இறையன்பு... 🌺
புத்தக உலகின் வழியேதான் தமிழ் நெஞ்சங்கள் பலவற்றிற்கும் நெருக்கமாக அறிமுகமானவர் அன்பிற்கினிய இறையன்பு அவர்கள். அவர் எழுதிய ஏழாவது அறிவு என்ற நுால்தான் நான் வாசித்த அவரின் படைப்புகளில் எனக்கு முதல் நுால். அதன் தலைப்பே என் மனதை வசீகரித்தது. அதன்பிறகே இறையன்புவின் நுால்களை வாங்கலானேன்.
அவரின் எழுத்துகளில் எது ஒன்றை எடுத்தாலும் அது மேற்கோளாக மேலோங்கி நிற்கும். பல புத்தகங்களை முதலில் இருந்து வாசிக்க வேண்டிய அவசியமே இல்லாதது போலவே தோன்றும். ஏதேனும் ஒரு பக்கத்தைத் திறந்து வாசித்தால் அதில் நம் மனதைத் தொடுகின்ற நற்கருத்துள்ள சிந்தனையானது ஒரு சொல்லாகவோ, ஒரு வரியாகவோ அல்லது ஒரு பத்தியாகவோ இருக்கும்.
அவர் ஒரு சிறந்த மனித நேயமுள்ள நேர்மைமிகு இந்திய ஆட்சிப்பணி (IAS)அதிகாரி. தன் நேர்மறையான சிந்தனையோடு கைகோர்த்து, தன்னுடைய அதிகார இருக்கையில் விரிக்கப்பட்ட வெள்ளைத் துணியில் கரும்புள்ளி படாமல் அப்பழுக்கற்ற நிர்வாகியாக இருந்து, தான் வகிக்கும் துறையில் புதுமையான திட்டங்களை உருவாக்கி, மக்கள் மனங்குளிர பாடுபடுகின்ற அற்புதமான மனிதராக இருந்தவர். ஆனாலும், கடந்த கால ஆட்சியமைப்புகளில் அவர் முக்கியத்துவம் இல்லாத துறைகளில் அமர்த்தப்பட்டார்.
ஆனால், இறையன்புவைப் பொருத்தமட்டில் எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நன்குணர்ந்தவர். அவரிடம் மண்ணாங்கட்டியைக் கொடுத்தால், அதை வைரமாக மாற்றி மக்களுக்கு எப்படி சேவை செய்யலாம் என்பதை மட்டுமே சிந்திப்பவர்.
இதன் காரணமாகவே இறையன்புவின் மீது ஓர் அலாதியான அன்பும், ஈடுபாடும் எனக்கும் என் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான அவரின் வாசகர்களுக்கும் உண்டானதுதான் பேரதிசயம்.
நான் அனுப்பிய பல விமர்சனக் கடிதங்களுக்கு உடனுக்குடன் சிறிய அச்செழுத்து போன்ற தன்னுடைய அழகான கருப்பு மையிலான கையெழுத்தில் பதில் எழுதுவார். பொறுப்புள்ள மனிதரின் சிறந்த பண்புகளில் இதுவும் ஒன்று என்பதை நான் அவரின் செயல் வழியே உணர்ந்து கொண்டேன்.
மானசீகமான ஒரு ரீதியில் இறையன்பு அவர்கள் நம்மை வழிநடத்துகிறார் என்பதை அறிந்து நாட்கள், வாரங்கள், வருடங்கள் என்பதைக் கடந்து அவரின் அன்புக் கரங்களைப் பிடித்து இதுகாறும் பயணித்துக்கொண்டே இருக்கிறேன்.
கோபம், வெறுப்பு, ஆசை இவைகள் கூட நேர்மையின்மையின் அம்சங்கள்தான். அவைகளை நம் போன்ற சாமான்யர்கள் அகற்றிவிட்டு வெளியே வருவதற்கு விரும்புவதில்லை. அல்லது முடிவது இல்லை. ஆனால், இறையன்பு அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயன்றவரை பிடிமானமாக களமிறங்கி, காரியமாற்றுகின்ற அரிய அதிகாரி.
அவரைப்போல நாமும் நம்முடைய வாழ்க்கையில் எண்ணம் சிந்தனையை ஒழுங்குபடுத்தி நேர்கொண்ட பாதையில் பயணிக்க முயலும்போது, பல இடங்களில் தடுமாற நேரிடுகிறது.
விழிப்புணர்வு என்ற சொல் தமிழில் இருக்கிறது. அந்தச் சொல் நமக்குத் தருகின்ற வாழ்க்கை போதனைகளை எனக்குள் இறையன்புதான் பதியமிட்டார். இந்த உணர்வு அவரின் அன்பர்கள் பலருக்கும் உண்டு என்பதே மெய்.
ஏராளமான நுால்களை வாசித்துக் கொண்டும், யோசித்துக்கொண்டும், எழுதிக்கொண்டும் தன் பணியில் கவனத்தைச் செலுத்திக்கொண்டும் இருந்த இறையன்பு அவர்களை தற்போதைய தி.மு.க.அரசு, தலைமைச்செயலாளர் பொறுப்பை வழங்கி சிறப்பு செய்து அழகு பார்த்தபோது, இறையன்பு குறித்து எதிரிடையான, குறைநிலையான கருத்து யாரிடமிருந்தும் எழவில்லை என்பதுதான் அவருடைய இத்தனை ஆண்டு கால ஐஏஎஸ் பணியின் அர்ப்பணிப்பான தவத்தின் பலன்.
