படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

Karthik பராசக்தி திரைப்படம் கட்டமைக்கட்ட விதமே நன்று! முழுக்க முழுக்க பிரச்சார தொனியோ அல்லது டாகுமெண்டரி தன்மையோ வந்துவிடாமல் ஒரு வணிக படத்தின் கூறுகளை அடுக்கி அதற்குள் சில உண்மைகள் கலந்த புனைவை உண்டாக்கியிருக்கிறார். இதன் தலையாய நோக்கம் வணிகம்தான். அதில் மறுப்பில்லை, அதனூடாக எத்தனையளவு மொழிப்போரின் தீவிரத்தைச் சொல்லமுடியுமோ அதைச் சொல்லியும் இருக்கிறார்கள். நிச்சயம் அதற்குப் பாராட்டுகள். நீதி பரவட்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் தீ பரவட்டும் என்றேதான் காதுகளில் ஒலிக்கிறது. நெருப்பை வைக்கோல் போட்டு அணைத்து விடும் முயற்சிதான் இந்த நீதி பரவட்டும் திருத்தங்கள் எல்லாம். சிவகார்த்திகேயனை விடவும் அதர்வா துடிப்புமிக்க இளைஞனாக சாலப் பொருந்துகிறார், நன்றாகவே நடித்திருக்கிறார். போராட்டம் வேண்டாம் சண்டை வேண்டாம் என்று அமைதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் வெகுண்டெழும் இடைவேளைக் காட்சி கிட்டத்தட்ட பாட்சா டெம்ப்ளேட்தான். அதனை எத்தனை ரௌத்திரமாக திகழ வைக்கமுடியுமோ அத்தனைச் சாத்தியப்படுத்திவிட்டார் சுதா. "கொளுத்துடா தம்பி" பல்வேறு மொழிகளில் இருந்து நட்சத்திரங்களை அழைத்து வந்து நடிக்க வைக்கும் pan india கலாச்சாரத்தில் இந்தத் திரைப்படமும் அடங்கும். அதனை ஏற்றுக்கொள்ளும் அளவில் கதையமைத்த விதம் நன்று, அனைவர்க்கும் கதைக்குள் இடம் இருந்தது. ரவிமோகன் ஏற்கனவே பகவான் திரைப்படத்தில் எதிர்நிலை கதாபாத்திரமாகவும் செய்திருப்பார். இதில் நின்று ஆடியிருக்கிறார்! "மொழியை அழித்தால், அடையாளம் அழியும், அடையாளம் இல்லாதவரை அடிமை ஆக்கிவிடலாம், தாய்மொழியை அழிப்பது சிந்தனை அழிப்பது, சிந்திக்க முடியவில்லை என்றால் எப்படி முன்னேறுவது!" அப்படியாக மொழி குறித்தான பல வசனங்கள் கத்திக்கூர்மை. இன்றைய தலைமுறையிடம் சென்று சேர்வது அவசியம். CBSE பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறதே! நம் பள்ளியிலும் கற்பித்தால் என்ன என்பதுதான் கேள்வி. ஆம் CBSE பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால் அங்கு அது விருப்பத் தேர்வு. அரசுப் பள்ளிகளில் ஆங்கிலமும் கற்பிக்கப்படுகிறது எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுகிறார்கள்? ஹிந்தியை மட்டும் சரளமாக எழுத பேச கற்றுக்கொண்டு மேம்பட்டு விடுவோம் என்று எதை வைத்து நம்புகிறீர்கள். ஹிந்தி கற்றுக்கொண்டால் மத்திய அரசு வேலைகள் எளிதாகக் கிடைக்கும் என்பது ஒரு கற்பனை. "திரைப்படத்தில் உன் ஹிந்தி சரியில்லை என்று நாயகனுக்கு வேலை மறுக்கப்படும்" நிஜம் என்பது இதுதான். TVK ஆதரவாளர்கள் இதனை ஏதோ திமுக பிரச்சார படம் என்று நினைத்து "தீயசக்தி தீயசக்தி" என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள். இதில் சக்தி என்பது சமஸ்கிருதம். ஆற்றல்தான் தமிழ். சமஸ்கிருதத்தின் எழுத்துருவைப் போல தேவநாகிரி வடிவத்தில் இருப்பதால் நாடுமுழுக்க ஒரே மொழியாக ஹிந்தியை அறிவிக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்திருக்கிறார்கள் அன்று. நாம் பெரிதும் மதிக்கக் கூடியவர்களே மொழி நிலைப்பாட்டில் திணறி இருக்கிறார்கள். மொழித் திணிப்பின் விபரீதம் அறியாதவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்தியா இந்தியாவாக உருப்பெற்ற காலத்தின் அரசியல் சூழல், நிலப்பரப்பு, கலாச்சார வேற்றுமை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு யோசிக்கும் போது மொழி நிலைப்பாட்டின் அறிவுப் போதாமைகளை புரிந்துகொள்ள முடிகிறது. இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திலும் அந்தப் போதாமைகளை தூக்கிப்பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பதில் பொருளே இல்லை. அப்படியிருந்தும் நாடு முழுக்க இந்தியைத் திணிக்க எண்ணுவது எத்தனை கயமைத்தனம்! அதில் விழுந்த ஒரு சவுக்கடி இந்த பராசக்தி.

கருத்துகள்