ூல் : இந்த நாள் வெற்றித் திருநாள் பாகம் 2 நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
நூல் : இந்த நாள் வெற்றித் திருநாள் பாகம் 2
நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன்
நூல் மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : குமரன் பதிப்பகம்,
19, கண்ணதாசன் சாலை, தி.நகர்,
சென்னை.
பக்கங்கள் 264, விலை ரூ. 160
******
சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் கொரோனா காலத்தில் கூட சும்மா முடங்கி இருக்காமல் சுறுசுறுப்புடன், இணையவழி புலனத்தில் தன்னம்பிக்கை முழக்கம் செய்து தன்னம்பிக்கை விதைத்து உள்ளார். அந்த உரையின் நூல் வடிவம் இரண்டாம் பாகம் இந்த நூல்.
ஆசிரியர் என்னுரையில், சோம்பிக் கிடப்பவர்கள் முன்னேற்றக் காற்றை சுவாசிப்பதில்லை, ஆம், “வாசிப்பும் சுவாசிப்பும் தொடர்ந்தால் தான் நாம் வாழ்கிறோம் என்று பொருள்” என்கிறார். இன்றைக்கு வாசிக்கும் பழக்கம் பிறரிடையே வழக்கொழிந்து வருகிறது. வாசிப்பு என்பது சுகமான அனுபவம், நமக்குள் மாற்றத்தை முன்னேற்றத்தை விதைப்பது.
இந்த நூல் வாசிக்கும்முன் இருந்த வாசகர் மனநிலைக்கும், வாசித்து முடித்தபின் உள்ள மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே நூலின் வெற்றி. வாசித்து முடித்தபின் வாசித்த வாசகருக்கு தன்னம்பிக்கை பிறக்கிறது. சராசரி வாழ்க்கை வாழ்வதை விடுத்து, சாதனை வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வேட்கை வருகின்றது, பிறந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. பிறந்தோம் சாதித்தோம் என்றாக வேண்டும் என்ற நிலைக்கு நம்மை உந்துசக்தியாக உந்திச் செல்கிறது நூல்.
உயரம் என்றால் எவரெஸ்ட். உயர வேண்டும் என்றால் நெவர் ரெஸ்ட். ஓய்வின்றி உழைத்தால் உயர்வு உறுதி என்பதை இரண்டே வரிகளில் கல்வெட்டு வரிகளாக மனதில் பதித்து விடுகிறார். தந்தை பெரியார் அவர்கள், “ஓய்வும் சோர்வும் தற்கொலைக்குச் சமம்” என்று சொல்வார்கள். அதுபோல ஓய்வாக இருந்து, பொன்னான நேரத்தை விரயம் செய்வதை விடுத்து சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கினால் சாதனைகள் சாத்தியமாகும்.
முடியும் என்றால் முடியும், முயன்றால் எதுவும் முடியும். உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின்,
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (ஆள்வினை உடைமை 62-619)
கடவுளால் முடியாதது கூட, முயன்றால் முடியும் என்றார். அதை வழிமொழிந்து சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்களும், ‘முயன்றால் எதுவும் முடியும்’ என்று சொல்லி விளக்கம் தருகின்றார்.
முனைவர் க. சக்திவேல் அவர்கள், வாசித்தேன் நேசித்தேன் என வாழ்த்துரை வழங்கி உள்ளார். இது என்னடா வாழ்க்கை? என்ற சலிப்பு மறைந்து, “இது என்னோட வாழ்க்கை” என்ற பிடிப்பும், “நான் எப்போதும் வென்று காட்டுவேன்” என்ற துடிப்பும் ஏற்படும். ஆம், நூலாசிரியர். ‘வாழ்க்கையை கஷ்டப்பட்டு வாழாமல் இஷ்டப்பட்டு வாழ வேண்டும்’ என்ற உணர்வை விதைக்கின்றார்.
