19.12.2025.கி.ஆ.பெ.விசுவநாதம் - நினைவு தினம்*
பள்ளி செல்லாத கி.ஆ.பெ.வி, 1904ல் மருதமுத்துக் கோனாரிடம் திண்ணைப் பள்ளியில் தமிழும் கணிதமும் கற்றார். பிறகு வேங்கடசாமி நாட்டார், வேதாசலம், கல்யாண சுந்தரனார்,சோமசுந்தர பாரதியார் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால் தாமே முயன்று தமிழ் கற்றுத் தேர்ந்தார். அரசியலில் தனது பங்கேற்பாக, தனது 18 வது வயதில் நீதிக்கட்சியில் இணைந்து படிப்படியாக வளர்ந்து
பொதுச்செயலாளர் ஆனார்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம், தீண்டாமை ஒழிப்புச் சட்டம், தமிழறிந்தவர்களும் மருத்துவராகலாம் என்ற அரசாணை போன்ற சட்டங்களுக்கு முன் முயற்சியாய் இருந்தார்.
தமிழ் மரபுப்படி சாதி வேறுபாடற்ற திருமணங்களை நடத்தி வைக்கும் இயக்கமொன்று துவக்கி, 5000க்கும் மேற்பட்ட தமிழ்த் திருமணங்களை நடத்தி வைத்தார். இலக்கியம், இசை, நாடகம், அரசியல், சமூகம், சீர்திருத்தம், கல்வி, வாணிகம், தொழிலாளர், ஆராய்ச்சி, மேடை, வானொலி என 12 துறைகளில் பேசியுள்ளார்.
கி.ஆ.பெ.வி 36 நூல்கள் எழுதியுள்ளார். அவை அனைத்தும் எளிய நடையில் மாணவர்களும் படித்தறிய வேண்டும் என்ற நோக்கில் படைக்கப்பட்டன. இதில் 23 நூல்கள் 2007ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை 2000 ஆண்டு முதல் கி.ஆ.பெ. விசுவநாதம் என்ற பெயரில் இலக்கிய விருதொன்றை தமிழறிஞர்களுக்கு வழங்கி வருகிறது.
திருச்சியில் கி.ஆ.பெ.விக்கு சிலை நிறுவப்பட்டது. திருச்சி மருத்துவக் கல்லூரிக்கு விசுவநாதம் பெயர் சூட்டப்பட்டது. 2010ல் இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. திருச்சி தில்லை நகரில் கி.ஆ.பெ. விசுவநாதம் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.கி.ஆ.பெ.வி. தமது 91ஆம் அகவையில், தமிழீழப் போரை முன்னெடுத்துப் போராடிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளின் போது பின்வருமாறு எழுதினார். “கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன்! வீரனிலும் ஒரு மாவீரன்! அவனே ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்!!! இத்தகைய வீரன் ஒருவன் புறநானூற்றுக்குப் பிறகு இரண்டாயிரமாண்டுகளாக வேறு எவனும் தோன்றியதில்லை.
தமிழுக்காவும் தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் இலக்கியம் அரசியல் இரண்டிலும் புதிய வரலாறைப் படைத்துள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் 96வது வயதில் 1994, டிசம்பர் 19ல் காலமானார்.
அவர் உயிரோடு இருந்தபோதே தனக்கும் தன் மனைவிக்கும் அவரே கட்டிவைத்த சமாதியில் அடக்கம் நடந்தது. ஓயாமரிக்கு பின்னால் லயன் டேட்ஸ்க்கு எதிரேயுள்ள நந்தவனம் தான் அவர் சமாதியுள்ள இடம். சமாதியின் முன்பு நின்று கொண்டு வேடிக்கையாகச் சொல்வாராம் “நான் இருக்கும்வரை இந்த சமாதிக்கு உயிர் வராது” என்று. அவரின் சமாதி தான் நம் தமிழ் மூச்சின் சுவாசக்குழி. முத்தமிழ்க் காவலர் தாத்தா கி.ஆ.பெ. விசுவநாதம் பிள்ளை அவர்கள் நினைவைப் போற்றுவோம்!!!
இங்கிலாந்திலிருந்து
சங்கர் 🎋

கருத்துகள்
கருத்துரையிடுக