படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

திரைப்பட வரலாற்றில் சில பாடல்கள் வெறும் வரிகளாகவோ, இசையாகவும் மட்டும் நிலைத்து நிற்பதில்லை. அவை ஒரு காலத்தின் சாட்சியாக, மனித மனசாட்சியின் குரலாக உருவெடுக்கின்றன. அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பில், கவியரசர் கண்ணதாசனின் வரிகளில் உருவான "அம்மம்மா தம்பி என்று நம்பி..." என்ற பாடல், உறவுகளின் முகத்திரையைக் கிழிக்கும் ஒரு சமூக ஆவணம். அம்மம்மா தம்பி என்று நம்பி... ​வாழ்க்கை ஒரு நாடகம் என்பார்கள். ஆனால், மேடையில் நாடகம் போடுபவன் நிஜமாக வாழ நினைக்கிறான்; நிஜத்தில் வாழ்பவர்களோ மேடை கலைஞனை விடவும் நுணுக்கமாக வேஷம் போடுகிறார்கள். இந்த முரண்பாட்டைத்தான் இப்பாடல் மிக வலிமையாகப் பேசுகிறது. ​ ​"அம்மம்மா..தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் தாய் என்றும் தந்தை என்றும் தன்னை நினைத்தான்" ​பாடல் ஒரு தம்பியின் துரோகத்தை நோக்கித் தொடங்குகிறது. இங்கு 'நம்பி' என்ற வார்த்தை மிக முக்கியமானது. உறவுகளுக்கு இடையே ஆதாயம் புகுந்துவிட்டால் அங்கு அன்பு செத்துவிடுகிறது. பெற்றோர் இல்லாத நிலையில், ஒரு தம்பிக்குத் தாயாகவும் தந்தையாகவும் மாறித் தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒருவனின் உள்ளம், அந்தத் தம்பியால் சிதைக்கப்படும்போது எழும் ஆற்றாமை இது. ​ ​"கையில் வைத்து காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றி மிக்க நாய்கள் உள்ள நாடு..." ​கவிஞர் இங்கே மனிதனை விட நாயை மேன்மைப்படுத்துகிறார். ஒரு துண்டு ரொட்டிக்கு வாலாட்டும் நாயிடம் இருக்கும் நன்றியுணர்வு கூட, தன் வாழ்வையே செதுக்கிய அண்ணனிடம் தம்பி காட்டவில்லையே என்ற ஆதங்கம் இது. "சொந்தமின்றி பந்தமின்றி வந்த வழி நினைவுமின்றி" எனத் தம்பியைச் சாடும்போது, மனிதர்கள் மிருகங்களை விடக் கீழிறங்கிப் போவதை வரிகள் சுட்டிக்காட்டுகின்றன. ​ ​"ராம நாடகத்தில் மூன்று தம்பிகளின் உள்ளம் கண்டேனே நல்ல பாரதத்தில் நான்கு தம்பிகளை நானும் கண்டேனே" ​இலக்குவன், பரதன், சத்ருக்னன் என ராமனுக்காக வாழ்ந்த தம்பிகளையும்; பாண்டவர் ஐவரின் ஒற்றுமையையும் இதிகாசங்கள் போற்றுகின்றன. ஆனால், இன்றைய உலகம் எதை நோக்கிச் செல்கிறது? "அது நாடகமா? இது நாடகமா?" என்ற கேள்வி மிக ஆழமானது. மேடையில் நடக்கும் ராமாயணம் நாடகம் என்றால், நிஜ வாழ்க்கையில் அண்ணனைப் பிரிந்து செல்லும் தம்பியின் செயல் அதைவிடப் பெரிய நாடகமாகத் தெரிகிறது. "நான் இது போன்ற வேஷத்தில் வந்ததில்லையே" என ரங்கதுரை பாடும்போது, ஒரு கலைஞனின் நேர்மை வெளிப்படுகிறது. ​"தங்கை என்னும் இளைய கன்று தாய் வீடு வந்ததென்று... கொண்டவனை பிரிந்து வந்து கோலம் கொண்டு நிற்பதனை..." ​அண்ணன்-தம்பி சண்டைக்கு இடையில், புகுந்த வீட்டில் கஷ்டப்பட்டுத் தாய் வீடு திரும்பும் ஒரு தங்கையின் நிலை பரிதாபமானது. அவளைக் காக்க வேண்டிய தம்பி, அண்ணனைப் பிரிந்து நிற்பது அந்தக் குடும்பத்தையே சிதைக்கிறது. சீதை பட்ட துயரத்தை இங்கே ஒப்பிடுகிறார் கவிஞர். சீதைக்காகத் துடித்த இலக்குவனைப் போன்ற தம்பிகள் இன்று இல்லையே என்ற ஏக்கம் இதில் ஒலிக்கிறது. ​ ​"அவன் ராஜாதி ராஜனுக்கு பிள்ளை அல்லவோ இந்த ராஜபார்ட் ரங்கதுரை ஏழை அல்லவோ" ​முடிவாக, வசதி வந்தவுடன் தம்பி தன்னை "ராஜா" என நினைத்துக் கொள்கிறான். ஆனால், நாடகத்தில் ராஜாவாக நடிக்கும் ரங்கதுரை நிஜத்தில் ஏழைதான். ஆனாலும் அந்த ஏழைக்குத்தான் "பாசம்" என்ற செல்வத்தின் மதிப்பு தெரிகிறது. ரத்த பாசத்தை விடப் பணமே பெரிதென நினைக்கும் தம்பிக்கு முன், கலைக்காகவும் அன்புக்காகவும் வாழும் ஒரு கலைஞனின் கம்பீரம் இங்கே உயர்ந்து நிற்கிறது. ராம சரிதையின் இரு நெகிழ் உணர்ச்சிகளை துணையாக கொண்டு கவிஞர் வரிகளில் விளையாட TMS கந்தர்வ குரலில் உருக்க நடிப்பின் கலாவித்தகர் உள்ளுக்குள் இறக்க வைக்கும் அந்த உன்னதம் ..இந்த பூமி இன்னும் எத்தனை யுகமோ..வாய்ப்பே இல்லை.. அவர்களோடு முடிந்து போன சகாப்தம்.ஆனால் சாகா வரம் பெற்ற... ​ காலங்கள் கடந்தும் கண்ணீர் வரவழைப்பதற்குக் காரணம் இதிலுள்ள வரிகளின் உண்மைத்தன்மை. உறவுகள் கசக்கும்போதும், மனிதநேயம் மரிக்கும்போதும் இந்தப் பாடல் ஒரு பாடமாக நம் முன்னே நிற்கும். ​ செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்