நூல் : முப்பது நாட்களில் முன்னேற்றம் நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
நூல் : முப்பது நாட்களில் முன்னேற்றம்
நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : குமரன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர்,
சென்னை.
பக்கங்கள் 110, விலை ரூ. 100
******
நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள், வியர்வையை பூக்களாக்கி உழைக்கும் நண்பர்கள் அனைவருக்கும் காணிக்கை ஆக்கி இருப்பது சிறப்பு. ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் நிறுவனத் தலைவர் கே.இராமசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். நெய்வேலி பழுப்பு நிறுவனத்தின் துணை பொது மேலாளர் அ.பெருமாள்சாமி அவர்களும் வாழ்த்துரை வழங்கி உள்ளார். 'முன்னேற்றத்தின் திசை நோக்கி' என்ற தலைப்பில் நூலாசிரியர் சிறந்த என்னுரை வழங்கி உள்ளார்.
30 நாட்களில் முன்னேற்றம் காண 30 கட்டுரைகள் எழுதி உள்ளார். இந்தக் கட்டுரைகளில் உள்ளபடியே 30 நாளும் தினந்தோறும் ஒன்றை கடைப்பிடிக்கத் தொடங்கினால் 30வது நாளில் முன்னேற்றம் காண்பது உறுதி என அறுதியிட்டுக் கூறலாம்.
அதிகாலை எழுக! இன்றைய தலைமுறையினர் பலர் இரவு முழுவதும் விழித்து இருந்து அலைபேசியில் விளையாடிவிட்டு தூங்கி மறுநாள் மதியமே விழிக்கின்றனர். இதனால் வாழ்நாளை வீணாக கழித்து வருகின்றனர். இரவில் 10 மணிக்கு தூங்கி காலை 5 மணிக்கு எழுந்தால் அதிகாலையில் வாழ்க்கைப் பயனுள்ள செயல்கள் புரிய முடியும். எனவே வாழ்க்கையில் சாதிக்க விரும்புவர்கள், முன்னேற விரும்புபவர்கள் அதிகாலையில் எழ வேண்டிய அவசியத்தை விளக்கி உள்ளார்.
சுயஉறுதி ஏற்கச் சொல்கிறார். தினமும் அதிகாலை எழுவேன், உடல்நலப்பயிற்சிக்கும், அறிவு மேம்பாட்டுக்கும் நேரத்தை செலவழிப்பேன். அறிவுவளம் சேர்க்கும் நூல்களை வாசிப்பேன். நடைப்பயிற்சி செய்வேன், தியானம் செய்வேன் என்று உறுதிமொழி ஏற்று அவற்றை கடைப்பிடிக்க, சாதிக்க வழிவகைகள் சொல்லி உள்ளார்.
"படுத்துக் கிடக்கும் சோம்பேறிக்கு
பகல் கூட இரவு தான் ;
எழுந்து நடப்பவனுக்கு திரும்பும்
திசையெல்லாம் கிழக்கு தான்"
விடியல் என்பது வெளியில் இல்லை; அது விழியில் உள்ளது.
இப்படி நூல் முழுவதும் தன்னம்பிக்கை முழக்கம் செய்துள்ளார். நூலாசிரியர் கவிஞர் என்பதால் தேர்ந்தெடுத்த சொற்களின் மூலம் சிறுசிறு கவிதைகள் படைத்து கல்வெட்டடாக மனதில் பதிய வைத்துள்ளார்.
இந்த நூலை ஒரு சோம்பேறி கையில் கொடுத்து படிக்கச் சொன்னால் அவன் சுறுசுறுப்பான வளம் பெறுவான் என்பது உறுதி. அதற்கு சோம்பேறி சோம்பலை விடுத்து இந்த நூலைப் படிக்க வேண்டும்.
படிக்கும் வாசகர்கள் மனதில் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்ற சராசரி வாழ்வுக்கு முடிவுரை எழுத வைத்து, பிறந்தோம் உயர்ந்தோம், சாதித்தோம், இறந்தபின்னும் வாழ்வோம் என்ற நிலைக்கு உயர்த்தி விடுகிறார்.
முப்பது நாட்களின் தலைப்பை மட்டும் இங்கே படித்துப் பாருங்கள். உங்களுக்கு கட்டுரையின் உள்ளடக்கம் விளங்கி விடும்.
