நூல் : முயற்சிகள் வெல்லும்! நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
நூல் : முயற்சிகள் வெல்லும்!
நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : குமரன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர்,
சென்னை.
பக்கங்கள் 168, விலை ரூ. 90
******
குமரன் பதிப்பகம் S.வைரவன் பதிப்புரை வழங்கி உள்ளார். நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் என்னுரையில், முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும், முயலாமை தான் வெல்லாது.
உண்மை தான், நம்மில் பலர் முயலாமல் இருந்துவிட்டு எனக்கு கிட்டவில்லை என்று வருந்துகின்றோம். நூலில் 23 கட்டுரைகள் உள்ளன. சிறிய கட்டுரைகள் என்பதால் எளிதாக ஒரே மூச்சில் வாசித்து விட முடிகின்றது. படிக்க படிக்க மனதிற்கு மகிழ்ச்சியும், உத்வேகமும் தருகின்றன. நம்மை மாற்றிக்கொள்ள புதுப்பித்துக் கொள்ள உதவுகின்றன.
பிறந்ததும் கிடைப்பது தாலாட்டு
இறந்ததும் நடப்பது நீராட்டு
இடையில் வாங்க வேண்டும் பாராட்டு
பிறர் பாராட்டும்படி வாழ வேண்டும் என்றால். சராசரி வாழ்க்கைக்கு முடிவு கட்டி, சாதனை வாழ்க்கைக்கு முன்னுரை எழுத வேண்டும். முதலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம்முள் பிறக்க வேண்டும், பின் எண்ணங்களைச் செயல்படுத்த வேண்டும். சிந்திக்கத் தொடங்குங்கள்! சிகரங்கள் உமக்காக! என்று தொடங்கி சிறந்த நிர்வாகியாகுங்கள் என்று முடித்துள்ளார்.
சிந்திக்க வைக்கும் கவிதை வரிகள் எழுதுவதால் சிந்தனைக் கவிஞர் என்ற பட்டம் நூலாசிரியருக்கு கிடைத்துள்ளது. பொருத்தமான பட்டம் தான்.
“இலட்சியம் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத படகு போன்றது. அது காற்றுக்கு அசையலாம், ஆனால் கரையை சென்று அடையாது”.
உவமைகளோடு உணர்த்துவதால் நன்கு விளங்குகின்றது. தெய்வத்தால் முடியாதது கூட முயன்றால் முடியும் என்றார் திருவள்ளுவர். அதனை வழிமொழிந்து முயலுங்கள் சாதிக்கலாம், வெல்லலாம், உயரலாம் என்பதை நூல் முழுவதும் விளக்கி உள்ளார்.
அறிவாற்றலை மேம்படுத்த வேண்டும். ஆம் புதியன கற்க வேண்டும். அலைபேசியின் பயன்பாட்டை அறிதல் வேண்டும். அறிந்து கொள்வதன் மூலம் அலைபேசியால் பல செயல்கள் செய்ய முடியும். நல்லவற்றிற்கு பயன்படுத்த வேண்டும், அதுபற்றிய புரிதல் ஏற்பட நாம் அறிவாற்றல் வளர்த்துக் கொண்டால் மட்டும் உலகில் சாதிக்க முடியும்.
புத்தர் சொன்னது – வாழ்க்கையின் ஒவ்வொரு வாய்ப்பையும் தியானமாகச் செய்து முடியுங்கள். எதையும் விழிப்புணர்வோடும் அர்ப்பணிப்போடும் கவனமுடனும் செய்து பழகுங்கள். அப்பொழுது தான் மனதில் ஆனந்தம் பொங்கும்.
புத்தரின் வைர வரிகளை நூலில் மேற்கோள் காட்டி உள்ளார். இந்த வரிகளை ஆழ்ந்து படித்துப் புரிந்து நடைமுறைப்-படுத்தினால் வாழ்வில் உயரலாம். இப்படி பயனுள்ள தகவல்களின் களஞ்சியமாக நூல் உள்ளது.
