மாண்புமிகு மனைவி' நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, பிரிவு அலுவலர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
மாண்புமிகு மனைவி'
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
மதிப்புரை : ப.மகேஸ்வரி, பிரிவு அலுவலர், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை.
வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர் சென்னை - 600 017. பக்கங்கள் : 126, விலை : ரூ. 125 தொலைபேசி எண்கள் 044- 24342810. 24310769. மின்னஞ்சல்vanathipathippakam@gmail.com.
"இல்லதென் இல்லவள் மாண்பானால்" என்ற வள்ளுவனின் உயரிய வாக்குக்கேற்ப, ஒரு நல்ல குடும்பத்தின் அச்சாணியாக விளங்குபவள் மனைவி. தனிமனித ஒழுக்கமும், கூட்டுக்குடும்ப அமைப்பும் சிதைந்து வரும் இன்றைய அவசர உலகில், இல்லறத்தின் மாண்பையும் குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் உரக்கச் சொல்லும் ஒரு காலப் பெட்டகமாகத் திகழ்கிறது கவிஞர் இரா. இரவி அவர்களின் "மாண்புமிகு மனைவி" என்னும் நூல்.
இன்றைய நவீன காலகட்டத்தில், ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளையும், குடும்பப் பிரச்சினைகளையும் போட்டி போட்டுக்கொண்டு பொதுவெளியில் அம்பலப்படுத்தி வருகின்றன. இதைப் பார்த்து வளரும் இளைய தலைமுறையினர், "திருமணம் செய்து கொண்டால்தானே சண்டையும் சச்சரவும்?" என்று திருமண உறவின் மீதே வெறுப்புக் கொண்டு, வாழ்வின் திசைமாறிச் செல்லும் அவல நிலை அரங்கேறி வருகிறது.
இத்தகைய இக்கட்டான சூழலில், குடும்ப நலனையும் சமூக நலனையும் காக்க வேண்டியது ஒவ்வொரு கவிஞனின், எழுத்தாளனின் படைப்பாளனின் கடமையாகும்.
பாரதிதாசனின் 'குடும்ப விளக்கு', தி.ஜானகிராமனின் 'அம்மா வந்தாள்', கி.ராஜநாராயணனின் 'கோபல்லகிராமம்' போன்ற உன்னத இலக்கியங்கள் காட்டிய கூட்டுக்குடும்பப் பாரம்பரியம் இன்று மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது.
அதேபோல், தற்கால வாழ்வியலை எளிய உதாரணங்களுடன் நல்வழிப்படுத்தும் முனைவர் வெ. இறையன்பு அவர்களின் 'வாழ்க்கை' எனும் நூல் மனித வாழ்வின் நெளிவு சுளிவுகளையும், மனஅமைதியுடன் வாழ்வதற்கான எளிய நெறிகளையும் சுட்டிக்காட்டும் சிறந்த வாழ்வியல் நூல், தித்திக்கும் திருமணம் எனும் நூல், திருமணம் என்னும் உன்னத பந்தம் மனித நாகரிகத்தின் திருப்புமுனை என்பதை விளக்கி, இல்லறத்தை இனிமையாக்கும் ரகசியங்களை எடுத்துரைக்கும் நூல், 'நல்லதொரு குடும்பம்' எனும் நூல் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இருக்க வேண்டிய ஒற்றுமை, புரிதல் மற்றும் பாரம்பரியப் பெருமைகளை அழகாக விவரிக்கும் வழிகாட்டி, விட்டுக்கொடுத்தலின் அவசியத்தையும் பேசுகிறது.
