நூல் : வெண்பா வெண்ணிலாக்கள் நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திர பாபு ! நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி !
நூல் : வெண்பா வெண்ணிலாக்கள்
நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திர பாபு !
நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி !
வெளியீடு : முக்கூடல்,
11, முப்பத்து மூன்றாம் தெரு,
பாலாஜி நகர் விரிவு III, புழுதிவாக்கம், சென்னை-600 091
பக்கங்கள் 112, விலை ரூ. 120
******
‘வெண்பா வெண்ணிலாக்கள்’ நூலின் பெயரே மரபுக்கவிதையின் முத்தாய்ப்பான வெண்பாவையும் வானில் தோன்றும் அழகிய வெண்ணிலாவையும் நினைவூட்டி வெற்றி பெறுகின்றது. நூலாசிரியர் கே.ஜி. இராஜேந்திரபாபு அவர்கள் சிறந்த கவிஞர். பல கவிதைகளை புதுகைத்தென்றல் மாத இதழில் எழுதி வருகின்றார். மரபில் ஆழ்ந்த புலமை மிக்கவராக தன்னை வளர்த்துக் கொண்டவர். பெங்களூர் தமிழ்ச்சங்கத்தில் நடக்கும் ஏரிக்கரை கவியரங்கத்தில் தலைமை வகித்து
தனி முத்திரை பதித்து வருபவர்.
இந்த நூலில் வெண்பா விருந்து வைத்துள்ளார். பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் அவர்கள் அணிந்துரை வழங்கி உள்ளார். ‘மரபில் விளைந்த புதிய வெளிச்சம்’ என்று தலைப்பிட்டுள்ளார். “இலக்கியத்தில் இமயம் போல் விளங்குவது கவிதை. கவிதைக்குக் கிடைக்கும் கம்பீரம் வேறு எந்த இலக்கிய வடிவத்திற்கும் இதுவரை கிடைத்ததில்லை” என்று இலக்கிய வகையில் கவிதை ஆகச்சிறந்தது என, கவிதைக்கு மகுடம் சூட்டி உள்ளார்.
இலட்சியக் கவிஞர் லிங்கராசா அவர்கள் வாழ்த்துரை வழங்கி உள்ளார். ஆசூர் க. தங்கதாசன் ஒளியச்சு செய்ததுடன் மகிழ்வுரையும் வழங்கி உள்ளார். ஓவியர் ஜமால் அவர்கள் வெண்பாவிற்கு பொருத்தமாக அழகிய கோட்டோவியம் வரைந்துள்ளார். கோட்டோவியம் வெண்பாவிற்கு கூடுதல் உயிரோட்டம் வழங்கி உள்ளன.
தமிழரசு திங்களிதழில் 1970ல் முதல் பரிசு பெற்ற வெண்பா முதலில் இடம் பெற்றுள்ளது. பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ!
கட்புலம் நீரிறைக்க கட்டும் குரலிறைந்சு
மட்கலம் சோறேற்று வாட்டுபசிக்(கு) உட்கொள்ளாது
அப்போதும் பிள்ளைக்கே அள்ளியூட்டும் தாயன்புக்(கு)
ஒப்பாக கண்டதில்லை ஒன்று!
உறவுகளில் தலைசிறந்த உறவு அம்மா. தன்பசியைக் கூட தள்ளிவைத்து விட்டு தன் குழந்தைக்கு பசியாற்றி மகிழும்
தாயுள்ளத்தை படம்பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார். நூலாசிரியர் கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு அவர்கள் சொல்ல வந்த கருத்தை மரவில் சொல்வது சற்று கடினம் தான். ஆனால் நூலாசிரியர் மரபு கற்றவர் என்பதால் மரபு விருந்து வைத்துள்ளார்.
நூலில் உள்ள ஒவ்வொரு வெண்பாவும் ஒரு செய்தி சொல்லி சிந்திக்க வைக்கின்றன. மேலும் வளரும் கவிஞர்களுக்கு மரபுக்கவிதை வெண்பா எப்படி எழுத வேண்டும் என்பதை கற்பிக்கும் விதமாக பாக்கள் புனைந்து உள்ளார். இந்த நூலை கூர்ந்து வாசிக்கும் வாசகர் வெண்பா எழுதிட கற்றுக் கொள்வார் என்பதை அறுதியிட்டுக் கூறலாம்.
