படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கல்லூரிக் காலங்களில்மட்டுமல்ல இப்போதும் என் ஹீரோ அவர்... கிராமத்து சூழலில் ஆங்கிலம் சரளமாக பேசமுடியாத புரிந்து கொள்ள முடியா நிலையில் அவருக்காகவே sports star வாங்கி அவர் புகைப்படங்களை என் கல்லூரி புத்தகங்களில் அலமாரிகளில் ஒட்டி வைத்து ரசித்திருக்கிறேன்… அவருக்காகவே அப்பாவை நச்சரித்து solitaire black & white தொலைகாட்சி பெட்டி வாங்கி அவர் விளையாட்டை வெறி கொண்டு கண்டு களித்திருக்கிறேன்.. அவர் விளையாடும் நாட்களில் கல்லூரி செல்லவே பிடிக்காது..பலமுறை கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு அவர் விளையாட்டை ரசித்திருக்கிறேன்.. அவர் விளையாடியதை நிறுத்தியதும், நான் கிரிக்கெட் பார்ப்பதை அறவே நிறுத்தி விட்டேன்... அவர் கபில் தேவ்... --------------------- 1983 ம் வருடம் …உலகக் கோப்பை… இங்கிலாந்தில் வெளியாகும் பாரம்பரிய wisden கிரிக்கெட் பத்திரிக்கையின் ஆசிரியர் டேவிட் ஃப்ரித் “இந்தியாவை உலக கோப்பையிலிருந்தே நீக்க வேண்டும். அடுத்த முறை அவர்களை தகுதிச்சுற்றிலே ஆடி ஜெயித்து வரச் சொல்ல வேண்டும் “ என எழுதினார். 1983 ம் வருடம்..ஜூன் 25 ம் தேதி ...மறக்க முடியாத நாள்...ஹரியானா அரிக்கேன், ஹரியானா சிங்கம் கபில் தலைமையில் இந்திய வீரர்களும், மேற்கிந்திய மகா சிங்கம் கிளைவ் லாயிட் தலைமையில் மேற்கிந்திய வீரர்களும் கிரிக்கெட் களத்தில் மோதிய நாள்... ஒன்றிரண்டு வெற்றிகளாவது இந்திய வீரர்கள் பெறுவார்களா பார்ப்போம் என இந்திய பத்திரிக்கைகள் நக்கலாக எழுதிய நேரம்... மேற்கிந்திய தீவுகள் இரண்டு முறை உலக கோப்பையை வென்றிருந்தது..மூன்றாவது hattrick உலக சாதனைக்காக கடும் பயிற்சி பெற்று களத்தில் இறங்குகிறது..அந்த வீரர்கள் அனைவரும் ஜாம்பவான்கள்.. வேகப்பந்து புலிகள்... மட்டையைத் தொட்டால் போதும்... ரன்கள் குவியும்.. இங்கிலாந்தில் லார்ட்ஸ் மைதானத்தில் லாயிட் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்ய அழைக்கிறார், மனத்தில் ஒரு கணக்கு போட்டு...அது துல்லியமாக அரங்கேறியது...மேற்கிந்திய அணியின் ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மைக்கேல் ஹோல்டிங், மால்கம் மார்ஷல் பேய்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 54.4 ஓவர்களில் 183 ரன்கள் மட்டுமே எடுத்து சுருள்கிறது இந்தியா... சுனில் கவாஸ்கர் 2 ரன்னில் அவுட்டாக, அதிக பட்ச ரன் 34 ஶ்ரீகாந்த் எடுக்க, அவ்வளவுதான் இந்தியா என உலகமே கணித்தது.. மைதானத்தில் ஃபீல்டிங் செய்த கவாஸ்கர், சக வீரரிடம் நாம் பைனல் வந்ததே பெரிய விஷயம்..மேட்ச் சீக்கிரம் முடிந்ததும், வந்ததுக்கு உருப்படியா shopping போகலாம் என சொன்னதாக ஒரு செய்தியும் உண்டு ... ஆனால் அதற்கு முன்னால் டிரெஸிங் அறையில் கபில் வேறோர் திட்டமிடுகிறார்..அவர்களால், நம்மை 183 க்குள் வீழ்த்த முடிகிறதென்றால், நம்மால் அவர்களை அதற்கும் குறைந்த எண்ணிக்கையில் வீழ்த்த முடியாதா??? முயற்சிப்போம் என முடுக்கி விடுகிறார் பல்விந்தர் சிங் சந்துவை, மதன் லாலை... கில்லாடி ஓப்பனரான கார்டன் க்ரீனிட்ஜையே ஏமாற்றி சந்தில் சிந்து பாடினார் பல்வீந்தர்..”