பாட்டு ரசிகர்களுக்கு நல்லதொரு இசை விருந்து!
நூல் அறிமுகம் :
*திரைப்படப் பாடல்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு நீண்ட தொடர்பும் வரலாறும் இருக்கிறது!
தமிழர்களின் வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் பொருத்தமான, அர்த்தம் பொதிந்த பாடல்கள் நிறைய உண்டு! அவற்றை எங்கெங்கும் கேட்கலாம் !
* கோயில் திருவிழாக்கள், அரசியல் மேடைகள், பொங்கல் விழாக்கள், பள்ளி கல்லூரி விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கண்காட்சி வளாகங்கள், தனியார் விழாக்கள், காதுகுத்து முதல் கல்யாணம் வரை - திரைப்படப் பாடல்கள் ஒலிக்காத நிகழ்வுகளே கிடையாது!
*இதற்கும் மேலாக - திரைப்பாடல்களே ஒலிக்காத ஒரு சிற்றூரையோ, வெளியூருக்குச் செல்லும் பேருந்தையோ, சிறு வியாபாரம் செய்யும் பெட்டிக் கடையையோ, முடி திருத்தகத்தையோ, தையல் கடையையோ தமிழ் நாட்டில் கண்டுவிட முடியுமா?
* 60-களிலும் 70-களிலும் பிறந்து வளர்ந்த தமிழர்களிலே, "புத்தகம் பையிலே.... புத்தியோ பாட்டிலே!" என்று வாழ்ந்தவர்கள் தான் மிக அதிகம். அதில் இந்த நூலாசிரியர் தோழர் மணாவும் நானும் அடங்குவோம்!
*மதுரையில் எங்கள் அண்ணன் (பொ.கதிரேசன்) டிவிஎஸ் இசைக்குழுவில் டிஎம்எஸ் குரலில் பாடல்களைப் பாடுகின்ற மேடைப் பாடகராக இருந்தார்.
அந்த காலத்தில் திரைப்படங்களை பார்த்த கையோடு அந்தப் படங்களின் பாட்டுப் புத்தகங்களையும் வாங்கி வந்து விடுவார்.
அன்று அந்த சிறிய பாட்டுப் புத்தகங்களை ஆர்வத்தோடு படிக்கத் துவங்கிய எனது இசைப் பயணம் இன்று இந்த மாபெரும் பாட்டுப் புத்தகம் வரை கடந்து வந்துவிட்டது!
* தமிழ் திரையுலகில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாடல்கள் வெளிவந்துள்ளன. அந்த இசை மகா சமுத்திரத்தில் இருந்து தனக்கு மிகவும் பிடித்த, தான் நேசித்த 100 பாடல்களை தொகுத்து தந்திருக்கிறார் நூலாசிரியர்.
*மணா முன்னுரையில் தனது திரைப்படப் பாடல்களின் அனுபவங்களை தெரிவித்ததோடு தான் ஒரு ஊடகவியலாளராக இருப்பதால் தனக்கு கிடைத்த பேரனுபவங்களாக பல புகழ் பெற்ற பாடகர்களின் வீட்டுக்கே சென்று அவர்களை சந்தித்து, அத்தோடு அவர்கள் பாடிக் கேட்டும் மகிழ்ந்திருப்பதை விவரித்துள்ளார்!
* அதன் காரணமாக இந்த நூலை தொகுப்பதற்கு அவர் சரியான ஒரு தமிழ்ப் பாட்டு ரசிகர் என்பதையும் நம்மால் உணர முடிகின்றது!
அவரின் பேரனுபவங்கள் இதோ :
*எம்.எஸ்.சுப்புலட்சுமியை அவரது இல்லத்தில் சந்தித்து - காற்றினிலே வரும் கீதம் பாடலை கேட்டு மயங்கியிருக்கின்றார்!
* படுக்கையில் படுத்திருந்த சிதம்பரம் ஜெயராமன் இவருக்காக - சங்கீத சௌபாக்கியமே பாடிக் காட்டியதை நினைவு கூறுகின்றார்!
*டி.எம்.சௌந்தரராஜன் வீட்டில் அவரோடு உரையாடி மகிழ்ந்த படி - யார் அந்த நிலவு பாடலை சிவாஜியின் குரலில் பாடிக் காட்டியதை விளக்குகின்றார்!
