படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி ! தமிழ் சினிமாவின் தலைசிறந்த பெண் பாடலாசிரியர். தான் எழுதும் எந்த பாடல்களிலும் ஆங்கில வார்த்தையை பயன்படுத்தாதவர். குத்து பாடல் மற்றும் கவர்ச்சி பாடல் என்று வியாபார யுக்தி கொண்ட பாடல்களை அறவே தவிர்த்து தரமான மக்கள் ரசிக்கக்கூடிய பாடல்களை மட்டுமே எழுதுபவர். ஒரு பாடலை எழுதி முடித்த பிறகே, அடுத்த பாடலுக்குப் போவாராம். அதுவும் மாதம் 3 பாடல்கள் தானாம். தரத்தின் ரகசியம் புரிகிறது. இதன் காரணமாக பல திரைப்பட வாய்ப்புகளை இழந்தவர். "நான் இங்கு பணத்திற்காகவோ புகழுக்காகவோ வரவில்லை.எனக்கு ஒரு வேலை வேண்டும் அந்த வேலை நியாயமான நாகரிகமான மனதிற்கு பிடித்ததாக இருக்க வேண்டும் அதன் மூலம் சமூக சிக்கல்களில் என் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் அதோடு தமிழினத்தின் உரிமை போராட்ட வரலாற்றில் என் பெயரும் இருக்க வேண்டும் அவ்வளவுதான்" என்று கூறி இருக்கிறார். மற்ற திரைப்பாடலாசிரியர்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் (500 பாடல்களுக்கும் குறைவாக) பாடல்களை எழுதியிருந்தாலும் தனக்கென தனி ரசனை உலகத்தை உருவாக்கியிருப்பவர். சமூகத்தைத் திருத்துகிறேனோ இல்லையோ, கெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். புகை, மது, போதை இவற்றைத் தூக்கிப் பிடிக்கும் பாடல்களுக்கு அறவே மறுப்பு! என் பாடல் வாய்ப்புகளை நான்தான் தேர்ந்தெடுக்கிறேன். எனவே, என் வரையறைகளைக் காப்பாற்றிக் கொள்கிறேன் என்று கூறியவர். மின்னலே படத்தில் "வசீகரா" பாடலின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ் மற்றும் இயக்குநர் கௌதம் மேனன் இணைந்து பணியாற்றிய படங்களில் தாமரையின் பாடல்கள் மிக சிறப்பாக அமைந்திருக்கும். அவை காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் வாரணம் ஆயிரம். ஆகிய திரைப்படங்கள்.

கருத்துகள்