இந்த நாள் வெற்றித் திருநாள் பாகம் 1 நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி

நூல் : இந்த நாள் வெற்றித் திருநாள் பாகம் 1 நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் கவிதாசன் நூல் விமர்சனம்: கவிஞர் இரா.இரவி வெளியீடு : குமரன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயர் நகர், சென்னை-600 017, பக்கங்கள் 242, விலை ரூ. 140 ****** கொரானோ காலத்தில் எல்லோரும் வீட்டில் முடங்கி இருந்தோம், தனித்து இருந்தோம், ஆனால் நூலாசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் வீட்டில் முடங்கி இருக்காமல் வீட்டில் இருந்தபடியே சிந்தித்து தினசரி இந்தநாள் இனியநாள் என்ற தலைப்பில் இணைய வழி தன்னம்பிக்கை முழக்கம் செய்துள்ளார் அந்த உரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளனர். இந்த நூல் முதல் பாகம். சிந்தனைக் கவிஞர் என்பது காரணப்பெயர் தான். கொரானோ காலத்தைக் கூட சும்மா கழிக்காமல் தன்னம்பிக்கை முழக்கம் செய்து உள்ளார். சமுதாயத்திற்கு பயனுள்ள வாழ்க்கையாக்கி உள்ளார். 100 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. படிக்க படிக்க சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் தன்னம்பிக்கை பதியம் போடும் விதமாகவும் உள்ளன. கட்டுரைகள் இரண்டு பக்க அளவிலேயே இருப்பதால் படிப்பதற்கு இனிதாகவும் உள்ளன. ‘குறை ஒன்றும் இல்லை’ என்று தொடங்கி ‘நூற்றுக்கு நூறு’ வரை எழுதி நூறு கட்டுரைகள் உள்ளன. “குறை இல்லாத மனிதன் இல்லை குறையை மட்டும் பார்ப்பவன் மனிதனே இல்லை” என்று சொல்லி குறை பார்க்கும் குணத்தை விட்டுவிட்டு எதிலும் யாரிடமும் நிறையை மட்டும் பார்க்கும் நல்ல குணத்தை வளர்த்து கொள்ள வேண்டும் என்றும் வாசகர்களின் எண்ணத்தை சீர்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர். வெற்றிக்கு இரண்டு பக்கங்கள் வேண்டும் என்கிறார். நாம் எந்த வேலை செய்கிறோமோ அது பற்றிய தொழில்நுட்ப அறிவு வேண்டும். அது மட்டும் போதாது, சக மனிதர்களுடன் அன்பாக நடந்து கொள்ளும் நடத்தையும் வேண்டும் என்கிறார். முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள் என்கிறார். ஒன்று வணக்கம் சொல்வதில் முந்திக் கொள்வது. இரண்டு பாராட்டுவதில் முந்திக் கொள்ளுங்கள். மூன்று நன்றி சொல்வதில் முந்திக் கொள்ளுங்கள். இவை மூன்றையும் நூலாசிரியர் வாழ்வில் கடைபிடித்து வருபவர் என்பதை நான் நன்கு அறிவேன், அவரை சந்திக்கும் போது வணக்கம் வைப்பதில் அவர் முந்தி விடுவார். அதுபோல பாராட்டவும் தயங்கமாட்டார். என் கவிதைகள் குறித்த பாராட்டை புலனத்தில் வாசித்தவுடன் அலைபேசியில் அழைத்து பாராட்டி விடுவார். அவருடைய நூல்களுக்கு நான் மதிப்புரை அனுப்பினால் உடன் நன்றியும் சொல்லி விடுவார். உன்னால் பின்பற்ற முடியாத எதையும் போதனை செய்யாதே என்ற பொன்மொழி படித்து இருக்கிறேன். நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்கள் அடுத்தவர்களுக்கும் சொல்லித்தரும் வெற்றிச் சூத்திரத்தை அவரும் தவறாமல் கடைபிடிக்கும் காரணத்தால் தான் வாழ்வில் வெற்றி பெற்று கோவையின் பெருமைகளில் குன்றாக விளங்குகின்றார். இன்பம் வந்தால் ஆடாமலும் துன்பம் வந்தால் வாடாமலும் மனதை சமநிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். 'இதுவும் கடந்து போகும்' என்ற வாசகம் கொரானோவிற்கு முற்றிலும் பொருத்தமாக அமைந்தது. கொரானோ தொற்று என்ற துன்பகாலமும் நம்மைவிட்டு கடந்து போனது உண்மைதான். ஒவ்வொரு விடியலையும் உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்கிறார். அதிகாலையில் எழும்போதே தம் மனதை உற்சாகத்துடன் தொடங்கினால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாகவே முடிவடையும். உற்சாகத்தில் முக்கியத்துவத்தை நன்கு உணர்த்தி விடுகிறார். நெருப்பை நெருப்பால் அணைக்க முடியாது. நெருப்பை தண்ணீரால் தான் அணைக்க முடியும். வெறுப்பை வெறுப்பால் போக்க முடியாது, அன்பால் வெறுப்பை நீக்க முடியும். எனவே கோபப்படாமல் குணமாக இருங்கள் என்கிறார் ‘ஆறுவது சினம்’ கட்டுரையில். இதைத்தான் வள்ளுவரும் சினம் வேண்டாம் என்கிறார். முயற்சிக்கு முடிவே இல்லை, தொடர் முயற்சி வேண்டும் என்கிறார். குறை சொல்பவர்களைப் பார்த்து கடிந்து கொள்ளாமல் அவர்களுக்கும் நன்றி சொல்லச் சொல்கிறார். உண்மைதான் நம்மைப்பற்றி குறை சொல்பவரிடம் கடிந்து கொண்டால் பகைதான் வளரும் நன்றி சொல்லி விட்டால் பகை நீளாது. சொற்களின் அற்புதம், நல்ல தேர்ந்தெடுத்த சொற்களை வெற்றிச் சொற்களை பயன்படுத்த வேண்டும். இதைத்தான் திருவள்ளுவரும் 'கனியிருக்க காய் கவர்ந்தற்று' என்றார். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தனியாக இருக்கும்போது சிந்தனையில் கவனம் செலுத்துங்கள். கூட்டத்தில் பேசும் போது சொற்களில் கவனம் செலுத்துங்கள். ஆம் விழிப்புணர்வோடு செயல்பட்டால் பேசினால் வாழ்க்கை வசப்படும். புதுவெள்ளம் வரவில்லை என்றால் கடல் கூட காய்ந்து விடும். ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டு, கற்றவற்றை பயன்படுத்திக் கொண்டு, செய்த தவறை திருத்திக் கொண்டு, வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருந்தால் வளர்ச்சி உயரம் சாதனை கிட்டும் என்கிறார். நோக்கத்தை தவற விட்டுவிட்டு தாக்கத்தை வைத்துக் கொண்டு அலைகிறோம். உண்மைதான் நோக்கம் நிறைவேறும் வரை தொடர் உழைப்பு வேண்டும். வரும் தோல்விக்காக துவண்டு விடாதிருப்பது முக்கியம். சிலர் யார் தயவும் எனக்குத் தேவை இல்லை என பிறரை தூக்கி எறிந்து பேசுவார்கள். அது தவறு. பலரின் பங்களிப்பே நம் வாழ்க்கை. சக மனிதர்களை நேசித்து அன்பு செலுத்தி வாழ்வதே மனிதனின் கடமை. இப்படி பல தகவல்களை நூல் உணர்த்துகின்றன வாசகர்களுக்கு.

கருத்துகள்