சிவாஜி கணேசன் அவர்கள் இரவு பகலாகப் படங்களில் நடித்துச் சம்பாதித்த பணத்தைப் பாதுகாப்பான ஒரு தொழிலில் முதலீடு செய்ய அவர் விரும்பினார்.
அந்தச் சமயத்தில்தான் கும்பகோணத்தில் பிரபலமான 'ராமன் டிரான்ஸ்போர்ட்' நிறுவனத்திற்குச் சொந்தமான 100 பேருந்துகளை விற்பனைக்கு வைத்திருப்பதை சிவாஜி அறிந்தார். அன்றைய காலக்கட்டத்தில் 100 பேருந்துகள் என்பது மிகப்பெரிய சாம்ராஜ்யம். அந்தப் பேருந்துகளை மொத்தமாக விலைக்கு வாங்கி, ஒரு போக்குவரத்து அதிபராக மாற அவர் திட்டமிட்டார்.
பட்டிக்காடா பட்டணமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் நடிகர்திலகத்தை சந்தித்து பேசியிருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் சோ.பாலகிருஷ்ணன்.
அப்போது அவரிடம் சிவாஜி 100 பஸ்களை வாங்கி விடலாம் என்ன விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
இதற்காகத் தன் உழைப்பில் வந்த பெரும் தொகையை முதலீடு செய்யவும் தயாரானார்.
தெய்வமாக மதித்த தலைவரிடம் ஆலோசனை
சிவாஜி கணேசன் அவர்கள் காமராஜரைத் தனது 'கண்கண்ட தெய்வமாக' கருதியவர். எத்தகைய முடிவாக இருந்தாலும் காமராஜரிடம் ஒருவார்த்தை ஆலோசிப்பது அவரது வழக்கம். இந்த 100 பேருந்து விவகாரத்தையும் எடுத்துக் கொண்டு காமராஜரைச் சந்தித்தார். ஆனால், சிவாஜியின் திட்டத்தைக் கேட்ட பெருந்தலைவர், எவ்விதத் தயக்கமும் இன்றி, "அந்த பஸ்களை வாங்க வேண்டாம்" என்று ஒற்றை வரியில் முட்டுக்கட்டை போட்டார்.
சிவாஜியின் குடும்பத்தினருக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருந்தது. "நல்ல லாபம் தரும் தொழிலைத் தலைவன் ஏன் தடுத்தார்?" என்ற கேள்வி அவர்கள் மனதில் நிழலாடியது.
காலம் சொன்ன விடை
ஆனால், காமராஜரின் அந்தத் தடையின் பின்னணியில் இருந்த தீர்க்கதரிசனம் சில காலத்திலேயே வெளிப்பட்டது.
அப்போது திமுக அரசு புதிய அரசின் கொள்கை முடிவின்படி, தனியார் வசம் இருந்த பேருந்துகள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டன.
ஒருவேளை காமராஜரின் பேச்சை மீறி சிவாஜி அந்த 100 பேருந்துகளை வாங்கியிருந்தால், அரசுடைமையாக்கப்பட்டதன் மூலம் அவர் தனது மொத்த முதலீட்டையும் இழந்து, ஒரு பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பார்.
"நல்லவேளை காமராஜரின் ஆலோசனையினால் நான் பிழைத்தேன். என் வாழ்நாளில் அவரை மறக்கவே முடியாது" என்று சிவாஜி கணேசன் அவர்கள் நெகிழ்ச்சியுடன் சொல்லியிருக்கிறார்.
இந்த விஷயத்தை தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த சோ பாலகிருஷ்ணன் சிவாஜியின் பவளவிழாவில் குறிப்பிட்டு இருந்தார்.
செந்தில்வேல்

கருத்துகள்
கருத்துரையிடுக