இத்தகைய முன்னோடி நூல்களின் வரிசையில், மறைந்த தன் மனைவி திருமதி ஜெயசித்ரா அவர்களின் நினைவாகவும், அவர் மீது கொண்ட அளவற்ற அன்பின் சாட்சியாகவும், மனைவியின் குணநலன்களைக் கொண்டே மாண்புமிகு என்னும் மதிப்புமிகு சொல்லை பயன்படுத்தியும், முக்கியமாக வீட்டு பெண்களின் கண்களுக்கு தட்டுப்படாத பணிகளை, அதன் சிறப்புகளை, முக்கியத்துவத்தை முன்னிறுத்தியும், ஒவ்வொரு கணவரும் தமது மனைவியின் கருத்துகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களின் நல்ல செயல்களுக்கு பாராட்டு தெரிவிப்பதன் உன்னதம் குறித்தும், குடும்பத்தில் உறவுகளை பாதுகாக்கும் குணங்கள் பற்றியும், கவிஞர் இரா. இரவி அவர்கள் படைத்துள்ள "மாண்புமிகு மனைவி" என்னும் நூல், இன்றைய தலைமுறைக்கு ஒரு சிறந்த இல்லற வழிகாட்டியாக அமைந்துள்ளது.
புத்தகத்தை திறந்ததும், "என்னவள்" என்று தலைப்பிட்டு
"என் உயிரோடு உயிராக கலந்தவள்" என ஆரம்பித்து
"இறந்தபின் வருந்துவதை விட இருக்கும்போதே பாராட்டுங்கள்,
இருக்கும்போதே பாராட்டாத கஞ்சன் நான்" என்று முடித்து,
ஒவ்வொரு வார்த்தையிலும், வரியிலும் கணவன் மனைவி இருவரும் வாழ்ந்த வாழ்க்கையை கருத்தோடு ஒரு அழகான கவிதையாக வடித்துள்ளதிலேயே புத்தகத்தின் கருப்பொருள் புலப்பட்டு விடுகிறது. கவிஞரின் அன்புக்கும், சொல்லக்கூடிய திறனுக்கும் வாழ்த்துகள். கவிஞரின் ஒரு ஏக்கம் கலந்த சோகம் இக்கவிதையில் மட்டுமல்ல, நூல் முழுவதும்.
அனைத்து ஆண்மக்களுக்கும் ஒரு செய்தி சொல்லியிருக்கிறார், வாழும்போதே பாராட்டுங்கள் மனைவியை என்று... சிறப்பான பதிவு.
கணவன் மனைவி ஒற்றுமைக்கு அவர்தம் தனிப்பட்ட விருப்பங்களும், பழக்கங்களும் தடையல்ல என்பதை தம் சொந்த வாழ்க்கையை விவரிப்பதன்மூலம் அழகாக தெளிவுபடுத்தியுள்ளார் கவிஞர் இரவி.
"வேற்றுமையில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தோம்"
"என் வழியில் அவள் குறுக்கிடவில்லை,
அவள் வழியில் நான் குறுக்கிடவில்லை"
"வேற்றுமையில் ஒற்றுமை இந்தியா மட்டுமல்ல
வாழ்ந்த நாள்களில் அவளும் நானும்தான்"
எனும் வரிகள் அவர்கள் சீர்மிக வாழ்ந்ததையும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்ததையும், மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக இருப்பத்தையும் காட்டுகிறது.
புத்தகத்தின் ஆரம்பத்திலேயே,கவிஞர் தாம் மிகுந்த அன்பு கொண்டு எப்போதும் போற்றும் மேனாள் தலைமை செயலாளர், திருமிகு இறையன்பு அவர்களின் பணி நிறைவு பாராட்டு மடலாக தான் தொடுத்த கவிதையை அமைத்து, இறையன்பு அவர்களின் குண நலன்கள், நேர்மை, நிர்வாக திறமை, படைப்புகளின் மேன்மை, சமூக செயல்பாடுகள், ஓய்வறியா உழைப்பு ஆகியவற்றை வாசகர்களும் அறியும் வண்ணம் பதிவு செய்துள்ளார். மிகவும் சிறப்பும், மேன்மைபடுத்துதலும்!
