இனிய வணக்கம் ." கம்பீரம் இல்லாதவர்களை யானை ஒருபோதும் அனுமதிக்காது. யானை என்று இல்லை ,கழுதை கூட பயந்தாங் கொள்ளிகளைச் சுமக்க விரும்புவது இல்லை. முல்லா நசிருதீன் நகைச்சுவையாகச் சுபி இலக்கியத்தின் கூறுகளை விளக்கும் குறியீடு. ஒரு முறை அவர் புதிதாக வாங்கிய குதிரையின் மீது சவாரி செய்யக் கிளம்பினார். அந்தக் குதிரையோ முரட்டுக்குதிரை. முல்லாவிற்குக் கட்டுப்படவில்லை. தாறுமாறாக ஓடியது.
முல்லாவிற்கு நடுக்கம். எங்கே தூக்கி எறியப் போகிறதோ என்ற பயம்.
அப்போது எதிரில் வந்த ஒருவர் ஏதோ பிசகு நடந்துவிட்டது என்று புரிந்து கொண்டு முல்லாவைப் பார்த்து 'எங்கே செல்கிறீர்கள் முல்லா ?.'என்று கேட்டார் .அதற்கு முல்லா 'எனக்கென்ன தெரியும். நீங்கள் குதிரையைத்தான் கேட்க வேண்டும்' என்று பதில் சொன்னார்.
சிலர் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு, அவர்களாக எந்த முடிவும் எடுக்காமல், அவர்களை இயக்குபவர்களின் கைப்பாவையாக இருப்பது உண்டு. முல்லா அவர்களையே சுட்டிக் காட்டுகிறார்.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 230" .இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.
------------------------------------------------------------------------------------------
இனிய வணக்கம் ." திருட்டுத்தனம் செய்கிறவர்கள் தங்களையும் அறியாமல் பதுங்கிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.கோண்மா நெடுங்கோட்டனார் நற்றிணையில் பாடல் ஒன்றை வடித்திருக்கிறார். மற்ற பெண்களோடு ஊர் சுற்றுகிற தலைவன் தனக்கு மகன் பிறந்த செய்தியைக் கேள்விப்படுகிறான். அவன் கள்வனைப் போல மெல்லப் பதுங்கி யாருக்கும் தெரியாமல் தனி இல்லத்திற்கு வருகிறான்.
' பசு நெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈர் இமை பொருந்த, நள்ளென் கங்குல் கள்வன் போல
அகன் துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்தமாறே (40)
கள்ளத்தனம் செய்பவர்கள் தங்கள் வீட்டிற்கே பதுங்கித்தான் செல்கிறார்கள். கம்பீரம் உள்ளவர்கள் மற்றவர்கள் இல்லங்ளுக்கும் மாண்புடன் செல்கிறார்கள். நிறுவனத்தில் தவறு செய்பவன் பம்முவதைப் பார்த்தும், பதில் சொல்லும் போது அவன் நா குழறுவதைப் பார்த்தும் கண்டு கொள்ளலாம். உண்மையுள்ளவன் வாக்கில்
ஒளியுண்டு.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 229" .இந்த நாள் இனிமையான நாளாக அமையட்டும்.
-----------------------------------------------------------------------------------------
இனிய வணக்கம் ." தோரணை என்பது சொற்களற்ற மொழியில் முக்கிய அங்கம் வகிக்கிறது
. ஒருவர் நிற்பதைப் பார்த்தே அவர் மேலதிகாரியா இல்லையா என்பதைச் சொல்லிவிடலாம். ஒருவர் தொலைபேசியில் பேசுகிற தோரணையை வைத்தே அவர் யாரிடம் பேசுகிறார் என்பதை அறிய முடியும். தலையை நேராக வைத்துப் பேசினால் பணியாளரிடம் பேசுகிறார் என்று பொருள், குனிந்து பேசினால் அதிகாரியிடம் பேசுகிறார் என்று பொருள். உடலைத் திருப்பிப் பேசுகிறார் என்றால் மனைவிடம் பேசுகிறார் என்று பொருள். அடிக்கடி சிரித்துக் கொண்டே பேசினால் பிரியமானவர்களிடம் பேசுகிறார் என்று பொருள்.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 228" .இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக