதை விழி மருட்சி


அமரன் பெயர்ப்பில் ஓவியக்கவி பூஸன் பற்றி முனைவர் எம்.எஸ்.பிரபாகரன் கருத்து இனிமை,புதுமை..


மனிதநேயன் இஸ்ஸா ஹைக்கூ


அழகுப்பட்டம்
எழுந்து பறக்குது
எளிய குடில்


இலையுதிர் நாட் தென்றல்
சிவப்பு மலர்கள் கண்மலர
மரித்தவர் நினைத்த மலர்


இலையுதிரும் மாலை
எளிதல்ல எளிது,மானுடம்
வழி வந்த பிறப்பு.


இனிக்கு மெனில்
பனித்துளி எனதே
உனதுங் கூடே


எப்படிப் பார்த்தாலும்
எத்துணை பிரிவு சேர்த்தாலும்
தப்பட்டை மூஞ்சி


எறும்புச் சாரை
எதனின் தொடர்ச்சி,கார்
முகிற் குவிப்பு.


ஓரு மனிதன்
ஓரே ஓர் ஈஆ பெண்மை
பேரிய கூடம்


கல்லறைக்குப் பூசை
எல்லோருக்கும் முன்னே கிழட்டு நாய்
சொல்லிச் செலும் பாதை


இஸ்லாவும், அமரனும் என முனைவர் இரா.குபேந்திரன் திறனாய்வுரை நுட்பம்


குட்டிச் சுவரோரம்
ஓட்டி நிற்கும் அசையாது
சுட்டி வயிறுச் சிலந்தி


மூடு பனி யூடு
ஓடு தோணியில் ஒரு பயணி
நீடு நிமிர்ந்த கடல்


கோடாரி பயன்படாது
காடாய் வளர்நத்த மரத்தினிலே
நீடு வாழ் காட்டேரி


ஆங்கே புத்தபிரான்
தூங்கித் தூங்கி வழிகின்றனர்
நீண்ட வசந்தப் பகல்


மாலைப் பூந்தென்றல்
ஆளை மயக்கிடுதே-ஆகா
வாழப் பிறந்தவன் நான்


இலையுதிர் நாள் முடிவு
எழுந்த புகையெங்கொ எழும்
தொலைவானில் மாயம்


எவரும் இலர்
குழந்தை தூங்கும் கொசு
வலையின் மடி


ஒருவர் பின் ஒருவராய்
இளைப்பாற சுமைதாங்கிக் கல்
அலைக்கும் கோடை நிலம்


முனைவர் கோ.சுப்பையாவின் திறனாய்புரை மிக நன்றி


ஜப்பானிய ஹைக்கூவில் மிகப் பிரபலமான புகழ்பெற்ற நால்வரின் தலா 100 ஹைக்கூக்களை அழகு தமிழில், எளிய தமிழில் இனிமையாக வழங்கி உள்ள நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள்.


இந்த ஹைக்கூக்களை படிக்கும் போது அவர்களின் இயற்கை நேசம் மானுடம் புரிகின்றது.தமிழில் ஹைக்கூ கவிதைகள் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மிஞ்சும் வண்ணம் வீச்சு தாக்கம் அதிகம். இருந்த போதும் ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் எழுதிய காலத்தை மனதில் கொண்டு அதன் சிறப்பியல்பை உணர முடிகின்றது.நல்ல முயற்சி.

கருத்துகள்