பொன்..குமார்
1946
வ.உ.சி.யின் சுயசரிதை
வரலாற்றில் வ. உ. சி. எவ்வளவு முக்கியமானவரோ அவ்வளவு முக்கியமானது ' வ. உ. சி. யின் சுயசரிதை'. சுயசரிதத்தின் முற்பகுதி சிறையிலிருந்த போது பரலி. சு. நெல்லையப்பரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது.
பூவுல கதனைப் பொருந்தி நின்று
தேவுல கதனிற் சிறந்த வுலகின்
நினைவோடு நிற்கும் நெல்லையப்ப நீ
கனிவொடு கேட்ட வென் கதைக்குறிப் பிஃதே
என சரிதத்தின் முதல் பாக தோற்றுவாயில் குறிப்பிட்டுள்ளார். பிற்பகுதி விடுதலைக்குப்பின் தெ.ச. சொக்கலிங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது. இரண்டாம் பாகம் தோற்றுவாயில் சொக்கலிங்கம் பெயர் சொல்லப்பட்டுள்ளது. ஆயினும் மொத்த சரிதமே 1912 டிசம்பர் அதாவது விடுதலை பெற்ற வரையே உள்ளது. 1915 வாக்கில் எழுதப்பட்ட இச்சுயசரிதம் அவரின் இறப்பிற்குப் பின் 1946இல் அவர் மகன் வ. உ. சி. சுப்பிரமணியம் என்பவரால் வெளியிடப்ட்டுள்ளது. பின்னர் 2008இல் செ. திவான் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. இச்சுயசரிதம் மட்டுமே அகவற்பாவால் எழுதப்பட்டதாகும். வ. உ. சி. சுயசரிதம் என்று குறிப்பிடாமல் ' தற்சரிதம்' என்கிறார். வ. உ. சி யின் வரலாறு ம. பொ. சி. யால் எழுதப்பட்டு திரைப்படமும் எடுக்கப்பட்டு மக்களாலும் அறியப்பட்டது. தண்டனையின் ஒரு பகுதியாக சிறையில் செக்கிழுக்கவும் வைக்கப்பட்டார்.
திங்கட் கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன்அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாய்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினான். அவனுடை அன்புதான் என்னே!
என செக்கிழுக்க வைத்த சம்பவத்தை எழுதியுள்ளார். சிறையில் தண்டனை அனுபவித்த காலம் ஏறத்தாழ ஐந்து வருடங்கள் . " தீவிர அரசியல்வாதியாக வ.உ.சி. வாழ்ந்த வாழ்வு அவர் இறப்பதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது. அந்த வாழ்வையே ஒரு முழுமை வாழ்வாகக் கொண்டு மதிப்பிடுவதற்குத் தேவையான எல்லாப் பண்புகளையும் அந்த வாழ்வு தன்னுள் அடக்கியதாகவே உள்ளது' என்று கூறுவதன் மூலம் சாலினி இளந்திரையன் வ.உ.சி.யின் சுய சரிதையை ஒரு முழுமையான இலக்கியமாகக் காட்டுகிறார் என்கிறார் பதிப்பாளர் செ. திவான். " ஒருவருடைய வாழ்க்கையில் நேரக்கூடிய
நிகழ்ச்சிகளோ, சந்தர்ப்பங்களோ
இன்னொருவருடைய
வாழ்க்கையில் இருப்பதில்லை. உலகில் எத்தனை கோடி மனிதர்கள் இருக்கின்றார்களோ, அத்தனை கோடிச் சரித்திரங்கள் இருக்கின்றன. ஆனால் அந்தச் சரித்திரங்களில் பிறருக்கு வழிகாட்டக்கூடிய
சரித்திரங்களாக சிலவற்றையே ஏற்றுக் கொள்ளலாம். அந்த
வகையில் அகிலம் ஏற்றுக் கொள்ளக்கூடிய சரித்திரம் அஞ்சா
நெஞ்சர் வீரத்தலைவர் வஉசியின் 'சுய சரிதை' ஆகும் " என்னும் செ. திவானின் கூற்றும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்.
அட்டைப்படம் : அ. கார்த்திகேயன்

கருத்துகள்
கருத்துரையிடுக