மரபின் வேர்கள் (சொல்லாய்வுக் கவிதைகள்) நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
நூல் : மரபின் வேர்கள்
(சொல்லாய்வுக் கவிதைகள்)
நூல் ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : வசந்தா பதிப்பகம்,
21/16-6, ஆர்.கே. இல்லம், வசந்த நகர்,
ஓசூர்-635 109. கிருட்டினகிரி மாவட்டம்,
அலைபேசி : 94434 58550.
பக்கங்கள் 160, விலை ரூ. 200
******
தமிழகத் தமிழாசிரியர் கழகத் தலைமைப் பெரும்புலவர் ப,அரங்கசாமி அவர்கள் அற்புதமான அணிந்துரை நல்கி உள்ளார். நூலாசிரியர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் என்னுரையும் எழுதி உள்ளார். மரபுக்கவிதை எழுதுவதில் முடிசூடா மன்னராக விளங்குபவர். மரபுக்கவிதை போட்டி எங்கு நடந்தாலும், கடல்கடந்து நடந்தாலும் முதல்பரிசை வெல்பவர். மரபுக்கவிதை வடிப்பதில் நன்கு புலமை பெற்றவர்.
மதுரைக்கு வந்தபோது நூலாசிரியர் அவர்களைச் சந்தித்து வரவேற்று உரையாடினேன். அப்போது அவர் புலனம், முகநூல் இவற்றில் ஈடுபடவில்லை என்றார்கள். அவரிடம் நான் எடுத்து இயம்பினேன், மிகவும் எளிது, கற்றுக்கொள்ளுங்கள், உங்கள் படைப்பு உலகெலாம் பரவும் என்றேன்.
இன்று நன்கு கற்று, கவிதைக்காக புலனக்குழு தொடங்கி மரபுக்கவிதையை வளர்த்து வருகிறார். பல்வேறு இதழ்களிலும் குறிப்பாக சிற்றிதழ்களிலும் மரபுக்கவிதை எழுதி வரும் மாண்பாளர்.
சிற்றிதழ்கள் பல கொரோனா காலத்தில் நின்றுவிட்டன. சிலமட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. அந்த சிலவும் நிற்கும்வண்ணம் அஞ்சல்துறை பல கெடுபிடிகள், அபராதங்கள் விதித்து, சிற்றிதழ்களின் குரல்வளையை நெறித்து வருகிறது. தமிழர்கள் இனி இதற்காகவும் குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும். சிற்றிதழ்கள் தான் தமிழை, இலக்கியத்தை வளர்த்து வருகின்றன.
நூலாசிரியர் 28 ல்கள் எழுதி உள்ளார். அனைத்துமே மரபுக்கவிதை நூல்கள் தான். புதுக்கவிதைக்கு மாறாத மரபு பற்றாளர், கொள்கையாளர். இவரால் தான் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது.
கவிதையின் தலைப்பிலே அவரது தமிழாற்றல் புலப்படுகின்றது. மனதை-மனத்தை, மனமார-மனமாற, மங்கலம்-மங்களம், தன்னலம்-தந்நலம், கைம்மாறு-கைமாறு, நாள்கள்-நாட்கள், ஏழ்மை-ஏழைமை - இப்படி தலைப்பிலேயே சொல் விளையாட்டு போல, கவிதை விளையாட்டு விளையாடி உள்ளார். பதச்சோறு சில மட்டும், உங்கள் பார்வைக்கு.
மரம் - மறம்
இடையினமே நம்மினத்தைக் காக்கும்; வானவில் இருள்நிறத்தில் கூடுகின்ற முகில்கூட்டத்தைத்
தடைசெய்து மழையாகப் பொழிய வைத்துத்
தன் காலால் மண்ணரிப்பைத் தடுத்து வைக்கும்
குடையாக நிலந்தன்னைக் காத்து நின்று,
குளிர்வெயிலைச் சமன்செய்து பாதுகாக்கும்
படையாகிக் காற்றினிலே கலக்கும் மாசைப்
பான்மையுடன் தூயதாக்கும் மரங்கள் தாமே.
மரம் மழைக்குக் காரணமாகின்றது. மரம் வளர்த்தால் மழை பெய்யும், மரம் வெட்டினால் மழை பொய்க்கும் என்று மரத்தின் அறத்தை மரபுக்கவிதையால் வடித்து மரத்திற்கு மகுடம் சூட்டி உள்ளார் நூலாசிரியர்.