நூலாசிரியரின் பெரும்பாலான நூல்களை பதிப்பித்து வரும் குமரன் பதிப்பகம் உரிமையாளர் திரு. எஸ். வயிரவன் அவர்கள் சிறந்த பதிப்புரையும் வழங்கி உள்ளார். புத்தகத் திருவிழாக்களில் கடைகள் வைத்து, கவிதாசன் அவர்களின் தன்னம்பிக்கை நூல்களை சிறப்பாக விற்பனை செய்து சமுதாயத்திற்கு தொண்டு செய்து வருகிறார். பாராட்டுகள்.
நூலில் 100 கட்டுரைகள் உள்ளன. எளிதில் வாசிக்கும்வண்ணம் சிறிய கட்டுரைகள் தான். கட்டுரைகளின் தலைப்பைப் பார்த்தாலே முழுவதையும் படித்து விடுவோம். அப்படி தேர்ந்தெடுத்த சொற்களில் தலைப்பு வைத்துள்ளார். பதச்சோறாக சில தலைப்புகள் மட்டும் எழுதுகிறேன். வாசித்துப் பாருங்கள். நமக்கு நன்மை தான், நமது எதிரிகள் யார்?. செயல்படுங்கள், துளசியா? மாங்கனியா?, உங்களுக்கு ஒரு சபாஷ், மகிழ்ச்சியா? வளர்ச்சியா?, எதிர்மறை எண்ணங்களா?, மதிப்பைக் கூட்டுங்கள், புதுப்பித்துக் கொள்ளுங்கள், வாழ்வெல்லாம் வசந்தம்.
இப்படி கட்டுரையின் தலைப்புகளே சிந்திக்க வைக்கின்றன. வெற்றிக்கான சூத்திரத்தை சாதனைக்கான வழிவகைகளை, திட்டமிடுதலை, செயல்படுதலை, இயக்கமாக இயங்குவதை, தொடர்முயற்சியை நூல் முழுவதும் விளக்கி உள்ளார். ஏனோ? தானோ? என்று வாழ்ந்து வரும் மனிதனை அப்படி சராசரி வாழ்க்கை வாழாதே, சாதனை வாழ்க்கை வாழ் என்று கற்பிக்கிறார். சிறிய கதைகள் மூலம் வெற்றிச் சூத்திரத்தை விளக்கி உள்ளார்.
எந்த வேலையையும் தள்ளிப்போடும் குணத்தை தள்ளி வைத்துவிட்டு, உடனுக்குடன் முடித்தால் வெற்றி வசமாகும். ‘சிறகை விரி, பிறகு சிரி’ என்கிற கவிதையையும் மேற்கோள் காட்டி உள்ளார். மனதை நேர்மறை சிந்தனைகளால் நிரப்பி விட்டால், எதிர்மறை சிந்தனைகள் எழுவதற்கு வாய்ப்பு இருக்காது என்கிறார். மதிப்புக் கூட்டு வரி என்பது போல நம் மதிப்பை நாமே கூட்டுவதற்கு உழைக்கச் சொல்கிறார். நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள வேண்டும். மரம் வளர்வது போல, மனிதனும் மனதளவில் வளர வேண்டும். ஒவ்வொரு கட்டுரையின் முடிப்பில் முத்தாய்ப்பாக வைர வரிகளோடு முடித்து உள்ளார்.
மனத்தை உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டும். சோம்பி இருத்தல் கூடாது. ஆசைகளை நெறிப்படுத்த வேண்டும். சலனம் என்பது சறுக்கலை உண்டாக்கும். முடியும் என்ற எண்ணம் முளைக்கும் போதெல்லாம் ஆற்றலின் அட்சயப் பாத்திரம் அடிமனதில் குடியேறத் தொடங்கி விடுகிறது, அறிவு வளர வளர, அறிய வேண்டியது அதிகம் உள்ளன என்ற தெளிவு பிறக்கின்றது. வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை உள்ளத்தில சுடர்விட வேண்டும்.
நூல் முழுவதும வாசகர்களுக்கு உற்சாக டானிக்கை வழங்கி உள்ளார். படித்துப் பாருங்கள், உணர்வீர்கள். நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு பாராட்டுகள்.
******


கருத்துகள்
கருத்துரையிடுக