பயபுள்ள பயந்து போய் பந்த எங்கேயோ கொண்டு போய் போடறாப்ல “ என்று க்ரீனிட்ஜ் நினைக்க அந்த பந்து படாலென்று உள்ளே புகுந்து ஸ்டம்பை தட்டி விட, ஆரம்பித்தது கொண்டாட்டம்.. அடுத்து உள்ளே வந்தவர் மட்டையடி அசுரன் விவியன் ரிச்சர்ட்ஸ்..ரன் குவிக்கும் இயந்திரம் ரிச்சர்ட்ஸ் அசராமல் அடித்து அடித்து ஆட, அவர்களது ஸ்கோர் கடகடவென்று ஏற ஆரம்பிக்க, இந்த வயிற்றெரிச்சலை இங்கே உட்கார்ந்து பார்க்க வேண்டுமா , வாங்கப்பா போகலாம் என்று ஓரிரு இந்திய வீரர்களின் மனைவியர் ஹோட்டலுக்கு திரும்பி சென்று விட்டார்கள். வெற்றி வாய்ப்பு அந்த பக்கம் தானோ என அனைவரும் உயிரை கையில் பிடித்தபடி இமைக்க மறந்து பார்க்கையில், அஞ்சா நெஞ்சன் மதன்லால் வழக்கத்திற்கு மாறாக அரை அடி அதிகமாக எகிறி குதித்து , மெதுவாக ஒரு பந்து வீச , ரிச்சர்ட்ஸ் அதை அசால்ட்டாக நினைத்து ஸிக்ஸர் குறி வைத்து தூக்கி அடிக்க, மை காட், எங்கிருந்தோ கிட்டத்தட்ட 20 யார்டுகள் தூரம் ஓடி வந்து , அப்பந்தை கபில் கைகளுக்குள் கவர , மைதானம் மட்டுமல்ல, உலகமே, (கிராமத்தில் என் வீட்டில் தொலைகாட்சியில் பார்த்து கொண்டிருந்த நான் உள்பட) “கபில்” என அலறியது.. அதுதான் திருப்பு முனையாக இருந்திருக்க வேண்டும்... அடுத்தடுத்து ஹெயின்ஸ் , லாயிட், கோம்ஸ், பாக்கஸ் என விக்கட்டுக்கள் சரிய, இறுதியில் ஹோல்டி விக்கெட்டை மொஹிந்தர் அமர்நாத் எடுத்ததும் இந்தியா 3வது உலக கோப்பை , புருடென்ஷியல் கோப்பையை ,கபிலின் தலைமையில் , மிக கர்வத்துடன், 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்றெடுத்த பெருமையை உலகமே வாய் பிளந்து பார்த்தது... தான் சொன்னது முற்றிலும் தவறு என்று என்று இந்திய அணியை பற்றி இழிவாக எழுதிய Wisden ஆசிரியர் டேவிட் ஃப்ரித், தான் சொன்னதை அவமானத்தோடு வாபஸ் வாங்கி , உண்மையாகவே அந்த கட்டுரை பிரசுரமான பக்கத்தை கிழித்து வாயில் போட்டு மென்று, கூடவே கொஞ்சம் ஒயின் குடித்து அந்த காகிதத்தை முழுங்கினார். உலகின் மிகச்சிறந்த கேப்டனிடம் தோற்றதில் வருத்தமில்லை என விவியன் ரிச்சர்ட்ஸ், கபிலுக்கு புகழாரம் சூட்டிய தருணம்.. வீடு வீடாக சென்று நான் அவ்விரவில் இனிப்பு கொடுத்ததும் நினைவிருக்கிறது.. கபில் ஒரு சாமான்யன்..., பேசவே கூச்சப்படும், திறமையைத்தவிர கால்காசு கையில் இல்லாத, பின் தங்கிய கிராமத்து இளைஞன் , திறமையாலும் முயற்சியாலும் முன்னுக்கு வந்தவன்.. இடது கையை கத்தி போல் மார்பில் வைத்து காற்றை கிழித்து ஓடும் கம்பீரம், உயரத்திற்கு தாவி பந்தை எறியும் லாவகம், விக்கெட் எடுத்ததும் அலட்டிக் கொள்ளாமல் வலது கையை உதறி சிரிக்கும் பாங்கு...... கபில் ...லவ் யூ.... கல்லூரி புத்தகத்தில் உங்கள் புகைப்படம் ஒளித்து வைத்து பார்த்து ரசித்த அன்றும், இன்றும், என்றும், நீங்கள் என் ஹீரோ.... என் மனங் கொண்ட ஆசை ஒன்றுண்டு.. கபில் , உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். என் அலமாரியில் அதை இப்போது ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கபில்...🙂

கருத்துகள்