நூல் : இறையன்பு ஓராண்டு உரைகள் தொகுதி 3 நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
நூல் : இறையன்பு ஓராண்டு உரைகள்
தொகுதி 3
நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப.
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை-600 050.
செல் : 044 - 26251968, 26258410
4 தொகுதிகள் ; விலை ரூ.1500
******
25 உரைகளின் தொகுப்பு இந்த நூலில் உள்ளன. எங்கு, எப்போது பேசப்பட்டது என்ற குறிப்புடன் வரலாற்று ஆவணமாக உள்ளன. முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் ஒருமுறை பேசியதை மறுமுறை பேசுவதில்லை. கூறியது கூறல் அவரின் உரையில் எப்பொழுதும் இருக்காது. ஒவ்வொரு உரையும் புதுப்புது தகவல்களைத் தந்தவண்ணம் இருக்கும். பயனுள்ள உரையாகவும் இருக்கும். வெற்று கூச்சல். இரைச்சல். அரட்டை என எதுவும் இருக்காது.
உரை நூலாகி உள்ளது என்று படித்தால் தான் தெரியும். அந்த அளவிற்கு உரை என்பது எழுதியது போலவே உள்ளன. அவருடைய எல்லா உரையையும் எல்லோரும் கேட்பதற்கு வாய்ப்பு இல்லை. பல்வேறு ஊர்களில், பல்வேறு இடங்களில் பேசிய உரைகள் மொத்தமாக தொகுப்பாக வந்துள்ளன.
இளையதலையமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது. எங்கு உரை நிகழ்த்தவும் பயன்படும். இதிலுள்ள கருத்துக்களை அவரது பெயருடன் மேற்கோள் காட்டி உரையாற்ற மிகவும் பயன்தரும் நூல் இது. 4 தொகுதிகளில் தொகுதிக்கு
25 உரைகள் மூலம் மொத்தம் 100 உரைகள் தொகுத்து உள்ளனர். அறிவியல் வளர்ச்சியின் பயனுள்ள விளைவு.
இலக்கிய இமயம் மு.வரதராசன் அவர்கள், இலக்கியத் தேனீ இரா.மோகன் அவர்களிடம், “பேசிக்கொண்டே இருந்தால் காற்றில் கரைந்து காணாமல் போய்விடும். பேச்சைக் குறைத்து எழுத்தில் கவனம் செலுத்து, எதிர்காலத்திற்கு நிற்கும், ஆவணமாகும்” என்று அறிவுரை தந்தாராம். ஆம், அன்றைய காலத்தில் பேசிய பேச்சை ஆவணப்படுத்தும் அறிவியல் வளரவில்லை. ஆனால், இன்று முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களின் உரைகளை ஆவணப்படுத்தி நூலாக்கி இருப்பது தொழில்நுட்ப வளச்சியின் உச்சம்.
முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் பேசுவது, எழுதுவது அறம் சார்ந்து இருக்கும். அதுபோல அவரின் செயலும் அறம் சார்ந்ததே. அண்மையில் கண்ணகி நகர்வாழ் பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் பயிற்சி வழங்கி 5 பேருந்து ஆட்டோ வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளிஏற்றி வைத்துள்ளார். இறையன்பு அறக்கட்டளை மூலம் பல மனிதநேய உதவிகளை அமைதியாக தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார். பேச்சு, எழுத்து, செயல் - வேறுபாடு இல்லாத மாமனிதராக விளங்கி வருகிறார்.
இந்த நூலில் "ஊர்கூடித் தேர் இழுப்போம்" என்று தொடங்கி, "அடுத்தது என்ன?" வரை 25 உரைகள் உள்ளன. உரையின் தலைப்பை தேர்ந்தெடுப்பதிலேயே மிகவும் நுட்பமாகத் தேர்ந்தெடுத்து. அவை தொடர்பான அத்தனை கருத்துக்களையும் அருவியாகக் கொட்டி உள்ளார்.
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளனர். ஒரே மனிதர் பேசி, 100 உரைகள் நூலாக இதுவரை யாருக்கும் வந்திருக்க வாய்ப்பில்லை. முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்களுக்குத்தான் இந்த வாய்ப்பு அமைந்துள்ளது.
எல்லோருடைய உரையையும் நூலாக்க முடியாது. வெகுசிலரின் உரையைத்தான் நூலாக்க முடியும். அந்த வெகுசிலரில் சிகரமாக விளங்குகிறார் இறையன்பு அவர்கள். உரையை ஒருவரி கூட விடாமல் அப்படியே நூலாக்கி உள்ளனர். காலத்தால் அழியாத கல்வெட்டாக உரைகள் வந்துள்ளன.
பதச்சோறாக நூலிலிருந்து சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ!
"புதுமைப்பித்தன் எழுதிய மண்குதிரையை நீங்கள் படித்திருந்தால் அது மண்குதிரையாக இருக்கும். ஆனால், அந்த மண்குதிரையை உயிர்க்குதிரையாக மாற்றியது திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் விவரித்த விதம்".
எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த கதைசொல்லி என்பதை அவர் உரையைக் கேட்ட அனைவரும் அறிவோம். அதனை உணர்த்தி உள்ளார். சக எழுத்தாளரை மனம்திறந்து பாராட்டும் உயர்ந்த உள்ளம்.
புத்தகங்களைப் பற்றி கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை நூலில் உள்ளது. இந்தக் கவிதையை மட்டுமல்ல, அனைத்து உரையும் கையில் குறிப்பு எதுவுமின்றி சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்.
"நீங்கள் விழிப்புணர்வோடு எதைச் செய்தாலும் சரியாகச் செய்வீர்கள். உங்களுக்குக் கண்காணிப்பாளரே தேவையில்லை. விழிப்புணர்வுடன் மாணவர்கள் தேர்வு எழுதினால், அந்த அறையில் கண்காணிப்பாளர்கள் தேவையில்லை".
விழிப்புணர்வின் அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார். எந்தஒரு செயலையும் விழிப்புணர்வோடு செய்தால் செயல் சிறக்கும் என்பது உண்மைதானே.
"எப்போது ஒருவருக்கு விழிப்புணர்வு வருகிறதோ அப்போது அவர் நேர்மையாக இருப்பார். எந்த காலக்கட்டத்திலும் தவறு இழைக்கக் கூடாது என்ற எண்ணம் எற்படும். எதைச் செய்தாலும் அதை ரசித்துச் செய்வார்".
எந்தஒரு செயலையும் இஷ்டப்பட்டு செய்ய வேண்டும், கஷ்டப்பட்டு செய்யக்கூடாது என்பார்.
"மேடைப்பேச்சுக்கு நீண்ட, நெடிய வரலாறு உலகமெங்கும் உண்டு. உலகத்தில் நாகரிக நாடுகள் அந்தக்காலத்தில் எங்கெல்லாம் இருந்தனவோ, அங்கெல்லாம் சொற்பொழிவாற்றுவது ஒரு தனிப்பெரும் திறமையாகக் கருதப்பட்டது".
இப்படி சொற்பொழிவின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அற்புதமாக நிகழ்த்திய அறிவுரையின், ஆழமான உரையின், அறவுரையின், இலக்கிய உரையின், இனிமை உரையின், கருத்துரையின் களஞ்சியமாக, தகவல் சுரங்கமாக நூல் உள்ளது- படித்துவிடடு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் மறுவாசிப்பு செய்து புத்துணர்வு பெறும் புத்துணர்ச்சி நூல் இது.


கருத்துகள்
கருத்துரையிடுக