தலைமைச்செயலாளர் பொறுப்பேற்றதும் நான் அவரிடம் அலைபேசியில் அழைத்து வாழ்த்துகள் சொல்லிவிட்டு, “சார், உங்களைப் பொருத்தவரை இது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. முன்பிருந்த மனநிலை மாறாமல் ஒரே நிலையில் பணியாற்றக்கூடியவர் நீங்கள். ஆனால், எங்களுக்கு இது மிகப்பெரிய பெருமை. பெருமிதம்“ என்றேன். அவர், லேசாக சிரித்து விட்டு, நன்றி திராவிடமணி என்று முடித்துக்கொண்டார்.
பதவியேற்றவுடனேயே, தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களை இழுத்து மூடி விட்டார். தன் நட்பு வட்டங்களின் தொடர்புகள் அனைத்தும் துண்டித்து விடாதபடி பார்த்துக்கொண்டார். எப்படியென்றால், தன் சிந்தனை களைக் குறட்பா போன்று குறுந்தகவல்களாக குறிப்பிட்ட அந்த அதிகாலை வேளையில் அனைவருக்கும் அனுப்பி வைத்து விடுவார்.
அலைபேசியில் அழைத்தால், நண்பர்களிடம் வணக்கம், நலமா என்கிற சம்பிரதாயத்தைத் தவிர்த்துவிட்டு, நேரடியாக விசயத்தைப்பேசுவார். ஒரு குவளை அரிசியானது, ஒரு சட்டி நிறைய சோறாவதைப்போல, ஒரு நிமிடத்தை ஒரு மணி நேரமாக மாற்றிக் கொள்ளக்கூடியவர்.
மனிதர்களை முடிந்தவரை மிக துல்லியமாக உளவியல் ரீதியில் பகுப்பாய்வு செய்யக்கூடிய ஆற்றலை வளர்த்துக்கொண்டவர்.
தலைமைச்செயலாளர் என்கிற ரீதியில் அரசு நிர்வாகத்தில் மக்களின் சிரமங்களைத் தவிர்க்க பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
தலைமைச் செயலகத்திற்கு காலையில் வருகின்ற முதல் அதிகாரியாகவும், அங்கிருந்து வெளியேறுகின்ற கடைசி அதிகாரி யாகவும் இருந்து, தலைமைச் செயலரின் தலைமைப்பண்பிற்கு உரிய மிக உயர்ந்த தனித்துவமான எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திருக்கி
றார்.
வார விடுமுறை நாட்களிலும் அரசுக்காகவும், மக்கள் நலத்திற்காகவும் பணிசெய்து கிடப்பதில் அக்கறை கொண்டு விளங்கியவர் இறையன்பு.
இரண்டு ஆண்டுகள் மூன்று மாத காலங்களில் தன்னுடைய தலைமைச் செயலாளர் பொறுப்பில் தன் மனசாட்சிக்கு விரோதமின்றி, அந்த இருக்கையை அலங்கரித்து, நிறைவுடன் பணியாற்றியுள்ள மரியாதைக்குரிய முதுமுனைவர் வெ.இறையன்பு அவர்கள் நாளை மறுதினம் 30.06.2023 வெள்ளிக் கிழமையன்று பணியிலிருந்து ஓய்வெடுத்துக் கொள்ளவிருக்கிறார்.
அரசுப்பணி என்பதோடு நில்லாமல்
தமிழ் எழுத்துலகில், பேச்சுலகில் பயணித்து உலகெங்கும் உள்ள தமிழ் உள்ளங்களில் நீக்கமற நிறைந்த புகழை ஈட்டியவர் இறையன்பு அவர்கள். தமது பணி நிறைவுக்குப் பின்பு உள்ள காலங்களை இந்த உலகுக்கு எவ்வாறு பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிற முன்திட்டம் நிச்சயமாக அவரிடம் இருக்கும். அதில் அவர் நிச்சயமாக தடம் பதிப்பார்.
இந்தப்பதிவின் ஒவ்வொரு சொல்லின் இடைவெளியிலும் நடைபயிலும் இறையன்புவின் இனிய நண்பர் திரு.முனைவர் சுந்தர ஆவுடையப்பன் மாமா அவர்களையும் இந்த வேளையில் அன்போடு நினைவுகூர்கிறேன்.
அன்பிற்கும், நட்பிற்கும், மிகுந்த மதிப்பிற்கும் உரிய திரு.இறையன்பு அவர்களே..
செயலே மிகச்சிறந்த சொல் என்ற வாக்கியத்திற்கேற்ப வாழ்ந்து கொண்டிருக்கின்ற மிக அற்புதமான அரிய மனிதர்களில் தாங்களும் ஒருவர். 2005 ம் ஆண்டிலிருந்து தங்களின் அழகிய நட்பெனும் நந்தவனத்தில் பழகிய பட்டாம் பூச்சியாக சிறகடிப்பதில் எனக்கு என்றென்றும் பேரானந்தமே.
தாங்கள் நுாறாண்டு ஆயுட்காலம் வரை குடும்பத்தாருடன் மகிழ்வுடனும், நலத்துடனும் விளங்கிடவும், தங்களின் நல்லெண்ணம் சிறந்து துலங்கிடவும் எல்லாம் வல்ல சக்தியை எப்போதும் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துகள்.
என்றும் அன்புடன்..
கவிஞர் செ.திராவிடமணி கூடலூர்
(28.6.2023ல் அடியேனின் முகநூல் பதிவு இது)

கருத்துகள்
கருத்துரையிடுக