படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நேற்று மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற கமல்ஹாசன் ‘விழுமிய முறைமையுடன் உறுதிகொள்கிறேன்’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தினார். இவ்விழுமிய முறைமை என்பதில் உள்ள ‘விழுமியம்’ என்றால் என்ன ? விழு என்பதற்கு ‘உயர்ந்த, சிறந்த, பெரிய, மிகநல்ல’ என்னும் உயர்வுச் சிறப்புப் பொருளைக் கொள்ளவேண்டும். அருஞ்சொல்போல் தோன்றினாலும் நாம் நன்கறிந்த சொற்களில் ஒன்றுதான் ‘விழு’ என்பதும். உடலில் தோன்றும் ‘புண்’ என்பது இழிவானது. ஆனால், போர்க்களத்துச் செருநன் எதிரியினால் தாக்கப்பட்டுப் பெறுகின்ற ‘புண்’ இழிவானதன்று. அது உயர்வானது. அந்தப் பொருளில்தான் ‘விழுப்புண்’ என்கிறோம். எத்தனையோ செல்வங்கள் இருக்கலாம். செல்வம் என்றாலே உயர்வானது, சிறந்ததுதான். அவற்றில் மிகப்பெரிது, மிக உயர்வானது, மிகச் சிறந்தது கல்வி என்னும் செல்வம்தான். அதனால்தான் ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’ என்கிறார் வள்ளுவர். கேடில்லாதது, சிறந்துயர்ந்த பெரிது கல்வி என்னும் செல்வம்தான். ஒழுக்கம் தருவது உயர்வு, சிறப்பு, நன்மை. அதனைக் குறிக்கும் சொல் விழுப்பம். அதனால்தான் ஒழுக்கம் தருவது விழுப்பம். ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. எத்தனையோ நகரங்கள் இருக்கலாம். அவற்றில் சிறந்தது என்னும் பொருளில் அமைந்ததுதான் விழுப்புரம். நாம் நன்கறிந்த ஊர். விழு என்பதுதான் விழுப்பம், விழுமம் என ஆகும். அத்தகைய மதிப்புமிகு உயர்நிலைப் பாங்கு என்பதே விழும இயம் = விழுமியம். விழுமிய முறைமை என்பதற்கு ‘மதிப்புறு, உயர்சிறப்புமிகு முறைமை’ என்று பொருள். - கவிஞர் மகுடேசுவரன்

கருத்துகள்