பாட்டுப் புத்தகங்களும்... படிந்து போன வரலாறும்!
பத்துப் பைசா கொடுத்து ஒரு பாட்டுப் புத்தகத்தை வாங்கும் தருணத்தில், அந்தப் பாடல்கள் அனைத்தும் எனக்கே சொந்தமாகிவிட்டதைப் போன்றதொரு பேரானந்தம் மனதை ஆட்கொள்ளும். தனிமை தவழும் இடங்களைத் தேடிப் பிடித்து, அந்தப் புத்தகத்தை விரித்து, ஒவ்வொரு பாடலையும் தொண்டை நரம்புகள் புடைக்க உரக்கப் பாடித் தீர்ப்பதில் தான் எத்தனைப் பேரின்பம்! இது 1970-களின் வசந்த காலம். அந்த நாட்களில் 'நடிகர்திலகத்தின்' பாட்டுப் புத்தகங்களைத் தவிர வேறெந்த புத்தகத்தின் மீதும் என் விரல் நுனிகள் படிந்ததே இல்லை. ஒன்றின் வாசிப்பு முடிந்ததும் அடுத்த புத்தகத்தை நோக்கிய தேடல் தொடரும்; பெரும்பாலும் இவை விடுமுறை காலத்தின் ஆகச்சிறந்த பொழுதுபோக்குகள்.
எங்கள் நண்பர்கள் குழாமில் அடிக்கடி ஒரு சுவாரசியமான போட்டி நடக்கும். "நான் பாடுவதைப் போலவே பிசகாமல் உன்னால் பாட முடியுமா?" என்று மார்தட்டி சவால் விடுவார்கள். அவர்கள் தங்களை ஏதோ பெரிய 'பாகவதர்களாகவே' பாவித்துக் கொள்வார்கள். இன்று பின்னோக்கிப் பார்க்கையில் சிரிப்பு தான் மேலிடுகிறது. எவருக்குமே சுதி சுத்தமாகப் பாடத் தெரியாது, இருப்பினும் அந்தச் சவடால்களுக்கும் ஆரவாரங்களுக்கும் குறைவே இருந்ததில்லை. அந்தச் சிறுபிள்ளைத்தனமான உவகையே தனி அழகு தான்!
இன்னொரு பக்கம், சேகரித்த புத்தகங்களை ஊசியால் கோர்த்து, ஒன்றாக இணைத்து, அட்டையிட்டு, அதில் திரைப்படப் பெயர்களை வரிசையாக எழுதி வைக்கும் கலை நயம். என் அனுபவத்தில், நடிகர்திலகத்தின் பாட்டுப் புத்தகங்களைச் சேகரித்தவர்களைப் போல, வேறெந்த நடிகரின் ரசிகர்களையும் நான் கண்டதில்லை. மிக அழகாக 'பைண்ட்' செய்யப்பட்டு, அதன் மீது பள்ளி லேபிள்களைப் போல ஒட்டி, பெயர் மற்றும் விலாசத்தை அச்சிட்டுப் பொக்கிஷமாகப் பாதுகாப்பார்கள். யாரிடமும் அத்தனை எளிதில் இவற்றை இரவல் தந்துவிட மாட்டார்கள்.
அக்காலத்தில் பாட்டுப் புத்தக வணிகம் என்பது கடைக்காரர்களுக்குப் பொற்காசுகளை அள்ளித் தரும் ஒரு வர்த்தகமாகத் திகழ்ந்தது. ஏராளமான பதிப்பகங்கள் இதன் மூலம் பெரும் வளர்ச்சியடைந்தன. ஒரு வருடத்திற்குச் சராசரியாக எட்டுத் திரைப்படங்கள் என நடிகர்திலகம் நடித்ததால், வணிகர்களுக்கு வருடம் முழுவதுமே பண வேட்டைதான். மற்ற நடிகர்களைக் காட்டிலும் சிவாஜி கணேசன் அவர்களே வணிகர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தந்தார்.
குறிப்பாக, வசனப் புத்தகங்களைப் பொறுத்தவரை அவருக்கு நிகர் அவரே!
ஒரே உள்ளடக்கத்தைக் கொண்டு விதவிதமான தலைப்புகளில் வெளியான சிவாஜியின் வசனப் புத்தகங்களுக்கு ஈடு இணையே இல்லை. அதிலும் "சிம்மக்குரல் சிவாஜியின் வீர கர்ஜனை" என்ற புத்தகம் அசுர விற்பனையைக் கண்டது. அந்த வசனங்கள் தான் பின்னாட்களில் எத்தனை நடிகர்களை உருவாக்கியது! எத்தனை மேடை விழாக்களுக்கு உயிர் கொடுத்தது! வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு 'நடிப்புப் பாடப்புத்தகமாகவே' அவை திகழ்ந்தன.
திரைப்படங்களை மையப்படுத்தி ஒரு சங்கிலித் தொடர் போன்ற வணிகப் புரட்சி அன்று நிலவியது. பத்துப் பைசா பாட்டுப் புத்தகங்கள் எத்தனை லட்சங்களைச் சம்பாதித்துக் கொடுத்தன? எத்தனை குடும்பங்களை உயர்த்தின? இந்த ஒட்டுமொத்த வர்த்தகத்தில் நடிகர்திலகத்தின் பங்கு அளப்பரியது.
அதேபோல் தான் நாட்காட்டி (Calendar) வணிகமும். 25 பைசா, 50 பைசா விலையில் வண்ண வண்ண நாட்காட்டிகள் ஊர் எங்கும் நிறைந்திருந்தன.
ராஜா ராமன் எத்தனை ராமனடி .சிவகாமியின் செல்வன் என மூன்று வேடங்கள் கொண்ட நாட்காட்டிகள், குதிரை மீதமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் இராஜராஜ சோழன், சௌத்ரி போஸ் என அந்தப் படங்கள் இன்றும் நினைவில் பசுமையாக உள்ளன. சுதந்திர தினச் சிறப்பாய் தேசியக் கொடியுடன் கட்டபொம்மன் காட்சியளிக்கும் அந்தப் படங்கள், அன்றைய ரசிகர்களின் வீட்டுச் சுவர்களையும், பீரோக்களையும் அலங்கரித்த அழியா ஓவியங்கள்.
நடிகர்திலகத்தின் திரைப்படம் என்பது வெறும் திரையனுபவம் மட்டுமல்ல; அது ஒரு சமூகத்தின் பொருளாதாரச் சுழற்சியையே தீர்மானித்த மாபெரும் சக்தியாகத் திகழ்ந்தது. சிறு வயது முதலே என் திரையுலகம் சிவாஜி என்ற ஆளுமையால் மட்டுமே நிரம்பியிருந்தது. அந்த அழியாத நினைவுகளின் தொகுப்பே இந்தக் கட்டுரை.
செந்தில்வேல் சிவராஜ்

கருத்துகள்
கருத்துரையிடுக