குமரிமுனை திருவள்ளுவர்சிலையின் அவல நிலை மாறுமா? ஞான குறிஞ்சி

குமரிமுனை திருவள்ளுவர்சிலையின் அவல நிலை மாறுமா? கன்னியாகுமரி முனையிலுள்ள திருவள்ளுவர் சிலை போல். கருங்கல்லால் ஆன சிலை உலகில் எங்குமே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. கடல்நீர் மட்டத்திலிருந்து 30 அடி பாறை மீதான இச்சிலையின் மொத்த எடை 7,000 டன் ஆகும். பீடத்தோடு சேர்த்து இச்சிலையின் உயரம் 133 அடியாகும். பீடத்தின் உயரம் அறத்துப்பால் அதிகாரங்களை மனதிற் கொண்டு 38 அடியும், பொருட்பால் / காமத்துப்பால் ஆகிய இரண்டு அதிகாரங்களின் அடிப்படையில் 95 அடி உயரமும் ஆக மொத்தம் 133 அதிகாரங்களைக் குறிக்கும் வண்ணம் 133 அடி உயரத்தில் சிற்பி கணபதி அவர்களால் கம்பீரமாக இச்சிலை உருவாக்கப் பட்டுள்ளது. உப்புக் காற்று இச்சிலையை அரிக்காமலிருக்க அவ்வப்பொழுது வேதியல் கலவைப் பூச்சுப் பூசிப் பாதுகாக்கப் படுகிறது. சிலையின் 130 அடி உள்ளீடற்று அமைக்கப்பட்டு இருப்பதால், கடுமையான கடற்காற்றும் சிலையைப் பாதிக்காதபடி தொழில்நுட்பத்துடன் அமைக்கப் பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டில் மிகக்கடுமையான சுனாமி அலைகள் தாக்கிய பொழுதும் திருவள்ளுவர் சிலையை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது கருதத்தக்கது. 2000 ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் திறக்கப்பட்ட குமரிமுனை திருவள்ளுவர் சிலை, அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலைக்கு இணையான முக்கியத்துவம் உடையதாகப் பலராலும் கருதப்படுகிறது. இதனால் கன்னியாகுமரியிலுள்ள விவேகானந்தர் பாறையின்முக்கியத்துவம் குறைவதாக ஒரு சிலர் எண்ணி அதற்கேற்பக் காய்களை நகர்த்தி வருகின்றனர். அதை உறுதிப்படுத்தும் வகையிலேயே நகர்வுகள் தொடர்வதை உணர முடிகிறது. இதனால் திருவள்ளுவர் சிலை புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறது. எடுத்துக்காட்டாக, திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டவுடன், கரையிலிருந்து திருள்ளுவர் சிலைக்கு நேரடியாகப் படகுப் போக்குவரத்து தேவை எனத் தமிழ் ஆர்வலர்களால் வலியுறுத்தப் பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களை கூறிப் படகுப் போக்குவரத்து, கரையிலிருந்து நேரடியாக விவேகானந்தர் பாறைக்குச் செல்லுமாறு மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பிறகு விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குப் படகு செலுத்தப்பட்டது. அடுத்து, விவேகானந்தர் பாறையையும் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கண்ணாடிப் பாலம் அமைக்கப்பட்ட பொழுது, கரையில் இருந்து நேரடியாகத் திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடிப் பாலம் சென்றடையும் வண்ணம் படகுப் போக்குவரத்தினை மாற்றி அமைக்குமாறு மீண்டும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதுவும் நடக்கவில்லை. எனவே தவிர்க்க முடியாமல், விவேகானந்தர் பாறைக்குச் சென்ற பிறகுதான் கண்ணாடிப்பாலத்தைக் காணமுடியும் என்றாகி விட்டது. அதன்பிறகு கண்ணாடிப் பாலம் வழியாகச் சென்று திருவள்ளுவர் சிலையைக் காணும் வண்ணம் மாற்றங்கள் செய்யப்பட்டன. கண்ணாடிப் பாலத்தைக் கட்டியமைக்கத் தமிழக