வாழ்வை உயர்த்தும் பண்புகள் நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி

நூல் : வாழ்வை உயர்த்தும் பண்புகள் நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி வெளியீடு : குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை. பக்கங்கள் 88, விலை ரூ. 50 ****** நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள், ‘எண்ணங்களை எழுதுகிறேன்’ என்ற தலைப்பிட்டு சிறந்த என்னுரை எழுதி உள்ளார். “இலட்சியவாதிகளாக உருவாகி, வாழ்வில் முன்னேற்ற ஏணிகளில் ஏறிக் கொண்டிருக்கும் எனது வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்” என்று எழுதி முடித்துள்ளார். 21 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. திருவள்ளுவர் ஒழுக்கத்தை உயிருக்கு மேலாக வற்புறுத்தினார். அதனை வழிமொழிந்து ஒழுக்கத்தின் மேன்மையை உணர்த்தி உள்ளார். ஒழுக்கம் உயர்வு தரும், ஒழுக்கக்கேட்டால் பலர் புகழ்பல பெற்ற போதும் சறுக்கி வீழ்ந்தவர்கள் மண்ணில் உண்டு. சலனம் என்பது சிலந்தி வலை, சிறுத்தைகள் அதிலே விழுவதில்லை. நெருப்புத் துண்டைக் கரையான்கள் அரித்துவிடாது. ஆகவே உள்ளம் முழுக்க உயர்வான சிந்தனைகள் உலவட்டும். இப்படி எளிய உவமைகள் மூலம் ஒழுக்கத்தின் அவசியத்தை நன்கு உணர்த்தி உள்ளார் நூலாசிரியர். பிறருடன் அன்புடன் பழக வேண்டும், வம்பு செய்தல் கூடாது- நன்மை செய்யும் நெஞ்சம் வேண்டும். பிறருக்கு கனவிலும் தீமை செய்யக் கூடாது. நேரத்தை மதித்தல் இது மிக முக்கியம். நம்மில் பலர் நேரத்தை மதிப்பதே இல்லை. நேரம் என்பது பொன் போன்றது என்பார்கள். அல்ல, பொன்னை விட மேலானது. பொன்னைக் கூட வாங்கி விடலாம். ஆனால் கடந்த நேரத்தை வாங்க முடியாது. எனவே ஒவ்வொரு நொடியையும் மதித்து நடக்க வேண்டும். கேளிக்கையில் நேரத்தை விரையம் செய்யும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும். இப்படி பல சிந்தனைகளை வாசகர் மனதில் விதைத்து விடுகின்றன. தொடர்ந்து கற்க வேண்டும். சிலவற்றை தொடர்ந்து கற்காவிட்டால் மறந்து விடும். வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள் - இந்தத் தலைப்பைப் படித்தவுடன் என் நினைவுக்கு வந்தது. பட்டிமன்ற புகழ் இராஜா வங்கியில் பணியாற்றியவர். தமிழ் இலக்கியம் பயின்ற பேராசிரியர் அல்ல. அவருக்கு தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் பேச வாய்ப்பு வழங்கினார். இராஜா சற்று தயங்கி இருக்கிறார். பின் சம்மதம் தெரிவித்து பேசத் தொடங்கினார். தற்போது வெற்றி முத்திரை பதித்து வருகிறார். அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்தியதால் தான் இன்று சாதிக்க முடிந்தது. நம்மில் பலர் புதிய வாய்ப்புகள் வரும்போது ஏற்க தயங்கி தவிர்த்து விடுகின்றனர். இந்த தயக்கம் தான் வெற்றிக்கு, சாதனைக்கு