தமிழ்க்களஞ்சியம் 10000 * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
* நூல் ஆசிரியர் : நகைச்சுவை அருவி விளாங்குடி விநாயகமூர்த்தி
“தமிழ்க் களஞ்சியம்” என்ற பெயருக்கு ஏற்றபடி உண்மையிலேயே தமிழ்க் களஞ்சியமாக உள்ளது. உண்மையிலேயே 10,000 வினா விடைகள் உள்ளது. வரிசையாக சோதனை செய்து பார்த்தேன். என்சைக்ளோபீடியா போல உள்ளது. மாணவர்களுக்கு மட்டமல்ல, தமிழ் ஆர்வலர்களுக்கும் பயனளிக்கும் அற்புத நூல். தமிழின் பெருமையை பறைசாற்றும் விதமாக உள்ளது. படித்து முடித்தவுடன் தமிழனாகப் பிறந்ததற்காக ஒவ்வொரு தமிழனும் பெருமை கொள்ளும் விதமாக உள்ளது.
10,000 கேள்விகளையும், அதற்கான சரியான விடைகளையும், நூல் ஆசிரியர் விளாங்குடி விநாயகமூர்த்தி தொகுத்ததை எண்ணிப் பார்க்கவே வியப்பாக உள்ளது. பட்டிமன்ற நடுவராக, தொலைக்காட்சிகளில்; நகைச்சுவை அருவியாக, பள்ளி ஆசிரியராக, தனி முத்திரை பதித்தவர், நூல் ஆசிரியராகவும் சிறப்பான முத்திரை பதித்து உள்ளார். பாராட்டுக்கள். இந்நூலை படித்த மாணவர்கள் வெல்வது உறுதி.
இதில் உள்ள எத்தனை கேள்விகளுக்கு நமக்கு விடை தெரிகின்றது ? என்று நம்மை நாமே சோதித்துக் கொள்ள உதவுகின்றது. நமக்கு விடை தெரியாத கேள்விகள் பல உள்ளன. இந்த நூலைப் படிக்க உலகின் முதல் மொழியான தமிழ் மொழி பற்றிய அறிவு, விரிவடைகின்றது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் ஒப்பற்ற தமிழ் மொழிக்கு அழிவே இல்லை என்பதை உணர முடிகின்றது.
காக்சிச் சட்டைக்குள் இலக்கிய இதயம், இனிய நண்பர், கவிஞர், காவல் ஆய்வாளர் ஆ. மணிவண்ணன் அவர்களின் அணிந்துரை முத்தாய்ப்பாக உள்ளது. சங்க இலக்கியம் தொடங்கி முக்கிய நாட்கள் வரை தகவல் களஞ்சியமாக உள்ளது. முக்கிய நாட்கள், பாடத் திட்டம், விளக்கம் இவை எல்லாம் 10000-ல் அடங்காமல், கூடுதல் சேர்க்கையாக உள்ளது. இந்த நூலைப் படித்து விட்டு தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களின் மடல்களும் உள்ளது. மதுரையின் பெருமைகளில் ஒன்றாகி விட்டது இந்த நூல்.
கண்ணில் விளக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டு, நூலில் தவறு ஏதும் உள்ளதா? என ஆராய்ந்து பார்த்தேன்? பட்டினத்தார் இயற்பெயர் என்ன? என்ற கேள்வி பதில் மட்டும் கவனக்குறைவாக மூன்று முறை வந்துள்ளது. வேதநாயகம் பிள்ளை பற்றி பல அரிய தகவல்கள், தமிழறிஞர்கள் பற்றி, தமிழ் இலக்கியங்கள் குறித்து, தமிழ் மொழியின் தொன்மை குறித்து, எண்ணிலடங்கா தகவல்களின் சுரங்கமாக நூல் உள்ளது. தமிழாசிரியர்கள் அனைவரும் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். இதைப் படித்தால் தான் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க எளிதாக இருக்கும். தமிழர்களின் இல்லங்களில் அவசியம் இருக்க வேண்டிய ஆவணம் இந்த நூல்.
தமிழறிஞர் ஆ. கார்மேகக் கோனார் இயற்றிய நூல்கள் யாவை?
காப்பியக் கதைகள், நல்லிசைப் புலவர்கள், ஆபுத்திரன் வரலாறு
தமிழில் தோன்றிய முதல் சிறுகதை எது?
குளத்தங்கரை அரசமரம்
விடியுமா? என்ற சிறந்த சிறுகதையை எழுதியவர் யார்?
கு.ப. இராஜகோபாலன்
தமிழ் பல்கலைக்கழகத்தின் அய்ந்து புலங்கள் யாவை?
1.அறிவியல் புலம் 2. வளர்தமிழ்ப் புலம் 3. கலைப் புலம்,4. இலக்கியப் புலம் 5. சுவடிப் புலம்
கல்கி எழுதிய முதல் நாவல் எது?
விமலா
தமிழ்நாட்டில் முதன் முதலில் அச்சு இயந்திரம் மூலம் அச்சிட்ட இடம் எது?
தரங்கம்பாடி
தமிழின் முதல் நாளிதல் எது?
சுதேசமித்திரன்
முல்லை பாட்டின் ஆசிரியர் யார்?
நம்பூதனார்
நிலையாமை பற்றி கூறும் திணை எது?
காஞ்சி
தமிழின் மிகப் பழமையான இலக்கண நூல் யாது?
அகத்தியம்
மலையாள எழுத்துக்கள் எதை ஒட்டி அமைக்கப்பட்டவை?
தமிழ் கிரந்த எழுத்துக்களை ஒட்டி
முக்கிய நாட்கள்
தேசிய தூய்மை தினம் எது?
ஜனவரி 30
உலக நீர் தினம் எது?
மார்ச்22
உலக வன நாள் எது?
மார்ச்21
உலக புகையில்லா நாள் எது?
மே31
உலக சுற்றுச்சூழல் தினம் எது?
ஜூன்5
பெண்கள் சமத்துவ நாள் எது?
ஆகஸ்ட் 26
கருத்துகள்
கருத்துரையிடுக