: தமிழ் இலக்கியத்தில் பெண்மை நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் நிர்மலா மோகன் நூல் விமர்சனம்: தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி
நூல் : தமிழ் இலக்கியத்தில் பெண்மை
நூல் ஆசிரியர் : பேராசிரியர் முனைவர் நிர்மலா மோகன்
நூல் விமர்சனம்: தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி வ
: வானதி பதிப்பகம்,
23, தீனதயாளு தெரு, தி.நகர்.
சென்னை-600 017.
பக்கங்கள் 232, விலை ரூ. 230
******
நூலாசிரியர் பேராசிரியர் முனைவர் நிர்மலா மோகன் அவர்களின் 45வது நூல். கலைமாணி ஏர்வாடியார் சிறப்பான அணிந்துரை வழங்கி உள்ளார். நூலாசிரியர் பல்வேறு பத்திரிகை-களிலும் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். நூலின் தலைப்பிற்கு உரம் சேர்க்கும் வகையில்
13 கட்டுரைகள் வடித்துள்ளார். நூலாசிரியர், கணவர் தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார்.
தமிழ்த்தேனீ இரா.மோகன் அவர்களைப் போலவே பேச்சு, எழுத்து என்ற இருவேறு துறைகளிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். தமிழ்நாடு அரசின் இளங்கோஅடிகள் விருதை முதலில் பெற்றவர். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக வலம் வருபவர்.
தமிழ் இலக்கியத்தில் பெண்மை குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து கட்டுரைகள் வடித்துள்ளார். மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் என்ற வரிகளுக்கு உரம் சேர்க்கும் வண்ணம், பெண்மை உயர்க! உயர்க! என கொட்டுமுரசு கொட்டி உள்ளார். பெண்மையின் மேன்மையை பல எடுத்துக்காட்டுகளுடன் இயம்பி உள்ளார்.
தாய்த்தெய்வ வழிபாடு என்று பெண்களைத் தெய்வமாகக் கொண்டாடிய சமுதாயம் நாளடைவில் பெண்ணடிமைச் சமுதாயமாக மாறியது எப்படி என்பதை கட்டுரையில் உணர்த்தி உள்ளார்.
பெண் தெய்வங்கள் பற்றி ஆய்வு நிகழ்த்தி உள்ளார்.
சங்கப் பெண்பாற் புலவனின் ஆளுமைத்திறன் கட்டுரையில் சங்ககாலப் பெண்மணிகள் கல்வி, கேள்வி, வீரம், கற்பு, மானம் ஆகிய பண்புகளில் சிறந்து விளங்கியவர்கள். பாடல் புனையும் பண்புடையக் கல்வியாளராய் திகழ்ந்தனர் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி உள்ளார்.
பெண்புலவர் பாடிய பாடல்களில் உள்ள பரிணாமங்களன முதல் பெண் தூதுவர், மனிதவள மேம்பாட்டுச் சிந்தனை, நிர்வாக மேலாண்மையியல், மறக்குடி மகளிரின் வீரம், ஒப்பியல் சிந்தனை என பல்வேறு கோணங்களில் வடித்த பாடல்களின் திறத்தை விளக்கி உள்ளார்.
உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர் பார்வையில் பெண்கள் என்ற தலைப்பிலான கட்டுரை நனிநன்று. பொருத்தமான திருக்குறள் மேற்கோள் காட்டி திருவள்ளுவர் பெண்களை எவ்வளவு உயர்வாக எத்தனை திருக்குறளில் பாடி உள்ளார் என்பதை பட்டியலிட்டு விளக்கி உள்ளார். பெண்களின் மீதான மதிப்பை உயர்த்தும் வண்ணம் நூல் முழுவதும் கட்டுரைகள் வடித்துள்ளார். பெண்மை குறித்து அதன் மேன்மை குறித்து விரிவாக விளக்கி உள்ள நூல் இது. சிறந்த நூலுக்கான பரிசு பெறும் தகுதியும் இந்த நூலிற்கு உண்டு. படிக்க படிக்க பெண்மை பற்றிய மதிப்பீட்டை பன்மடங்கு உயர்த்தும் வண்ணம் கட்டுரைகள் உள்ளன.
தனிஒரு பெண்ணாக வந்து அரசனிடம் நீதி கேட்டு அரசனையே சாகடித்த கண்ணகியின் சிலப்பதிகாரக் காட்சிகளை கண்முன் கொண்டு வந்து வெற்றி பெற்றுள்ளார் நூலாசிரியர். கண்ணகி என்பதே நீதியை நிலைநாட்டியதற்கான அனைத்துக் குறியீடு என்கிறார். கணவன் நிரபராதியாக இருந்தும், கொல்லப்பட்ட செய்தி கேட்டு அழுது புலம்பி வீட்டிற்குள் இருக்காமல் அநீதி இழைத்த மன்னனின் அரண்மனை நோக்கி வந்து வாதாடிய கண்ணகி இன்றைய பெண்களுக்கும் துணிவைத் தரக்கூடிய உயர்ந்த குறியீடு தான் என்பதை கட்டுரை விளக்கி உள்ளது.
"நாட்டுப்புறப் பாடல்கள் படைக்கும் பெண்மை" கட்டுரையில் தாலாட்டுப் பாடல்களில் உள்ள பெண்ணியக் கருத்துக்களை திருக்குறளை மேற்கோள் காட்டி விளக்கியது சிறப்பு. மகாகவி பாரதியார் போற்றிய பெண்மை குறித்தும் கட்டுரை உள்ளது. புரட்சிக்கவிஞன் பாரதிதாசனின் பெண் முன்னேற்றச் சிந்தனைகள் என்ற தலைப்பிலான கட்டுரையும் நனிநன்று.
கற்பது பெண்களுக்கு ஆபரணம், கெட்டிக்கல் வைத்த நகை தீராத ரணம். கற்ற பெண்களை இந்நாடு தன் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அன்போடு. பாவேந்தர் பாரதிதாசன் அன்றே பாடியதன் விளைவு தான் பெண்கல்வி. இன்றைக்கு தமிழ்நாட்டில் அரசுப்பணியில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர். அதற்குக் காரணம் பெண்கல்வி. அதற்கு என்றே குரல் கொடுத்து வாதிட்டவர் பாரதிதாசன் என்பதை கட்டுரையில் நன்கு விளக்கி உள்ளார்.
புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் என்ற கட்டுரையில் இன்றைய ஹைக்கூ கவிதை-களையும் மேற்கோள் காட்டி பெண்மைக்கான கொடியை உயர்த்தி உள்ளார்.
அம்மாவுக்கு 15ல்
அக்காவுக்கு 25ல்
எனக்கு 35ல்
இந்த ஹைக்கூ வரதட்சணை காரணமாக முதிர்கன்னிகள் பெருகி விட்டதை உணர்த்துவதை மூன்றே வரிகளில் விளக்கி உள்ளதை மேற்கோள் காட்டி எழுதி உள்ளார்.
மொத்தத்தில் பெண்களின் மீதான மதிப்பு, மரியாதையை உயர்த்தும் வண்ணம் படிக்கும் வாசகர்கள், ஆண்கள் மனதில் பெண்மை பற்றிய உயர்மதிப்பீட்டை விதைத்து வெற்றி பெற்றுள்ளார். நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், விரைவில் உங்கள் நூல்களின் எண்ணிக்கை ஐம்பதை எட்டட்டும்.


கருத்துகள்
கருத்துரையிடுக