(1) அதிகாலையில் எழுக! (2) புன்னகை புரிக!
(3) ஈடுபாட்டுடன் செயல்படுக! (4) முறையாக மூச்சு விடுக!
(5) உண்மையே பேசுக! (6) புரிந்து கொள்க! (7) மன்னித்து விடுக!
(8) பொறுமை பெரியது! (9) எளிமையாய் வாழ்க! (10) நகைச்சுவை உணர்க! (11) கடமையை நிறைவேற்றுக! (12) பகிர்ந்து மகிழ்க!
(13) பெற்றுக் கொள்க! (14) நன்றியுணர்வுடன் செயல்படுக!
(15) வாழ்வை கொண்டாடுங்க! (16) அரவணைத்துச் செல்க!
(17) மென்மையாக அணுகுக! (18) உடன்பாட்டு நோக்கில் செயல்படுக! (19) ஊக்கப்படுத்துக! (20) புத்துணர்வு கொள்க!
(21) நிறைவேற்றுக! (22) தொடர்புடுத்துக! (23) சமன் செய்க!
(24) மவுனம் காக்க! (25) சுயநலம் துறங்க! (26) நம்பிக்கை கொள்க! (27) அமைதியாகுக! (28) புதிதாக முயல்க! (29) நேசித்து வாழ்க!
(30) நேர்மையில் நிற்க!
முத்தாய்ப்பாக முப்பது கட்டுரைகள் மூலம் முன்னேற்றத்திற்கான சூத்திரத்தை விளக்கி உள்ளார். சுய முன்னேற்றத்திற்காக சிலர் ஆங்கிலத்தில் மேல்நாட்டு அறிஞர்கள் எழுதிய நூல்களைப் படித்து வருகின்றனர். ஆனால் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் நூலை ஒரே ஒரு நாள் படித்தால் போதும், நமக்குள் தன்னம்பிக்கை ஊற்று வந்து விடும்.
எழுத்தாளர்கள் பலர் இருந்தாலும், தன்னம்பிக்கை, முன்னேற்றம் என்பதை மட்டுமே பொருண்மையாகக் கொண்டு தனிமுத்திரை பதித்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறார் நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள். பாராட்டுகள், வாழ்த்துகள்.
எந்த ஒரு செயலையும் ஏனோ? தானோ என்று செய்யாமல் ஈடுபாட்டுடன் செய்தால் அச்செயல் வெற்றி பெறும். மூச்சு விடுதல் கவனி, ஆழமாக மூச்சு விடட்ல் ஆயுள் கூடும். உண்மை மட்டுமே பேசினால் உங்கள் மீதான மதிப்பு உயரும். ஒருமுறை பொய் பேசிவிட்டால் அடுத்து உண்மை சொன்னாலும் நம்ப மறுப்பார்கள். உண்மையின் அவசியத்தை உணர்த்துகிறார். காந்தியடிகளை நினைவூட்டுகிறார். உண்மையே பேசுவதற்கான பயிற்சியும் தருகிறார். கேள்விகள் கேட்டு பதில் எழுதச்சொல்லி கருத்துக்கு வலு சேர்த்து உள்ளார்.
பிறரைப் பாராட்டு, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. எனவே பிறரின் குற்றம் பார்க்காதே, வெறுக்காதே. அப்படியே அவர்களை ஏற்றுக்கொள். உன்னைப்போல பிறரை நேசி. நமக்கு உதவியவர்களுக்கு மறக்காமல் நன்றி சொல்ல வேண்டும்.
நவீன உலகில் பலர் நன்றி மறந்து விடுகின்றனர்.
குறிப்பாக இளையோர், பெற்றோர் செய்த உதவிகளை நினைத்துப் பார்த்து நன்றி உணர்வுடன் வாழ வலியுறுத்துகின்றார்.
வெற்றி என்பது ஒரு இலக்கல்ல. அது மகிழ்ச்சியான மனநிலை தான், எனவே நம்மை நாமே நேசித்து பிறரையும் நேசித்து அன்பு செலுத்தி பிறரை மகிழ்வித்து மகிழ நூல் முழுவதும் பல யுத்திகள் மூலம் விளக்கி உள்ளார். வாங்கிப் படித்துப் பாருங்கள், முன்னேறுங்கள்.


கருத்துகள்
கருத்துரையிடுக