படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
உரைகல்லின் உரைக்கோவை
*********************************************
ஜனவரி 3
=========
--------------------------------------------------------------------------------------
சாவித்ரிபாய் புலே
****************************
பிறந்த தினம் ஜனவரி 3-1831
நினைவு தினம் மார்ச் 10-1897
--------------------------------------------------------------------------------------
இவரின் சிறப்பியல்பு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
**இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.
** பெண் உரிமை போராளி.
** இந்தியாவின் முதல் பெண் புரட்சியாளர்
** சமூக சீர்திருத்தவாதி மற்றும் கவிஞர்
பிறப்பிடம்
^^^^^^^^^^^^
சாவித்ரிபாய் புலே 1831 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் தேதி மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் கல்வி வாய்ப்பில்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்தார்.
கல்விக்கற்றல்
^^^^^^^^^^^^^^^^
சாவித்ரிபாய் புலேவின் 9 வயதில் 12 வயதான மகாத்மா ஜோதிபா புலெவிற்கு குழந்தை திருமணம் செய்து வைத்தனர். ஜோதிபா புலெ சாவித்ரிக்கு ஆசிரியர்.இவர் அடிப்படை கல்வியை தன் கணவரிடம் கற்றார். பிறகு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் கல்விக்கற்று ஆசிரியர் ஆனார். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு கல்வி புகட்டினார்.
பெண்கள் பள்ளியைத் தோற்றுவித்தல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஜோதிராவ் சமூக சீர்திருத்தவாதி. ஜோதிபா புலே 1851ஆம் ஆண்டு பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தோற்றுவித்தார்.இந்த பள்ளியில் சாவித்திரிபாய் புலே ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.சாவித்ரிபாய் புலே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.
இந்தப்பள்ளி தாழ்த்தப்பட்டவர்களுக்காக நடத்தப்பட்டது. சாவித்ரிபாயின் செயல்கள் உயர் சாதி மக்களை எரிச்சல் அடையச் செய்தது. இவர் மீது முட்டை, சாணி, தக்காளி, கற்களை எல்லாம் வீசினார்கள். இவர் எதற்கும் அஞ்சாமல் தம் கடமையைத் தொடர்ந்து செய்தார் இவர் 1851 ஆம் ஆண்டு மேலும் 5 பள்ளிகளைப் பல்வேறு இடங்களில் தொடங்கினார்.
சமூக சீர்திருத்தம்
^^^^^^^^^^^^^^^^^^^^
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கப்பட்ட கல்வியை கொடுப்பதற்கு இவர்கள் இருவரும் முயன்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் பொதுக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க தடை இருந்தது. சாவித்ரிபாய் வீட்டிலேயே கிணறு தோண்டி, தண்ணீர் கிடைக்க வழி செய்தார். தங்கள் வீட்டில் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர்.
இந்தியாவின் வட மாநிலத்தில் அக்காலத்தில் கவணரை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பதும், பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பதும் மக்களின் வழக்கத்தில் இருந்தது. இதை இவர் எதிர்த்து தன் இயக்கத்தின் மூலம் போராடினார்.
சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது.பாலியல் சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்றனர்.இது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக இருந்தது.
பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.முதன் முதலில் இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்று தனி இல்லத்தையும் புலே தம்பதி ஆரம்பித்தனர்.பால் ஹத்யா பிரதிபந்தக் கிருஹா’ (சிசுக்கொலைத் தடுப்பு இல்லம்) ஒன்றை தொடங்கினார்.
இவர்கள் விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார்.இவர் விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்.இவர் தீண்டாமை, குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடினார்.
மஹிளா சேவா மண்டல் அமைப்பு
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1852ஆம் ஆண்டு இவர் மஹிளா சேவா மண்டல் என்ற அமைப்பை தொடங்கினார்.மஹிளா சேவா மண்டல் என்பது பெண்கள் சேவை மையம்.இந்த மையம் மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.
உயர்ந்த பண்பு
^^^^^^^^^^^^^^^^
1876-1878 ஆம் ஆண்டு பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார் . பல மையங்களில் சாதி வேற்றுமை பாராட்டி ஒடுக்கப்பட்டவர்கள் என்று மறுக்கப்பட்ட நிலையில் இருவரும் இலவச உணவு வழங்கினர். பஞ்சத்தின்போது பெற்றோரை இழந்த 52 குழந்தைகளுக்காக உறைவிடப் பள்ளி தொடங்கினர்.
கவி புலமை
^^^^^^^^^^^^^^
சாவித்ரிபாய் புலே நல்ல கவிஞர்.இவர் மராத்தியத்தின் நவீன கவிதையை எழுதினார். இயற்கை, சமூகம், வரலாறு, கல்வி என்று பல்வேறு தளங்களில் இவரின் கவிதைகள் எழுதினார்.1892 ஆம் ஆண்டு சாவித்ரிபாய் கல்வியின் தேவை சாதி எதிர்ப்பு ஆகிய கருத்துகளை வலியுறுத்தும் கவிதைகளான கவிதை மலர்கள் என்ற நூலை வெளியிட்டார்.
மருத்துவமனை தொடங்குதல்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது. மருத்துவம் படித்து ராணுவத்தில் வேலைபார்த்து கொண்டிருந்த இவரின் மகன் யஸ்வந்த் தென் ஆப்பிரிகாவில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அவரை ஹடாஸ்பூரில் ஊருக்கு வெளியே மருத்துவமனை துவங்க வைத்தார் சாவித்ரிபாய் புலே. இவர் பல குழந்தைகளை தன் கையால் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்தார்.
இறுதிப்பயணம்
^^^^^^^^^^^^^^^^^
தமது 66ஆம் அகவையில் உயிர் காக்கப்போராடினார்.இவர் பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு மரணமடைந்தார். அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான்.
சாவித்ரிபாய் புலே 1897 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் தேதி மறைந்தார்.
நினைவஞ்சலி
^^^^^^^^^^^^^^^^
1998 ஆம் ஆண்டு இவரது நினைவாக மத்திய அரசு தபால்தலை வெளியிட்டது.

கருத்துகள்
கருத்துரையிடுக