படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி ! பழனிக்குமார் முக நூல் பதிவு

பழனிக்குமார் முக நூல் பதிவு எல்லா ஊரிலும் வெயில் அதிகமாக இருக்கிறது என்று நிறைய நண்பர்கள் சொல்கிறார்கள். மதுரையில் சர்வசாதாரணமாக 41 டிகிரி க்கு மேல் போகிறது. அதன் வெட்கை இரவு முழுக்க தொடர்கிறது. நேற்றைக்கு ஒரு பால்காரர் மீனாட்சி திருவிழாக்கு கொடியேற்றம் அப்ப மழை வரனும் என்றார். இன்றைக்கு தெருவில் நடந்து செல்கையில் முன்னே சென்ற பாட்டி அழகர் தான் மழையைக் கொண்டு வரனும் என்று சொல்லிவிட்டுப்போனார். மதுரை மக்கள் புழுங்கிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாய் காற்றுவாக்கில் என்று சொல்லும்படியான திறந்தவெளி பொழுதுபோக்குகள் எல்லாம் மதுரையில் இல்லை. ஒரு கோட்டைக்குள் இருந்த ஊர் தானே? இன்னும் கட்டமைப்பிற்குள் இருந்துகொண்டு மழை என்றால் நனைந்துகொண்டும், வெயில் என்றால் வாழ்ந்துகொண்டும் இருக்கிறது. வெயிலை நோவது ஏன்? மதுரையைச் சுற்றி எத்தனையோ சல்லித்தனங்கள் செய்திருக்கிறோம். அதிகம் வேண்டாம் இரண்டு வருடங்களுக்கு முன் மதுரை - நத்தம் சாலையும் இப்பொழுது இருக்கும் சாலையும் நினைத்துப்பார்க்கலாம். 2005 வாக்கில், ஜூலை மாத இரவிலிருந்து ஜனவரி வரைக்கும் கூட நாங்கள் வேலை முடித்து இரவு ஒன்பது மணிக்குத் திரும்புவோம். மழைச்சாரலோ, பனியோ அதிகமாக இருக்கும் என்று வாயில் சூயிங்கம் போட்டு மென்றுகொண்டே பைக் ஓட்டி வந்த காலம் உண்டு. அத்தனை மரங்களும், அடர்ந்த வனமுமாய் இருந்த பாதை இன்று மதுரை விஷால் மால் பாலத்தில் ஏறி நின்று பார்த்தால் நத்தம் பரோட்டா கடையில் பரோட்டா வெந்த பதம் கூடத் தெரிந்துவிடும். அத்தனை மரங்களை வெட்டியிருக்கிறோம். மதுரை மேலூர் சாலையும் அது போல் தான். மதுரை நகருக்குள் பால்பண்ணை சிக்னல், ஆரப்பாளையம் சிக்னல், அப்போலோ சிக்னல் களில் அத்திப்பூத்தாற்போல் சில மரங்கள் நிற்கின்றன. எப்போதும் சிக்னலில் முந்தியடித்துக்கொண்டு நிற்கும் வண்டிகள் பத்துமீட்டர் க்கு முன்னே மர நிழலில் நிற்கிறார்கள்.என்றோ யாரோ வைத்த மரத்தில் இன்று நாம் நிற்கிறோம் என்பது முக்கியமானது. ஒரு பொருளை அழிப்பது எளிது. உருவாக்குவது கடினம். இயற்கை அப்படித்தான். இரண்டு நாட்களுக்கு முன் மீனாட்சிசுந்தரம் அண்ணன் ஒரு வீடியோ பகிர்ந்தார். வெயிலில் எவ்வளவு வெப்ப நிலை, மர நிழலில் எவ்வளவு வெப்ப நிலை என்று.முடிந்தவரை மரங்களை இப்போதிருந்து நட்டுவைத்தால் நம் அடுத்த தலைமுறையினர் தப்பிப்பார்கள். அதுவரை நம்மைத் தக்கவைக்க வேண்டும். வெயில் அதிகமாக இருப்பதனால் என்னென்ன செய்யலாம். * முதியவர்கள் வெளியில் வராமல் இருப்பது நல்லது . குறிப்பாய் காலை 11 முதல் 4 வரை. முதியவர்களிடம் பிடிக்காத விசயம் அவர்களது பிடிவாதம் தான். தேர்தல் காலம் என்பதால், வாக்குச்சீட்டு வாங்கப்போவதற்கும், வாக்குச்சாவடியில் பழைய கெத்துகளைக் காட்டுவதற்கும், வாக்காளர் பட்டியலில் பெயர் பார்ப்பதற்கும் போகாமல் சமாளிக்கலாம். வங்கி , பென்ஷன், ரேஷன் போன்ற இத்யாதிகளுக்குப் போகும்போது குடையோ, வண்டியோ பயன்படுத்திக்கொள்வது நல்லது. * அதிக தண்ணீர் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆதலால் எப்போதும் பருகுவதை விட அதிகமாகப் பருகிக்கொள்ளவேண்டும். குறிப்பாய் வெயிலில் செல்பவர்கள். * காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நோயாளிகள், முதியவர்கள் மாலை நடக்க யோசிக்கலாம். இல்லாவிட்டால் அதிகாலையிலேயே நடக்கப் பழகலாம். தேவையற்ற நீர்ச்சத்து குறைபாட்டிற்கு ஆளாகாமல் பார்த்துக்கொள்ளலாம். * என்னைப்போன்ற விற்பனைத்துறையில் இருப்பவர்கள் , வெயிலில் அலையும் வேலை கொண்டவர்கள், கையில் தண்ணீர் கொண்டு போகலாம். * நீர்ச்சத்துப் பழங்கள், காய்கள் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். * ஹீட் ஸ்ட் ரோக் வர வாய்ப்பு இருப்பதால், மருத்துவர்களிடம் அதற்கான ஆலோசனை கேட்டு வருமுன் காக்கலாம். * குடல் , ஆசனவாய் கோளாறுகள் உதாரணமாக பைல்ஸ், ஃபிஷர், ஃபிஷ்டுலா போன்ற நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட அதிகமாகத் தண்ணீர் பருகவேண்டும். * குழந்தைகளுக்கு வயிற்று உபாதைகள் வரும் காலம். சிறு குழந்தைகள் ஒரு அல்லது இரண்டு முறை வயிற்றுப்போக்கு போனாலே மிகவும் தளர்ந்துவிடுவார்கள். தொக்கு எடுக்கிறேன், மூலிகை கொடுக்கிறேன் என்று விபரீதத்திற்குக் குழந்தைகளை உள்ளாக்காமல் மருத்துவர்களைப் பார்க்கவேண்டும். அதிகம் நீராகாரம் குழந்தைகளுக்குத் தேவைப்படும். இது போக மற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உங்களது குடும்ப மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெறலாம். மனிதர்களுக்கே இவ்வளவு தேவைப்படுகிறது என்றால் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் என்னென்ன தேவைப்படும். யார் அவைகளுக்கு எல்லாம் செய்வார்கள். வாழ்வொக்கும் எல்லா உயிர்க்கும். எல்லோரும் வாழ்தலே வாழ்தல். வாழ்வோம்... pc நானே.... பழனிக்குமார் முக நூல் பதிவு

கருத்துகள்