ஈரா யிரம் ஆண்டாய் என்ற இலக்கியங்கள்
ஏராளம் இன்னுமுண்டு என்பதனால் ஆராய்ந்து
செம்மை அறிவியல் சிந்தனையும் சேர்த்தே தாம்
செம்மொழிக்குச் சேர்ப்போம் சிறப்பு!
உலகப்பொதுமறையான திருக்குறள் எழுதி ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றும் எங்கும் யாவருக்கும் பொருந்தும் இலக்கியமாக உள்ளது. இன்னும் நிறைய இருக்கின்றன. அதற்கும் முந்தைய தொல்காப்பியம் உள்ளது. இவற்றை அறிவியல் சிந்தனையுடன் ஆராய்ந்து செம்மொழி தமிழுக்கு சிறப்புகள் சேர்ப்போம் என்ற கருத்தை வெண்பாவில் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளார். பாராட்டுகள்.
நூறு வகை நூல் படி. நுட்பங்கள் ஆய்ந்திடு.
கூறுவதில் தேர்ச்சி கொள் கொண்டமதிச் சாறெடுத்து
சீரும் சிறப்புமாய்ச் செப்பிடு செப்புங்கால்
ஊருக்கு நல்லது ஓது!
வாசிப்புப் பழக்கம் வழக்கொழிந்து வருகிறது. அதனால் தான் வாசிப்பு இயக்கம் தொடங்க வேண்டி உள்ளது. வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வண்ணம் நூறுவகையான நூல்களைப் படித்து. அதில் உள்ள நுட்பமானவற்றை ஆராய்ந்து. சிந்தித்து சாறாக எடுத்து, அவற்றை எடுத்து இயம்பி பேசவும் கற்றுக்கொள். பேசும்போது ஊருக்கு நல்லது மட்டும் பேசு. கெட்டது பேசாதே என ஒரு பேச்சாளன் எப்படி உருவாக வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதை வெண்பாவின் மூலம் உணர்த்தி விடுகிறார்.
உமியாய் எதிர்ப்பை உதறி எறிந்து
சமமேஎல் லோருமெனச் சாற்றி – தமிழின்
இனிமை சொன்ன பாவேந்தர் ஏறுபோல் பாடல்
தனித்த உரம் கொண்ட தமிழ்.
பாவேந்தர் பாரதிதாசனின் பாடல்களின் குணத்தை பகுத்தறிவுக் கருத்தை விளக்கும் வண்ணம் உமியாய் எதிர்ப்பை உதறி எரிந்தவர் பாவேந்தர் என்கிறார். ஆம் பாட்டால் புரட்சி செய்த புரட்சிக்கவிஞர், தந்தை பெரியாரின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து மூடநம்பிக்கைகள் ஒழிந்து பகுத்தறிவு சிந்தனைகள் பிறக்கப் பாடியவர். மனதால் ஏற்றத்தாழ்வு கற்பிதமே மனிதர் யாவரும் சமம் என்று உரைத்தவர் பாவேந்தர். தமிழின் இனிமையை, சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர் உணர்ச்சிக்கவிஞர். தனித்த உரம் கொண்ட தமிழ் என்கிறார்.
இப்படி வெண்பாக்கள் ஒவ்வொன்றிலும் மேன்மையான கருத்துக்களை விதைத்து வாசகர்களின் உள்ளத்தை செம்மைபடுத்தி வெற்றி பெறுகின்றார். ‘வெண்பா வெண்ணிலாக்கள்’ என்ற பெயர் மிகச்சரி. ஒவ்வொரு வெண்பா படித்து முடித்தபின்பும் திரும்பிப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டி படிக்க வைத்து விடும் ஈர்ப்புடன் உள்ளன.
எத்தனை முறை படித்தாலும், சலிக்காது இனிக்கும் வெண்ணிலாவும் அப்படித்தான் பார்க்கச் சலிப்பு வராது. திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும். மரபு விருந்து வைத்து தமிழின் பெருமையை பறைசாற்றி உள்ள சிறந்த நூல். வாங்கிப் படியுங்கள். நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள்.


கருத்துகள்
கருத்துரையிடுக