படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

இனிய காலை வணக்கம் ." நற்றிணையில் புரளி பேசுவது பற்றிய ஒரு குறிப்பு இடம் பெற்றிருக்கிறது. வெளிப்படையாக தூற்றிப் பேசுவதை அலர் என்றும் ,மறைவாகத் தங்களுக்குள் குறிப்பால் பேசிக்கொள்வதை அம்பல் என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்படுவதாகச் 'சங்கச் செவ்வி' நூலில் சுந்தர ஆவுடையப்பன் கூறுகிறார்.பெண்கள் கூடி ஒருவருக்கொருவர் கடைக்கண்களால் ஜாடை பேசி மூக்கின் மேல் சுட்டுவிரலை வைத்து,தலைவியின் செயல்பற்றி விமர்சிப்பதை எடுத்துக்காட்ட ஒரு பாடலையும் மேற்கோள் காட்டுகிறார். 'சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப.... ............ செலவயர்ந்தி சினால் யானே! அலர்சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே!.'(149) காதல் பரிமாற்றத்தில் கண்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது ."கண் களவு கொள்ளும் சிறுநோக்கம், காமத்தில் செம்பாகம் அன்று பெரிது' என்ற திருக்குறளும் ,'காசில் காமம் செப்பிக் கண்ணினால் இரப்பர்" என்று சீவக சிந்தாமணியும் கண்களின் மகத்துவத்தை எடுத்தியம்புகின்றன. காமத்துப்பாலில் கண்களைப் பற்றி வள்ளுவர் வகுப்பே நடத்துகிறார் . மைதீட்டிய கண்களில் தலைவனுக்கு ஏற்படுத்தும் நோயும் இருக்கிறது,அந்த நோய்க்கு மருந்தும் இருக்கிறது என்கிறார். முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 234" .இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.

கருத்துகள்