*சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாளில்..,*
இந்தியாவின் முதல் ராணுவத்தை கட்டமைத்து இந்தியர்களின் ஆயுதக் கையாளுமையை உலகறிய செய்தவர்.
மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைத்துப் பார்க்கும் முயற்சி அது.
"எனக்கு ரத்தம் கொடுங்கள், உங்களுக்கு சுதந்திரத்தை பெற்று தருகிறேன்" என கூறிய இந்திய புரட்சி நாயகன் நேதாஜி, இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்கிலேயரை எதிர்த்து, இராணுவ ரீதியாக போராடிய ஈடு இணையற்ற மாவீரன். சற்று பின்னடைவை சந்தித்தாலும், அவரது வீரம் என்றென்றும் பேசப்படும்.
அவர் வாழ்வில் தோல்விகளே மிக அதிகம்; எனினும் விடாமுயற்சிக்கு மிக உயர்ந்த எடுத்துக்காட்டு.
இந்தியர்களுக்கு தெரிந்த ஒரே வழிமுறை ‘அஹிம்சை’ மட்டுமே என்று இறுமாந்திருந்த வெள்ளையரின் எண்ணப்போக்கை ஆயுதப் போராட்ட வாயிலாக மாற்றியமைத்தவர்!
அவரது போராட்டங்கள் மற்றும் ஐ.என்.ஏ (INA) மீதான விசாரணைகள் தான் பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேற மிக முக்கியமான காரணியாக அமைந்தது என்பதைப் பல வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, டெல்லி செங்கோட்டையில் வைத்து ஐ.என்.ஏ அதிகாரிகள் மீது பிரிட்டிஷ் அரசு நடத்திய விசாரணைகள் நாடு முழுவதும் மிகப்பெரிய தேசபக்தி அலையை உருவாக்கியது.
தங்களது சொந்த ராணுவமே தங்களுக்கு எதிராகத் திரும்புவதை பிரிட்டிஷாரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கிளமெண்ட் அட்லி பிற்காலத்தில் இந்தியா வந்தபோது, காந்திஜியின் அகிம்சைப் போராட்டத்தை விட, நேதாஜியின் ராணுவ நடவடிக்கைகளும்
அதனால் இந்திய வீரர்களிடையே ஏற்பட்ட கிளர்ச்சியுமே தாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற முக்கியக் காரணம் என்று ஒப்புக்கொண்டதாக பதிவுகள் உள்ளன.
எனவே, நேதாஜி போர்க்களத்தில் நேரடியாக வெற்றி பெறாவிட்டாலும், இந்திய வீரர்களின் மனங்களை வென்றதன் மூலம், இந்தியாவின் சுதந்திரத்தை உறுதி செய்தார் என்பதுதான் வரலாற்று உண்மை.
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

கருத்துகள்
கருத்துரையிடுக