தடையாக அமைந்து விடுகின்றன. எனவே, தயக்கத்தை தகர்த்து கிடைக்கும் வாய்ப்பை துணிவுடன் ஏற்று, அதில் சாதனை புரியலாம், புகழ் ஈட்டலாம், வருமானமும் வரும் என்பதை உணர வேண்டும். நூலாசிரியர் முதலில் கவிஞர், பிறகு தான் எழுத்தாளர், பேச்சாளர், சாதனையாளர் என்பதெல்லாம். அவருடைய கவிதை வரிகள் எழுச்சி தருபவை. பிறந்து விட்டோம், மீண்டும் இந்த மண்ணில் வந்து பிறப்பெடுப்போம் என்பதிலோர் உறுதியில்லை. பிறந்து விட்டோம் என்பதற்காக வாழ்வதில் ஒரு பயனுமில்லை. வாழ்க்கை எனும் சோலையிலே வசந்த மலர் பறிக்க நாம் வாழ்ந்தோம் எனும் முத்திரையை வரலாற்றிலே பதிக்கணும். இந்த கவிதையைப் படித்தாலே சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் பிறக்கும். எதிர்நீச்சல் போடும் இயல்பு வேண்டும், எளிதில் கிடைத்து விடாது. அதற்கான முயற்சி, பயிற்சி அவசியம். நம்பிக்கை வெற்றியின் மந்திரம் என்கிறார். ஆம் எந்த ஒரு செயலும் நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வரவேண்டும். அவநம்பிக்கை இருந்தால் செயல் செய்திட முடியாது. உழைப்பு! உழைப்பு! உழைப்பு!. உழைப்பால் தான் இந்த உலகமே உருவானது. இளம்பருவத்திலிருந்தே உழைப்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். உயர உயரச் சென்றாலும் உழைத்துக் கொண்டே இருங்கள். உயரம் அடைந்து விட்டோம் என்று உழைப்பை நிறுத்தக் கூடாது. பறவை வானில் பறந்து கொண்டு இருக்கிறது, வானுக்கு வந்துவிட்டோம், உயர்ந்து விட்டோம் என்று பறத்தலை நிறுத்தினால் கீழே தான் விழ வேண்டும். அதுபோல வெற்றி அடைந்து விட்டால் அத்தோடு நிறுத்தி விடக் கூடாது. தொடர்ந்து உழைக்க வேண்டும். மனிதப்பிறப்பின் தலையாய கடமையே உழைப்பு என்பதை நன்கு வலியுறுத்தி உள்ளார். பாரதியே! உனது நெருப்புக் குரல் கேட்டு விழித்து எழுந்தவர்கள். தூங்கிக் கிடந்தவர்கள் மட்டுமல்ல செத்துக் கிடந்தவர்களும் தான். பாரதியின் பாடல் கேட்டு, தயங்கியவர்கள் மட்டுமல்ல, செத்தவர்களும் விழித்தார்கள் என்கிற கூற்று மிகை என்றாலும், அச்சமில்லை, அச்சமில்லை பாடலைப் பாடினாலே அச்சம் அகன்று துணிவு பிறப்பது உண்மை. நேற்றைய பட்டதாரி இன்று படிப்பதை நிறுத்திக் கொண்டால் நாளை படிக்காதவர் ஆகி விடுவோம். எந்த ஒரு செயலிலும் தொடர் முயற்சி வேண்டும் என்பதை நன்கு வலியுறுத்தி உள்ளார். தெளிந்த சிந்தனை, நிறைவான கல்வி, திறமையான செயல்கள் – இவையே வெற்றிக்கு வித்தாகும். கேள்வி-பதில் போன்ற உந்தியிலும் கட்டுரை உள்ளது. அதில் வெற்றிக்கான உத்திகளை தோல்விக்கு துவளாத துணிவையும், முடியாது என்பது டத்தனம் முடியும் என்பதே மூ மூலதனம். இப்படி தன்னம்பிக்கை விதைகளை வாசகர் மனதில் நாற்றாக நட்டு விருட்சமாக வளர உதவிடும் நூல் இது. பல பதிப்புகள் வந்து வெற்றி பெற்ற நூல் இது,

கருத்துகள்