அரசு 49 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.. ஆனால் இப்பொழுது விவேகானந்தர் பாறையிலிருந்து கண்ணாடிப் பாலத்தைக் காண ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 30 விவேகானந்தா கேந்திரா அமைப்பு வசூலித்து வருகிறது. கண்ணாடிப் பாலம் கட்டியது தமிழக அரசு. அதைக் காண மக்களிடம் பணம் வசூலிப்பது விவேகானந்தா கேந்திரா! எப்படி இருக்கிறது நியாயம்? இதற்கிடையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வந்தது .அந்தப் பரபரப்பில் யாரும் கவனிக்க மாட்டார்கள் என எண்ணி, மிகவும் இரகசியமாகத் திருவள்ளுவர் சிலைக்குச் செல்வதற்கான படகுத் துறை சிதிலமடைந்து விட்டது எனக் காரணம் காட்டி அதை இடித்துக் தள்ளிவிட்டனர். இனி விவேகானந்தர் பாறைக்குச் செல்லாமல், திருவள்ளுவர் சிலைக்கு யாரும் செல்லவே முடியாது. மேலும் சிலைக்குப் படகுப்போக்குவரத்து இயக்குவது சாத்தியமில்லை என்பதற்கு மொக்கையான காரணங்கள் சொல்லப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் தற்செயலானவை அல்ல! திருவள்ளுவர் சிலைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை முற்றிலும் குறைக்கும் செயலாக இது இருக்கிறது என நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது. எனவே கண்ணாடிப் பாலத்தைக் காண்பதற்காக நியாயமற்ற வகையில் மக்களிடமிருந்து விவேகானந்தா கேந்திரம் பணம் வசூலிப்பதற்குத் தமிழக அரசு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். கண்ணாடிப் பாலத்தைப் பராமரிக்கும் பொறுப்பைத் தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். அடுத்து, கரையிலிருந்து நேரடியாகத் திருவள்ளுவர் சிலைக்குப் படகுப் போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும். திருவள்ளுவர் சிலைக்கு வருபவர்கள் கண்ணாடிப் பாலத்தை காண்பதற்கு அது ஏதுவாக இருக்கும். திருவள்ளுவர் பாறைக்குப் படகுப் போக்குவரத்தைச் செலுத்துவது சாத்தியமல்ல என்ற கருத்து ஏற்கத்தக்கது அல்ல! அறிவியலும் தொழில்நுட்பமும் உயர்ந்தோங்கி உள்ள இக்காலகட்டத்தில் இந்தச் சிறிய பிரச்சனையை மாற்றி அமைப்பது பெரிய செயலல்ல. எனவே முறையாகப் பராமரிக்காததால் தூர்ந்து போன திருவள்ளுவர் பாறையில் உள்ள படகுத்துறையைப் புதுப்பிக்க வேண்டும். அதன் மூலம் திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்குப் படகு போக்குவரத்தை மீண்டும் தொடங்க முடியும். விவேகானந்தர் பாறை லேசர் ஒளியில் கண்ணைப் பறிக்கும் வகையில் பளபளப்பாக மின்னும் நிலையில், திருவள்ளுவர் சிலை அனாதையாக இருண்டு கிடக்கும் கேவலமான நிலையைத் தமிழக அரசு மாற்றி அமைக்க வேண்டும். எனவே இத்தகைய பின்னணிகளைக் கருத்தில் கொண்டு தற்பொழுது புதிதாக ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ள தமிழக அரசு, தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் நீண்ட காலம் வலியுறுத்தி வரும் மேற்காண் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்துத் திருவள்ளுவரின் முக்கியத்துவத்தை நிலை நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் மேலோங்கி உள்ளது. கு

கருத்துகள்