சட்டச் சொற்கள் விளக்கம் 991-995 : இலக்குவனார் திருவள்ளுவன்
ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 31 July 2025 அகரமுதல
(சட்டச் சொற்கள் விளக்கம் 986-990 : தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 991-995
991. Authenticate உறுதி யளி
மெய்யெனக் காட்டு
போலியல்ல என ஆதாரம் காட்டு
அதிகார அளிப்பு உறுதியொப்பமிடு;
உறுதி யொப்பமிடுதல்
சட்டச் சூழலில், உறுதி அளிப்பு என்பது நீதிமன்றத்தில் அதன் ஏற்றுக்கொள்ளத்தக்க தன்மையை நிறுவ, ஒரு செய்தியின், குறிப்பாக ஆதாரத்தின் உண்மையான தன்மையை மெய்ப்பிப்பதை அல்லது சரிபார்ப்பதைக் குறிக்கிறது. இச் செயல்முறை, வழங்கப்பட்ட சான்றுகள் போலியானவை அல்லது புனையப்பட்டவை அல்ல, மாறாக அவை கூறப்பட்டவை என்பதை உறுதி செய்கிறது.
992. Authenticated extracts உறுதி யளிக்கப்பட்ட எடு பகுதிகள்
உறுதிச்சான்றிடப்பட்ட எடு பகுதிகள்
extract என்பதை எடு குறிப்பு என்றும் சொல்கின்றனர். குறிப்பு என்பது உள்ளதை நம் வரிகளில் குறிப்பதாகவும் பொருள்படும். ஆனால் ஆவணத்தின் சில பகுதிப் பக்கங்களை உள்ளவாறே எடுத்துத் தருவது. எனவே, எடு பகுதி என்பதே சரியாகும்.
993. Author ஆக்கியோன்
படைப்பாளி
மூலவர்
ஆசிரியர்
நூலாசிரியர்
ஆசிரியர் என்பது புத்தகத்தின்/ நூலின் ஆசிரியர் எனப் பொருளாகும். இலத்தீன் auctor > augeō = தோற்றம் / உருவாக்கல். இதிலிருந்து உருவானது. ஒரு படைப்பைத் தோற்றுவிப்பவன் அல்லது உருவாக்குநன். எனவே, ஆக்கியோன், படைப்பாளி என்கின்றோம்.
994. Author of the trust அறக்கட்டளைப் பொறுப்பாண்மையர்
பொறுப்பமைப்பாளர்
trust என்றால் கைப்பிணை, துணிவு, பாரம், கையடை, கையம்பு, நம்பகம், நம்பிக்கை, பொறுப்பாட்சி, அறக்கொடை, அறக்கட்டளை, பொறுப்பாண்மை, பொறுப்புரிமை அமைப்பு எனப் பல பொருள்கள் உள்ளன. கைப்பிணை முதலியன நம்பிக்கை அடிப்படையில் ஒப்படைக்கப்படுவனவற்றைக் குறிப்பன. பெருமளவுத் தொகையை அல்லது சொத்தினை அறச்செயல் புரிய ஒப்படைக்கப்படுவனவற்றை அறக்கொடை என்கின்றனர். அறக்கொடையின்மூலம் அமைக்கப்படுவன என்பதால் இப்போது நாம் அறக்கட்டளை எனப் பயன்படுத்தி வருகிறோம்.
Author of the trust என்னும் பொழுது, அறக்கட்டளையைத் தோற்றுவித்தவரைக் குறிக்கிறது. அவர் இருக்கும் பொழுது அல்லது அவருக்குப் பின்னர் இதனைப் பொறுப்பாகச் செயற்படுத்தும் குழுவினரைப் பொறுப்பாண்மையர்/பொறுப்பமைப்பாளர் என்கின்றனர். எனவே, அறக்கட்டளைப் பொறுப்பாண்மையர் எனலாம். நம்பிக்கை என்னும் பொருள் கொண்ட தொல்செருமானியச்சொல்லான traustą என்பதிலிருந்து உருவானது.
995. Authorisation / Authorization அதிகார அளிப்பு
சட்டப்பூர்வமாக அதிகார அளிப்பு என்பது மற்றொருவரின் சார்பாகச் செயல்பட அல்லது ஒரு குறிப்பிட்ட செயலை மேற்கொள்ள அதிகாரம், இசைவு அல்லது உரிமையை வழங்குவதைக் குறிக்கிறது. இஃது அடிப்படையில் ஒருவருக்கு ஏதாவது ஒன்றைச் செய்ய சட்டப்பூர்வ அதிகாரத்தை வழங்கும் செயல்முறையாகும். அது முடிவுகளை எடுப்பதா, வளங்களை அணுகுவதா அல்லது பணிகளைச் செய்வதா என்பது குறித்ததாகும்.
எடுத்துக்காட்டாக, ஒரு பகர அதிகார ஆவணம், நிதிமேலாண்மையிலும் சட்டம் தொடர்பானவற்றிலும் முடிவுகளை எடுத்துச் செயலாற்ற முடியாத மற்றொருவருக்காகச் செயற்படும் அதிகாரத்தை ஒருவருக்கு வழங்குகிறது.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள்
கருத்துரையிடுக