நூலின் அட்டைப்படத்தில் புகழ்பெற்ற உழைப்பாளர் சிலையை அச்சிட்டுள்ளனர். உழைத்தால் உயர்வு, முயன்றால் வெற்றி என்பதை அட்டைப்படமும் உணர்த்துகின்றது. தொழிற்கூடத்தின் படமும் உள்ளது.
விவேகானந்தரின் கருத்தும் மேற்கோள் காட்டி உள்ளார். “வாழ்க்கையில் மிகவும் உயரிய இலட்சியம் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், அந்த இலட்சியத்தின் நினைவாகவே வாழுங்கள். எந்நேரமும் இலட்சியத்தைப் பற்றியே கனவு காணுங்கள். அந்த இலட்சியத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்யுங்கள். இலட்சியத்தை நினைத்திடுங்கள், இலட்சியத்திற்காகவே செயலாற்றுங்கள், உங்களுக்கு வெற்றி நிச்சயம்”.
இன்றைய இளையதலைமுறையினர் விவேகானந்தரின் வெற்றிவரிகளை மனதில் பதியம் போட்டுக் கொள்ளுங்கள், போட்டித் தேர்வில் வெல்ல வேண்டுமா? அல்லது உங்களுக்குப் பிடித்த துறை எதுவென்றாலும் அதில் சாதிக்க வேண்டுமென்பதை இலட்சியமாகக் கொண்டு அதற்காக முயன்று, நினைத்து, கனவு கண்டு செயல்படுத்தினால் இலட்சியத்தை அடைய முடியும்.
“வேலையை செய்யத் தொடங்கி விடுங்கள், அதனை முடிப்பதற்கான உத்வேகம் தானே உங்களை வந்தடையும்”.
பலர் வேலையை செய்யத் தொடங்காமலே நம்மால் முடியுமா என்று யோசித்து, அச்சத்தில் வேலையைத் தொடங்காமலே காலத்தை விரையம் செய்து விடுகின்றன. துணிந்து வேலையைத் தொடங்கி, அது பற்றிய சிந்தனை வளர்த்தால் சாதித்து விடலாம். தயக்கத்தை தகர்த்து வாழ்வில் முன்னேற வழிவகைகள் நூல் முழுவதும் விளக்கி உள்ளார்.
M.G. ராஜமாணிக்கம் இ.ஆ.ப. அவர்களின் வைர வரிகளையும் மேற்கோள் காட்டி உள்ளார். இவர் தமிழ் பற்றாளர். மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் அப்பா பெயரில் அறக்கட்டளை நிறுவி தமிழ் வளர்த்து வருபவர். திருவாசகத்தை உருகி உருகி படித்தவர், பண்பாளர். அவரது வைர வரிகளை வாசித்துப் பாருங்கள். இதோ!
சுடர் விட வேண்டுமா? சூடுபட வேண்டும் ; வலிமை பெற வேண்டுமா? வலி தாங்க வேண்டும் ; சுடுதல் இன்றி சுடர்விட்டவர் யாருமில்லை ; வலியின்றி வலிமை பெற்றவர் யாருமில்லை, உயர்ந்த இலட்சியத்தோடு போராடுங்கள், வெற்றி நிச்சயம்.
இந்த வரிகளைப் படித்தாலே தோல்விக்குத் துவளாமல் தொடர்ந்து முயன்றால் சாதிக்க முடியும் என்பதை உணரலாம்.
நல்ல எண்ணங்கள் மலரட்டும் என்கிறார். ஆம், எண்ணம் நல்லதாக இருக்க வேண்டும். மனமது செம்மையானால் மந்திரங்கள் செபிக்க வேண்டாம் என்று சித்தர்கள் சொன்னார்கள். அதுபோல, நினைவு நல்லது வேண்டும் என மகாகவி பாரதியும் பாடினான். கெட்ட எண்ணங்களையும், எதிர்மறை எண்ணங்களையும் விடுத்து நல்வாழ்க்கை வாழ வழி செய்யும் சிறந்த நூல்.


கருத்துகள்
கருத்துரையிடுக