மதிப்புக்குரிய கலைமாமணி ஏர்வாடியார் அவர்களின் அணிந்துரையில் கவிஞரின் இந்நூல் மனைவியின் அகால மரணத்தினால் ஏற்பட்ட வலி மற்றும் மனைவியின் அருமைகளையும் சொல்லி உடன் தமக்கு ஆறுதல் அளித்த அத்தனை உள்ளங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லி பதிவு செய்துள்ளதை பாராட்டியுள்ளது
குறிப்பிடத்தக்கது. திருமிகு இறையன்பு அவர்கள், திருமதி சித்ரா அவர்களுக்கு விபத்து ஏற்பட்டதிலிருந்து மருத்துவமனையிலிருந்து உடலை கொண்டு வந்து அடக்கம் செய்வது வரை தொடர்ந்து உதவி வந்ததையும் ஆறுதல் சொன்னதையும் மனமுருகி நன்றி தெரிவித்து பதிவு செய்துள்ளார் கவிஞர் இரவி.
கவிஞரின் மனைவி சித்ரா அவர்கள் மென்மையான மனதுடனும், மேன்மையான குணங்களுடனும், அயராத உழைப்புடனும், இரு குடும்ப உறுப்பினர்களுடன் நல்லிணக்கதுடனும், தான் எடுத்துக் கொண்ட காரியத்தை செவ்வனே முடிப்பவராகவும், மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஈடுபாடும், கணவரையும் குழந்தைகளையும் கவனித்து கொள்வதில் மிக அக்கறையோடும், மருமகள்களை மகள்களாக நடத்தி அவர்களது ஆழ்ந்த அன்பை பெற்றும், தனது மாமியாரை தாய் போல் கவனித்து மதிப்பை பெற்றும், தெய்வ பக்தி நிறைந்தவராகவும் தன் வாழ்நாளில் செம்மையுற வாழ்ந்து குடும்பத்துக்கு நற்பெயர் சம்பாதித்து கொடுத்து, பெண்மணிகளுக்கு உதாரணமாக திகழ்ந்து உள்ளார் என்று காரண காரியங்களுடன் அறிய முடிகிறது.
கவிஞர் இரவி ஏன் மனைவி இல்லாத காலத்தை நினைத்து இவ்வளவு வேதனைப் படுகிறார் என்பதை உணர முடிகிறது. இன்னாருக்கு இன்னாரென்று இந்த இணையரை அமைத்து கொடுத்த இருத்தலுக்கு நன்றிகள்! குடும்பத்தினர் அனைவருக்கும் இப்படிப்பட்ட பெண்மணி அவர்தம் குடும்பத்திற்கு கிடைத்ததற்கு வாழ்த்துகளும், அவரது இழப்புக்கு ஆழ்ந்த வருத்தங்களும்.
கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, பாடகி ஜானகி, பாடகி வாணி ஜெயராம், பாடகர் எஸ் பி பி போன்றோரின் இழப்புகளை தம் கவிதைக் கண்களால் கரைந்து உள்ளார் கவிஞர் இரவி.
கவிஞரின் மகன்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்றபோது திருமதி சித்ரா அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். இரவி அவர்களை விட சித்ரா அவர்களே சிரத்தை அதிகம் எடுத்துக் கொண்டதை காண முடிந்தது. அவரோடு பேசி உள்ளேன். திருமணம் முடிந்ததும் வாழ்த்து சொல்லி விட்டு வந்தேன்.
தனது பெயரனுக்கு 'சித்திரன்' என்று தனது மனைவியின் பெயரை வைத்து அவரது பெயரை உச்சரித்துக் கொண்டும், இனிய நினைவுகளை சுமந்து கொண்டும் இருப்பது சிறப்பு!
"மாண்புமிகு மனைவி" நூலுக்கு மாண்பும் உண்டு, பெயர் காரணமும் உண்டு. அவரது வருத்தத்தில் அர்த்தமும் உண்டு. இந்நூலில் அவரே தான் இன்னும் மும்முரமாக இலக்கிய பணி செய்யப் போகிறேன் என்றும், அதற்கும் தன் மனைவியே காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது எழுத்துகள் சிறக்கட்டும்! எண்ணங்கள் பலிக்கட்டும்! மனைவியின் நினைவலைகளுடன் வாழ்வை சிறப்பாக வாழட்டும்! கவிஞர் இரவி அவர்களின் படைப்புகள் தொடரட்டும்!

கருத்துகள்
கருத்துரையிடுக