அரேபிய ஞானக்கதை...
ஒருவன் குதிரையின் மீது சவாரி செய்து கொண்டிருந்தான்.
வழியில் மயங்கிக்கிடந்த ஒருவனைப்பார்த்ததும் பரிதாபப்
பட்டு குதிரையிலிருந்து கீழே இறங்கி அவன் முகத்தில் தண்ணீர் தெளித்தான். மயங்கிக்கிடந்தவனோ ஒரு திருடன். அவ்வாறு அவன் நடித்தான். திடீரென எழுந்து அவன் கத்தியைக்காட்டி குதிரைக்காரனிடம், “ உன் குதிரையைக் கொடு, இல்லாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் “ என்று மிரட்டினான். குதிரையின் லகானை அவனிடம் ஒப்படைத்துவிட்டு அந்த அப்பாவி குதிரைக்காரன் கேட்டான்.
"இதை என்ன செய்யப் போகிறாய்?“ .
அதற்கு அந்தத் திருடன், “நாளை சந்தையில் விற்கப் போகிறேன்“ என்றான். "அவ்வாறு விற்கும்போது இந்தக் குதிரை எப்படிக் கிடைத்தது என்று மட்டும் சொல்லிவிடாதே"!என்று அந்தக் குதிரைக்காரன் அறிவுறுத்தினான்.
“ஏன்?“ என்று அந்தத் திருடன் கேட்டான்.
"நீ உண்மையிலேயே மயக்கமடைந் திருக்கிறாய் என நினைத்து உனக்கு உதவ நான் குதிரையிலிருந்து இறங்கினேன். ஆனால் நீயோ என் குதிரையைப் பறித்துக் கொண்டாய். நீ இந்தச் சம்பவத்தை சொன்னால், ஒருவர் உண்மையிலேயே வழியில் மயக்கம் அடைந்து கிடந்தாலும் யாரும் அவருக்கு உதவ மாட்டார்கள். திருடன் என்று நினைத்துக்கொண்டு தாண்டிப் போய்விடுவார்கள்" என்றான் அந்தக் குதிரைக்காரன்.
(நாம் துரோகத்தால் பாதிக்கப்படும் போது, நல்லவர்களையும் சந்தேகப்படத் தொடங்கி விடுவதுதான் அதன் கொடூர முகமாக இருக்கிறது).
முனைவர் வெ.இறையன்பு எழுதிய “துரோகச்சுவடுகள்“ நுாலிலிருந்து.. நன்றி கவிஞர் சாமி திராவிடமணி

கருத்துகள்
கருத்துரையிடுக