இப்படி பல்வேறு தலைப்புகளில் கவிதை வடித்து மரபின் மீது வாசகர்களுக்கு ஈர்ப்பை வரவழைத்து வெற்றி பெறுகின்றார்.
மரபின் வேர்கள் என்ற நூலின் தலைப்புக்கு ஏற்ப மரபின் வேர்கள் ஆழமானவை, உறுதியானவை. வேர்கள் தான் மரத்திற்கு உறுதி. அதுபோல மரபுக்கவிதையே தமிழ்மரத்தின் வேர்கள் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக மரபுக்கவிதை விருந்து வைத்துள்ளார்.
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு நன்று. முகப்பு ஓவியம் மரபை நினைவூட்டுகின்றது, நூபின்அட்டையில் லாசிரியர் கம்போடியா நாட்டின் உயரிய விருதினை அங்கு சென்று பெற்ற புகைப்படம் உள்ளது. பாராட்டுகள், வாழ்த்துகள் ஐயா.
ஐவகை நிலங்கள் பற்றியும் பாடி உள்ளார். தனித்தனியே தலைப்பிட்டு எழுதி உள்ளார். தமிழரின் வேர் ஐவகை நிலம் தானே. பதச்சோறாக நெய்தல் திணையிலிருந்து :
நெய்தல் திணை
மீன்கோட் பறையில் ஒலியெழுப்பி
விளரி யாழில் இசையெழுப்பி
தேன்போல் செவ்வழிப் பண்ணிசைத்து
சேர்ந்து பரதவர் ஆடினரே!
உப்பு விளைவித்து விற்பதுவும்
உறுமீன் பிடித்து விற்பதுவும்
உப்பில் மீனை உணக்குவதும்
உரிய தொழிலாம் நெய்தவர்க்கே!
நெய்தல் நிலத்தை கவிதை வரிகளால் காட்சிப்படுத்தி மீனவரின் வாழ்வை உணர்த்தி உள்ளார்.
மீனவரின் வாழ்வாதாரமான மீன்பிடித்தலை செய்யவிடாமல் துன்புறுத்தி வருகிறான் இலங்கைக்காரன். சுண்டைக்காய் நாட்டுக்காரன் தினமும் கைது செய்கிறான் தமிழக மீனவனை. தட்டிக்கேட்க நாதியில்லை. மீனவரை கைது செய்து சிறையிலடைத்து படகுகளை கைப்பற்றி வரும் ரவுடி இலங்கைக்கு கோடிகளை தாரைவார்த்து பாம்பை வளர்த்து வருகின்றது ஒன்றிய அரசு. கவிதையைப் படித்தவுடன் இவையும் நினைவிற்கு வந்தது.
தலை
தலை சரியாய் இருந்தால்தான் வீடும் நாடும்
தள்ளாட்டம் இல்லாமல் நிமிர்ந்து நிற்கும்
தலையாட்டம் இன்றி, வால் தான்ஆட்டம் போட்டால்
தடுமாற்ற மாகியெல்லாம் தலைகீழ் ஆகும்,
தலையென்றால் தலைமையாகும் முத்துமாகும்
தலைவர்கள் நல்லோராய் இருந்தால் எந்த
நிலைவரினும் நம்நாடு தாழ்ந்திடாது
நிலையோங்கும் தலைநிமிர்ந்து நிற்கும் பாரில்!
தலை சரியாக இருந்தால்தான் நாடு சரியாக இருக்கும் தலை மக்கள் நலன் பெரிதாகப் பாராமல் தன்நண்பர்கள் நலமே முக்கியம் என்று செயல்பட்டால் நாடடுமக்கள் திண்டாட வேண்டியது தான்- பொதுசொத்தை எல்லாம் நண்பனுக்கு தாரைவார்க்கும் அவலம் ஒழிய வேண்டும். இப்படி பல சிந்தனைகளை விதைத்தது கவிதை.
இப்படி கருத்துள்ள கவிதைகள் நூல் முழுவதும் நிறைந்துள்ளது. நூலாசிரியர் மரபுச்செம்மல் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்களுக்கு பாராட்டுகள்.

கருத்துகள்
கருத்துரையிடுக