வசந்தவாசல் கவிதைக் களஞ்சியம் - 2010, நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி

a.jpg
வசந்தவாசல் கவிதைக் களஞ்சியம் - 2010, நூல்விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


தொகுப்பு ஆசிரியர் : கவிஞர் கோவை.கோகுலன்


வெளியீடு : கோவை வசந்தவாசல் கவிமன்றம்

விலை : ரூ.175

கோவையில் உயிர்ப்போடு இயங்கி வரும் வசந்தவாசல் கவிமன்றத்தின் வெளியீடாக கவிதைக்களஞ்சியம் 2010 வெளி வந்துள்ளது. மனித்தேனீ கவியருவி கவிஞர் கோவை கோகுலன் அவர்களின் தொகுப்பாக 464 கவிதைகள் வெளிவந்துள்ளது. அனேகமாக தொகுப்பு நூலில் இதுதான் பெரிய நூலாக இருக்க வேண்டும். அடுத்து இவர்களின் இலக்கு 1000 வெற்றி பெற வாழ்த்துக்கள். நூல் வெளியீட்டு விழாவை மாநாடு போல நடத்திடும் மாண்பாளர்கள்.

தமிழன்னைக்கு அணிகலன் பூட்டும் விதமாக வருடந்தோறும் இதுபோன்ற தொகுப்பு நூலை வெளியிட்டு சாதனை படைத்து வருகிறார்கள். எல்லாம் உண்டு இந்த நூலில் என்று சொல்லுமளவிற்கு மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதை என பலவகை பாக்களின் அணிவகுப்பு.பொறியாளர் முதல் கூலித்தொழிலாளி வரை சகல மாணவர்களும் இந்த தொகுப்பில் பங்குபெற்று இருப்பது சிறப்பு. கவிஞர்களிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் பாலமாக நூல் உள்ளது. கவிஞர்களின் புகைப்படம், முகவரி, கவிதை என மூன்றும் இடம் பெற்றுள்ளது. "கபடத்தன கட்டுமானங்களுக்குள் கட்டுப்படாதவன் கவிஞன் அறிவார்ந்த அவனது அலசல்களிலும் வீரியம் மிக்க விமர்சன வீச்சுக்களிலும் அனலின் ஆடும் ஆடும், புனலின் குளிர்வும் விழும். மழலைத் தனமும் மலிந்து இருக்கும், மாண்பற்ற மனித எழுச்சியும் நிறைந்திருக்கும், அவனுள் எழுகின்ற ஆர்வங்களாலும்,ஆசைகளாலும் ஆராதனைகள் நிறைந்திருக்கலாமே தவிர அச்சமின்மை மிகுந்தே இருக்கும். "அதனால்தான் எப்போதுமே கவிஞன் சாதாரணர்களிலிருந்து வேறுபட்டு நின்று நிலைகின்றான்." என்ற கருத்து தொகுப்பாசிரியர் கூறப்பட்ட கூற்றுப்படி நூல் உள்ளது. புயலும் உள்ளது, மழையும் உள்ளது.இடியும் உள்ளது,மயிலிறகால் வருடுவது போன்ற கவிதைகளும் உள்ளது. சவுக்கடி கவிதைககளும் உள்ளது உள்ளத்தில் உள்ளது கவிதை என்றபடி கவிஞர்களின் உள்ளத்தில் உதித்த உணர்வுகளின் தொகுப்பு இந்நூல் கட்டுப்பாடு அற்ற சுதந்திரப்பறவை கவிஞன் யாருக்கும் எவருக்கும் அஞ்சாத அக்னிக்குஞ்சுகளின் அணிவகுப்பு.

என்னுடைய ஹைக்கூ கவிதைகளும் புதுக்கவிதைகளும் இந்நூலில் இடம்பெற்று இருப்பதை பெருமையாகக் கருதுகின்றேன். மிகப்பெரிய மரபுக்கவி மன்னவர்கள் முதல் முதல் கவிதை எழுதிய மாணவன் வரை அனைவரின் கவிதையும் நூலில் இடம் பெற்றுள்ளது. முத்து முத்தாய்ப்பான கவிதைகள் சிந்திக்க வைக்கின்றன.

வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளுக்கு உடனடியாக நூல் வெளியிடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தன்னுடைய கவிதையை அச்சில் பார்க்க விரும்பும் இளையவர்களை வளர்த்து விடும், கவிஞர்களின் வேடந்தாங்களாக கோவை வசந்தவாசல் கவிமன்றம் உள்ளது. மன்றத்தின் பெயரிலேயே வசந்தம் இருப்பதால் கவிஞர்களுக்கு வசந்தத்தை வாரி வழங்கி வருகின்றது. இளம் படைப்பாளி தன் படைப்பை நூலில் அச்சில் பார்த்துவிட்டால் பரவசம் அடைந்து இன்னும் எழுத வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தரும். அந்த வகையில் இந்த நூல் பலருக்கு ஊக்கம் தந்துள்ளது. பல்சுவை கவிதை நூலாக உள்ளது. பாராட்டுக்குரிய முயற்சி இது.

தொகுப்பு நூல் வெளியிடுவதில் சாதனை படைத்த கோவை வசந்தவாசல் மன்றத்திலிருந்து கவிதை கேட்டு அழைப்பு எப்போது? வரும் என காத்திருக்கும் கவிஞர்களில் நானும் ஒருவன். காரணம் தொகுப்பு நூலிற்காக ரூ.100 நூறு மட்டும் பங்களிப்பாக கவிஞர்களிடமிருந்து பெற்ற புகைப்பட்ம் முகவரி கவிதை மூன்றும் நூலில் இடம் பெறச்செய்து வருடம்தோறும் திட்டமிட்ட தேதியில் தவறாமல் தொகுப்பு நூல் வெளியிடும் மன்றம். இதனை தொழிலாகக் கருதாமல் தொண்டாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர். நினைத்து பாருங்கள் 464 கவிதைகள் நூலில் உள்ளது. ஒரு சிலர் மட்டும் இரண்டு கவிதைகள் எழுதி உள்ளனர்.450 கவிஞர்களை ஒருங்கிணைத்த பெருமை மன்றத்தையே சாரும். மன்ற பொருப்பாளர்களை பாராட்ட வேண்டும். கடின உழைப்பின் சாதனை தொகுப்பு இது. பங்குபெற்ற அனைவருக்கும் நூலும் பாராட்டு சான்றிதழும் வரும் சிறந்த கவிதைக்கு பரிசும் உண்டு. கிரி தொடங்கி கவிஞர் மானூர் புகழேந்தி வரை இடம் பெற்றுள்ள அத்துணை கவிதைகளும் அற்புதம். தொகுப்பு நூல் என்பதால் கவிதையே மேற்கோள் காட்டவில்லை. கவிதை ஆர்வலர்கள் அவசியம் வாங்கிப்படிக்க வேண்டிய அற்புத நூல். நேர்த்தியான அச்சு நல்ல வடிவமைப்பு. சுறுசுறுப்புத் திலகமாக விளங்கும் தொகுப்பு ஆசிரியர் கவிஞர். கோவை கோகுலன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

கருத்துகள்