* உட்லண்ட்ஸ் ஹோட்டலின் பிரத்யேக இருக்கையில் அமர்ந்து கொண்டு பி.பி.சீனிவாஸ் - மயக்கமா கலக்கமா என்ற மந்திர சொற்களின் பாடலை கேட்ட அனுபவத்தை தந்துள்ளார்!
*குழந்தைகளின் இனிய குரலில் பாடும் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் இல்லத்தில் - சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா? என்ற பாடலை அவர் பாடக் கேட்டு மகிழ்ந்ததை தெரிவிக்கின்றார்!
* எஸ்.ஜானகி அம்மாவின் வீட்டில் - சிங்கார வேலனே பாடலை அவர் பாடக் கேட்ட தனது பாக்கியத்தையும் பகிர்ந்துள்ளார்!
*இந்த நூலில் 100 திரைப்பட பாடல்களை தேர்ந்தெடுத்து அவற்றின் விளக்கத்தையும், அவற்றின் இலக்கிய நயத்தையும், அதை எழுதிய கவிஞர்களின் எண்ண ஓட்டத்தையும், அதன் இசையின் சிறப்பையும் விவரமாக தந்துள்ளார்!
* நூலின் ஆரம்பமே மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பாட்டுக் கோட்டையில் இன்றும் கோலோச்சும் பாடல் - தூங்காதே தம்பி தூங்காதே!
1958-ம் ஆண்டு வெளிவந்த நாடோடி மன்னன் திரைப்படப் பாடல். 68 ஆண்டுகள் ஆகியும் இன்றும் உயிர்ப்போடும் உணர்வோடும் வாழும் காவியம்!
சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா! என்ற பொசுக்குகின்ற வரிகளெல்லாம் இன்றைய தணிக்கைக் குழுவின் கத்திரியிலிருந்து தப்பிக்க முடியுமா?
* 1961-ம் ஆண்டு வெளியான அரசிளங்குமரி திரைப்படத்தில் பட்டுக் கோட்டையார் எழுதிய - சின்னப் பயலே சின்னப் பயலே சேதி கேளடா!.. பாடலின் ஒவ்வொரு வரிகளும் வைர வரிகள்! மணாவுக்கு பிடித்த வரிகள் - தனி உடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா! நீ தொண்டு செய்யடா! தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!
இதே பாடலில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் - வேப்ப மர உச்சியிலிருந்து பேயொன்னு ஆடுதின்னு நீ விளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க! உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வப்பாங்க!... என்ற மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சார வரிகள்...!
பட்டுக்கோட்டையார் இந்தப் பாடல் வரிகளில் இன்றும் வாழ்கிறார்!
* நூலாசிரியர் மணா கவிஞர் கண்ணதாசனின் மிகப்பெரிய ரசிகர் என்பதை இந்த தொகுப்பிலிருந்து அறிந்து கொண்டேன். மொத்தமுள்ள 100 பாடல்களில் ஏறக்குறைய 50 பாடல்களாவது கண்ணதாசனின் பாடல்கள் தான் !
அவற்றில் எனது தேர்வு :
வாழ நினைத்தால் வாழலாம் - பலே பாண்டியா (1962)
அச்சம் என்பது மடமையடா - மன்னாதி மன்னன் (1960)
கடவுள் ஏன் கல்லானார் - என் அண்ணன் (1970)
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் - நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)
மனிதன் மாறி விட்டான் - பாவமன்னிப்பு (1961)
மயக்கமா கலக்கமா - சுமைதாங்கி (1962)
பூவாகி காயாகி கனிந்த மரம் - அன்னை (1962)
பிறக்கும் போதும் அழுகின்றாய் - கவலை இல்லாத மனிதன் (1960)
மலர்களைப் போல் தங்கை - பாசமலர் (1961)
அதோ அந்த பறவை போல - ஆயிரத்தில் ஒருவன் (1965)
* வாலிபக் கவிஞர் வாலி எழுதிய சிறந்த பல பாடல்கள் இந்த தொகுதியில் இல்லாதது எனது மனக் குறை..!
கண்ணதாசன் தத்துவப் பாடல்களைத் தந்தவர்! வாலியோ தைரியம் கொடுக்கும் பாடலை தந்தவர்!
