: இதழோர மழை நூல் ஆசிரியர் : கவிஞர் ஜெயச்சந்திரன் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி

நூல் : இதழோர மழை நூல் ஆசிரியர் : கவிஞர் ஜெயச்சந்திரன் அணிந்துரை : கவிஞர் இரா.இரவி ****** நூல் ஆசிரியர் கவிஞர் ஜெயச்சந்திரன் ஹைக்கூ கவிதை, புதுக்கவிதை, மரபுக்கவிதை என மூன்று வகை பாக்களும் எழுதுவதில் வல்லவர். இந்த நூலில் புதுக்கவிதை விருந்து வைத்துள்ளார். சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, சிறந்த கவிஞர் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார். உள்ளத்தில் உள்ளது கவிதை, உணர்வுகள் கவிதை. இந்த வயதிலும் இளமை துடிப்புடன் காதல் கவிதைகள் வடித்துள்ளார். பாராட்டுகள். வசந்தம்! வசந்தம் என்பது / வருடத்திற்கு ஒரு முறையா? இல்லை இல்லை / வசந்தி வரும்போதெல்லாம் வசந்தம் வரும். காதல் ரசம் சொட்ட சொட்ட நூல் முழுக்க, காதல் கவிதைகள் நிரம்பி உள்ளன. கரும்பு கண்ணிலே காந்தமா வைத்திருக்கிறாய் எங்கு சென்றாலும் உன் பக்கமே ஈர்க்கிறதே! நான் இரும்பல்ல உனக்கென வளர்ந்த கரும்பு! இரும்பு, கரும்பு என சொல் விளையாடி இயைபு வைத்து வித்தியாசமாக புதுக்கவிதை வடித்துள்ளார். வர்ணம் உதட்டுச்சாயம் / வேண்டாமடி வானவில்லுக்கு / வர்ணம் அடிக்கலாமா? உதட்டுச் சாயத்தால் இரசாயனத்தால் உடல் நலத்திற்குக் கேடு என ஆய்வுகள் சொல்கின்றன- எனவே உதட்டுச்சாயம் பூச வேண்டாம் என்கிறார். வானவில்லுக்கு வர்ணம் எதற்கு? இயற்கையிலேயே செம்மையாக உள்ள இதழுக்கு வர்ணம் தேவை இல்லை என்பது சிறப்பு. தீபாவளி நீ வாசலுக்கு வா! உன் பார்வையால் எனைப் / பற்ற வை வானவெடியாய் / ஆகாயத்தில் பறக்க சங்குச் சக்கரமாய் / மனசுக்குள் சூழல உன் பார்வையாய் எனைப் பற்ற வை! காதலியின் பார்வையில் தீப்பொறி பறக்கும் வா, வந்து பற்றவை என்கிறார். வான வெடியாய் சங்கு சக்கரமாய் சுழல வேண்டும் என்கிறார். நல்ல கற்பனை. விடியல் பெண்ணே நீ யோசி பெண்ணாய் பிறந்தபின் மண்ணாய் இருப்பதா? / ஆணாதிக்க சகம் உன்னை / அணு அணுவாய்ச் சிதைப்பதா? கல்லான மனிதர்களின் / பொல்லாத பார்வையிலே இருட்டுக்குள் விழியொழுக / இருக்கின்ற சோகம் என்ன கத்தி விழிப் பார்வையினரில் / வெட்டி ஒழி வினர்களை! காளை உன் காலடியில் நாளை வரும் நல்ல விடியல்! பெண் விடியலுக்காக குரல் கொடுத்துள்ளார். ஆணாதிக்க சிந்தனை ஒழிய வேண்டும் என புதுக்கவிதையால் குரல் கொடுத்துள்ளார். பயிர் என் மன வயலில் காதல் பயிர் வளர்த்தாய் பார்வையினரில் நீரு ஊற்று பயிரோட உயிர் வாழும்! பார்வையால் நீர் ஊற்று பயிர் வாட உயிர் வாழும் என்கிறார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அதுபோல காதல் பயிர் வாடுவதற்காக வாடி உள்ளார் நூ லாசிரியர் கவிஞர் ஜெயச்சந்திரன். கொசு! படுக்கையறையில் மனைவியும் நானும் எதிரெதிராய் நின்று டென்னிஸ் மட்டையை சுழற்றுகின்றோம் விளையாட்டுக் காட்டுகிறது கொசு! வளர்ந்துவிட்ட நவீன கணினியுகத்தில் கொசுவை ஒழிக்க முடியவில்லை. கொசு மருந்து கோடிக்கணக்கில் விற்பனையாகிறது, மின்சாரம் செலவாகிறது. கொசு ஒழிந்தபாடில்லை. நாடு முழுவதும் கொசுக்கள் மலிந்து உள்ளன, ஒழிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தை கவிதையில் பதிவு செய்தது சிறப்பு. காதல் கவிதைகள் பல உள்ளன. சமுதாய விழிப்புணர்வு கவிதைகள் சில உள்ளன. ஞாபகங்கள்! உன் ஞாபகங்களைத் தொலைத்து விட நினைத்தேன் உன்னைத் தவிர எல்லா ஞாபகங்களும் தொலைந்து விட்டன காதலியின் ஞாபகங்கள் தொலைத்து விட நினைத்து முடியவில்லை. ஆனால் அவளைத் தவிர மற்ற ஞாபகங்கள் தொலைந்து விட்டன். மறக்க முடியவில்லை என ஆதங்கப் படுகிறார். இதழோர மழை! காதோரம் மௌன மொழி காதல் பேசி இதழோர மழையில் இருவருமே நனைந்திடுவோம் கவிதை நூலிற்கான தலைப்பிற்கான கவிதை காதோரம் மௌனமொழி, காதலுக்கு விழிமொழி போதும், இதழ் உச்சரிப்பு அவசியம் இல்லை. இதழ்கள் இணைந்து முத்தமழை நனைந்து இருப்போம் என்று முத்தத்திற்கு கொடி பிடித்து உள்ளார். வாசம்! நீ சென்ற பின்பும் நின்ற இடத்தில் காதல் வாசம் சற்றும் குறையவில்லை! கவிதைக்குக் கற்பனை அழகு. காதலிக்கு ஒரு வாசம் உண்டு என்கிறார். அவள் சென்ற பின்னும் வாசம் உள்ளது என்கிறார். வித்தியாசமான புதுக்கவிதைகளின் தொகுப்பு. முழுவதும் படித்துப் பாருங்கள். ரசித்து மகிழ்வீர்கள்!

கருத்துகள்