ஆனந்த விகடன் 11 4 2024 பக்கம் எண் : 88-89. உலகத் தமிழ்ச் சங்கம்.... இது தமிழகத்தின் அடையாளம் !

ஆனந்த விகடன் 11 4 2024 பக்கம் எண் : 88-89. உலகத் தமிழ்ச் சங்கம்.... இது தமிழகத்தின் அடையாளம் ! உலகத் தமிழ்ச் சங்கம் மூலம் இதுவரை 22 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மின் நூல் வடிவில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பண்டைய தமிழகத்தில் மதுரையை மையமாகக் கொண்டு மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கின. அந்நிய மன்னர்களின் ஆட்சியில் தமிழ்ச் சங்கம் மறைந்துவிட்ட நிலையில் தமிழின் தொன்மை இலக்கியங்கள், அறநூல்கள், ஓலைச்சுவடிகள் அழிந்துவிடாமல் இருக்க, 1901-ம் ஆண்டில், சேதுபதிகள் வழிவந்த பாலவநத்தம் ஜமீன்தார்,பாண்டித்துரை தேவர், நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கினார். 100 ஆண்டுகளைக் கடந்து மதுரையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது அச்சங்கம். 1981-ல் மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில், மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்தார். 1986-ல் கால்கோள் விழா நடத்தப்பட்டு உலகத்தமிழ்ச் சங்கத்துக்கான விதிமுறைகள் உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்குப்பின் எந்த வேலையும் நடக்கவில்லை. 2014-ல் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் 14.15 ஏக்கர் நிலத்தில், 36 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு 2016-ல் ஜெயலலிதாவால் உலகத் தமிழ்ச் சங்கம் திறந்து வைக்கப்பட்டது. திறந்து 8 ஆண்டுகள் ஆன நிலையில், உலகத் தமிழ்ச் சங்கம் எப்படி இருக்கிறது ? தமுக்கம் அருகே மருத்துவர் தங்கராஜ் சாலையில் கம்பீரமாக வீற்றிருக்கிறது 'உலகத் தமிழ்ச்சங்கம். ' சங்க காலத்தைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் நம்மை வரவேற்கின்றன. சுற்றுச்சுவர்களில் திருக்குறள் உட்பட சங்க இலக்கியங்களைக் கல்வெட்டாக வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன் மிகப்பெரிய வளாகமும், அதன் உள்ளே பெரிய கூட்ட அரங்கம், இரண்டு சிறிய கூட்ட அரங்கங்கள் என மூன்று அரங்கங்கள் உள்ளன. முதல் தளத்தில் குளிரூட்டப்பட்ட பெரிய நூலகம் உள்ளது. தமிழ் மொழி மட்டுமன்றி, பல்துறைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. மொழி மற்றும் வரலாற்று ஆய்வு செய்வோர், போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் தினமும் நூலகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இங்கு அயலகத் தமிழர்களின் நூல்களுக்கான அரங்கமும் அமைந்துள்ளது. இதில் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் பல்வேறு வகையிலான படைப்புகள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ் இலக்கியங்கள் மற்றும் முக்கியப் படைப்புகளை அந்நிய மொழிகளுக்கு மொழிமாற்றும் பணியும் இங்கு நடக்கிறது. மொழி மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்காக ஒரு பிரிவும் இங்கு உள்ளது. நம்மிடம் பேசிய தமிழ்ச் சங்க அலுவலர்கள், "வாரம்தோறும் தமிழ்க்கூடல் எனும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழார்வலர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழ்த்துறை சார்ந்து தேசியக் கருத்தரங்குகள், பன்னாட்டுக் கருத்தரங்கங்கள், சிறப்புச் சொற்பொழிவுகள், பயிலரங்கம், கலைப் பண்பாட்டு நிகழ்ச்சிகள், கலந்துரையாடல், நூல் வெளியீட்டு நிகழ்வுகள், நூல் விமர்சனக் கூட்டங்கள், கவியரங்கம் எனப் பல நிகழ்வுகளும், அரசு நடத்தும் இலக்கிய விழாக்களும் நடந்து வருகின்றன. அயலகத் தமிழர்கள் இங்கு வந்து ஆய்வு செய்கிறார்கள். உலகிலுள்ள அனைத்துத் தமிழ்ச்சங்கங்களுடனும் தொடர்பில் உள்ளோம். சீனக்கவிஞர் யூசி- திருக்குறள் அறக்கட்டளையும், திருக்குறள் அறிவியல் நிறுவனம் தங்கமணி அறக்கட்டளையும் இங்கு செயல்பட்டு வருகின்றன. உலகத் தமிழ்ச் சங்கம் மூலம் இதுவரை 22 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மின் நூல் வடிவில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 'உலகத்தமிழ்' எனும் பன்னாட்டு காலாண்டு மின்னிதழை நடத்தி வருகிறோம். இலக்கியம் மற்றும் மொழியியல் துறையில் சிறந்து விளங்கும் அயலகத்தமிழர் ஒருவரைத் தேர்வு செய்து ஆண்டுதோறும் உலகத் தமிழ்ச் சங்க விருது வழங்கவும், அதிக அளவில் அயலகத்தமிழர்களின் படைப்புகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்" என்றனர். சமூக ஆர்வலர் செய்யது பாபு, "போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுக்குத் தயார் செய்யவும் இந்த நூலகம் மாணவர்களுக்குப் பயன்படுகிறது. தனியார் நிகழ்வுகளுக்கும் கூட்ட அரங்குகள் வாடகைக்கு விடப்படுகிறது" என்றார். தமிழார்வலர் செல்வராஜ், "உலகத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கம் பல நாடுகளில் இயங்கி வரும் தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகளை ஒன்றாக இணைப்பது தான். அதோடு தமிழ் மாணவர்களின் கலை, பண்பாடு, வரலாறு, மொழி வளர்ச்சி, சமூக ஆய்வுக்கென பல்கலைக்கழகம் போலவும் இது செயல்பட்டுவருகிறது" என்றார். ஐந்தாம் உலகத் தமிழ்ச் சங்கம், தமிழகத்தின் அடையாளம் !

கருத்துகள்