புத்தன், ஏசு, காந்தி பிறந்தது பூமியில் எதற்காக? தோழா... ஏழை நமக்காக எனப் பாடிச் சென்றவர்! நம்பிக்கை வரிகளை விதைத்தவர் வாலி!
நூலில் காணும் வாலியின் பாடல்களிலிருந்து :
இதோ எந்தன் தெய்வம் - பாபு (1974)
தரை மேல் பிறக்க வைத்தான் - படகோட்டி (1964)
உள்ளம் என்றொரு கோயிலிலே - அன்பே வா (1966)
வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா - எதிர் நீச்சல் (1968)
தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா - ஒளிவிளக்கு (1968)
கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி (1964)
புதிய வானம் புதிய பூமி - அன்பே வா (1966)
* மக்கள் கவிஞர் கல்யாண சுந்தரம், கவியரசு கண்ணதாசன், வாலிபக் கவிஞர் வாலி ஆகிய மூன்று பாடலாசிரியர்களோடு இன்னும் சில பாடலாசிரியர்களின் பாடல்களும் நூலில் உண்டு.
உவமைக் கவிஞர் சுரதா எழுதிய அமுதும் தேனும் எதற்கு - தைப் பிறந்தால் வழி பிறக்கும் (1956)
உடுமலை நாராயண கவி எழுதிய ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக் கோனே - பராசக்தி (1952)
கவி. கா.மு. ஷெரிப் எழுதிய வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் - நான் பெற்ற செல்வம் (1956)
மருதகாசி எழுதிய சிரிப்பு, இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு - ராஜா ராணி (1956)
பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய சங்கே முழங்கு - கலங்கரை விளக்கம் (1965)
புலமைப் பித்தன் எழுதிய சிரித்து வாழ வேண்டும் - உலகம் சுற்றும் வாலிபன் (1973)
* இத்தோடு இன்னும் பல இனிய பாடல்களும் புதிய பாடலாசிரியர்களும் இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருந்தால் இதன் சிறப்பு இன்னும் அதிகரிக்கும். இதன் அடுத்த தொகுப்பில் அவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்.
அந்தப் பரிந்துரைப் பாடல்கள் :
மலேஷியாவிலிருந்து எம்ஜியாரின் தீவிர ரசிகை ரோஷனா பேகம் எழுதி அனுப்பி அது பாடலாக வெளியானது.
குடியிருந்த கோயில் (1968) படத்தில் வந்த -
“குங்குமப் பொட்டின் மங்களம், நெஞ்சமிரண்டின் சங்கமம்”.
கண்ணதாசனின் உதவியாளர் பஞ்சு அருணாசலம் எழுதிய இலக்கிய நயம் சொட்டும் பாடல். கலங்கரை விளக்கம் (1965) படத்தில் வந்த - பொன்னெழில் பூத்தது புது வானில்!
கவிஞர் முத்துக்கூத்தன் அரசியல் நெடியோடு எழுதிய பாடல். அரசகட்டளை (1967) படத்தில் வந்த - ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை!
வாலியின் கவிதை வரிகளை சரிபார்த்து தரும் அளவிற்கு புலமை பெற்ற கவிஞர் முத்துலிங்கம் எழுதிய பாடல். உதய கீதம் (1985) படத்தில் வந்த - சங்கீத மேகம், தேன் சிந்தும் நேரம்!
இந்த பட்டியல் இன்னும் நீளமாக போகலாம்!
* தமிழ்த் திரைப்படப் பாடல் ரசிகர்களுக்கு இந்த நூல் நல்லதொரு இசை விருந்து!
மாபெரும் பாட்டுப் புத்தகம் ஒரு மாபெரும் பஃபே விருந்து!
நூலாசிரியர் தோழர் மணாவுக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும் !
அவரது பாடல் தேடல் தொடரட்டும்!
- பொ. நாகராஜன், சென்னை - 12.01.2026
************
நூல்: மாபெரும் பாட்டுப் புத்தகம்!
ஆசிரியர்: மணா
அந்திமழை பதிப்பகம்
பக்கங்கள்: 272
விலை: ரூ. 300/-
தொடர்புக்கு: 9952444540
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண்கள் - 483, 484-ல் இந்த நூல் கிடைக்கும்.
#தமிழகத்_தடங்கள் #மறக்

கருத்துகள்
கருத்துரையிடுக