படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

ஒரு வெளிநாட்டு எழுத்தாளரிடம் நீங்கள் எப்படிக் கதை எழுதுகிறீர்கள்? என்று கேட்டார்களாம். அவர் , ‘என் ஜன்னலகளைத் திறந்து வைக்கிறேன், பறவைகளைப் போல கதைகள் உள்ளே நுழைகின்றன,’ என்றாராம். அவர் அப்படிச் சொன்னதை அம்பையிடமும் சொல்லி ‘உங்களுக்கு எப்படி? ‘ என்று கேட்டிருக்கிறார்கள் அதற்கு அம்பை சொன்ன பதில் : “ஜன்னல், பறவை என்பதெல்லாம் ரொம்பவும் கவித்துவமானதுதான். ஆனால் பெண்களுக்கு அப்படி அமைவதில்லை. மேலும் ஜன்னல் இருப்பதும் அதைத் திறக்கும் அதிகாரமும் அப்படியே திறந்தாலும் அதில் பறவைகள் உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரமும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டுமே!” என்றாராம். சமூகத்தில் பெண்ணின் நிலையை இவ்வளவு தெளிவாக முன் வைக்கும் அம்பை தான் எக்காலத்தும் தன்னை ஒரு பெண் எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தப்படுவதை எதிர்த்தே வருகிறார். பெண் எழுத்தாளர்களில் சிறந்த எழுத்தாளர் அம்பை என்ற அடையாளத்தில் இருக்கும் நுண் அரசியலையும் அம்பை மிகத் தெளிவாக அறிந்திருக்கிறார். அதனால் தான் ஆண் பெண் அடையாள மறுப்பை ஏற்ற மகாபாரதக் கதைப் பாத்திரமான அம்பை என்ற கதைப்பாத்திரம் அம்பைக்கு மிகவும் நெருக்கமானதாகிறது. அம்பை தன் புனைப்பெயருக்கான காரணத்தைச் சொல்லும்போது மகாபாரத அம்பையுடன் சேர்த்து இன்னொரு அம்பையையும் முன் வைக்கிறார். அவர் தன் 9 வயதில் வாசித்த ஒரு புதினத்தின் கதைப் பாத்திரம் தன்னை மிகவும் பாதித்தாக பதிவு செய்திருக்கிறார். சென்னையில் வசிக்கும் கணவன் மனைவி இருவரில் வழக்கம்போல கணவன் எப்போதும் மனைவியை மட்டம் தட்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு நிலையில் அவளை விரட்டி விடுகிறான். அப்பெண் தனித்து நின்று வாழ்க்கையை எதிர் கொள்கிறாள். டீச்சராக வேலைப் பார்க்கிறாள். எழுத ஆரம்பிக்கிறாள். அவளின் எழுத்து அவளுக்கு அடையாளத்தையும் புகழையும் கொடுக்கிறது. காலப்போக்கில் அவன் வேலை இழந்து நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறான். அவனைத் தேடிவரும் அவள் அவனுக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுக்கிறாள். அவன் மீண்டும் அவளுடன் பழைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று அழைக்கிறான். இன்னும் ஒரு படி மேலே போய் அவள் இனி எழுதுவதை விட்டுவிடவேண்டும் என்றும் சொல்கிறான். அவனிடம் அவள் எதுவும் சொல்லாமல்ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறுகிறாள். “உனக்கு வேலை கிடைத்தாகிவிட்ட து. உன்னோடு மீண்டும் அந்தப் பழைய வாழ்க்கைக்கு திரும்ப விருப்பமில்லை.“ இந்த முடிவை எழதிய அந்தக் கதைப்பாத்திரத்தின் பெயர் “அம்பை” . தன்னை மிகவும் பாதித்த ஒரு பெண்ணின் கதை என்று சொல்லும் அம்பை இதுதான் லஷ்மி என்ற பெண் அம்பையாக மாறியதன் முதல் அத்தியாயம். இந்தக் கதைப் பாத்திர அம்பையின் தாக்கம் எழுத்தாளர் அம்பையின் மன ஓட்டத்தையும், திடமான முடிவு எடுக்கும் பெண்ணாகவும் பெண்களை அடிமைப்படுத்தும் மரபுகளுக்கு எதிராக எழுத்திலும் வாழ்க்கையிலும் போராடும் அடையாளமாகவும் மாற்றி இருக்கிறது. -புதிய மாதவி நன்றி: சொல்வனம்

கருத்துகள்