தாய் கிழவி - திரைப்பார்வை*
கிராமத்து பின்னணியில், குடும்ப உறவுகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான திருப்பங்களுடன் எடுக்கப்பட்ட ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் தான் தாய் கிழவி. சுவாரஸ்யமாக படம் முன்னேறும்போது, கதை சொல்லும் தொனி, உணர்ச்சிபூர்வமான சுயபரிசோதனையை நோக்கி சீராக செல்கிறது. முதல்பாதி, கிராமப்புற விசித்திரங்களைப் பற்றியது மட்டுமல்ல, ஆழமான அரசியல் மற்றும் வெள்ளந்தியான மக்களின் உணர்வையும் தத்ரூபமாக சொல்கிறது.
வெறும் நையாண்டி மற்றும் நகைச்சுவை மட்டுமல்ல, உணர்ச்சியின் ஆழம், வாழ்க்கைப் பாடங்கள் மற்றும் வருங்கால தலைமுறையினரைப் பாதிக்கும் மதிப்புகளைப் புகுத்துகிறது இந்த படம்.
இரண்டாம் பாதி கண்ணியம், சுயசார்பு மற்றும் பெண்களின் பொருளாதார சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, குறிப்பாக ஒரு பெண்ணின் பார்வையில். முக்கியமாக அறிவுரை சொல்லுவதை போல, பாடம் எடுப்பது போல, வலிந்து எந்த கருத்தையும் சொல்லவில்லை, மருத்துவமனை காட்சிகள் உட்பட. மருத்துவர்கள் தங்களை நாடிவருபவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை கூட நயமாக, ஒரு உயர் மருத்துவ அதிகாரியைக் கொண்டு சொல்லப்பட்டது அருமை. இவையெல்லாம் ஒருபோதும் பிரசங்கமாக நமக்கு தெரியவில்லை.
இந்த படம்.., எளிய கிராமத்து மாந்தர்களின் மன நிலையை, சூழ்நிலையை, தேர்ந்தெடுத்த கதாபாத்திரக் கொண்டு பேச அனுமதிக்கிறது, அதற்கு தேர்ந்த திரைக்கதை உக்தி உதவி செய்கிறது. பெண்களுக்கு நம்பிக்கையளித்து தைரியத்தை சொல்லி, தன் உழைப்பால் சேர்த்த சொத்தை காப்பாற்றி, சமூகத்தில் சுதந்திரமாக திரிந்து, தன்னை காத்துக்கொள்ளும் பெண்களின் சுயமரியாதையை பேசுகிறது. முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தாய் கிழவி'
ராதிகாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த நடிப்பாகக் கருதலாம். பவுனுத்தாயி என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ள ராதிகா, தேசிய விருதை வெல்வார். மகன்களாக வரும் அருள்தாஸ், சிங்கம்புலி, பாலசரவணன், மருமகன் முத்துகுமார், மருமகள்களாக வரும் மூன்று பேர் என.., திரையில் வருகிற இந்த பாத்திரங்களை நம்ம ஊர்களில் பார்த்த மனிதர்களின் பிம்பங்களாகவே நமக்கு தெரிகிறார்கள். பென்னிகுயிக்காக வரும் முனிஸ்காந்த் நடிப்பு அபாரம்.
தம்பி பால சரவணன், சாலையோரத்தில் நிறுத்தப்பட்ட நோயாளர் ஊர்தியில் நடக்கும் துயரசம்பவம், அதன் பிறகு மருத்துவமனையிலும் தன் நடிப்பை
உயிர்துடிப்புடன் காட்டியிருப்பார். அடுத்து எனக்கு பிடித்த, கடைசி விவசாயி ரேச்சல் ரெபேக்காவின்
சலனமற்ற நடிப்பை வெளிப்படுத்தும் சுருளி கதாபாத்திரம் குறிப்பிடத் தக்கது. பேசாமல் பல காட்சிகளில் நடித்து, ஒரு காட்சியில் மட்டுமே பேசி
தமிழ் சினிமா ரசிகர்களை பேச வைக்கிறார்.
ஒட்டுமொத்தமாக, தாய் கிழவி
உண்மையான, நேர்மையான முயற்சியாகும், இது பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், ஒரு குடும்பம் மற்றும் சமூகத்தின் நல்வாழ்வுக்கு, பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது ஏன் முக்கியம் என்பது குறித்த சமூக செய்தியை சொல்கிறது. திரையரங்கிலிருந்து
வீட்டிற்கு எடுத்து வருகிற செய்தி எதுவெனில்..,
பெண்கள் உழைக்க வேண்டும், சேமிக்க வேண்டும், உற்சாகமாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

கருத்துகள்
கருத்துரையிடுக