படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி ! இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

நானும் இங்கிலாந்தின் மில்டன் கீன்ஸ் நகர புத்தகக் கண்காட்சியும்..,* நேற்று (16.03.2024) மில்டன் கீன்ஸ் டௌன்ஸ் பார்ன் சமுதாய கூடத்தில் நடைப்பெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்றோம். காலை 11 மணியளவில் தொடங்கி இரவு 7 மணி நீடித்தது. கண்காட்சியை ஏற்பாடு செய்த தோழர் பௌஷர் இன்முகத்துடன் வரவேற்று தேநீர் வழங்கினார். அரங்கம் முழுதும் புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை, அரசியல், சமூகம், வரலாறு, பண்பாடு , மருத்துவம் என 500க்கும் மேற்பட்ட தலைப்புகளினான புத்தகங்கள் அழகாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. சிறுவர் இலக்கிய படைப்புகளுக்கென்று தனியொரு இடத்தை ஒதுக்கி இருந்தது கவனத்தை ஈர்த்தது. புத்தகக் கண்காட்சியில் ஒடுக்கப்படும் பாலஸ்தீனம், இலங்கை சமகால அரசியல், புத்தகங்களும் வாசிப்பும், எழுத்தாளர் அனுபவம், இலக்கிய கலந்துரையாடல் என நிகழ்வுகள் ஆரவாரமின்றி எளிமையாக ஒருபுறம் நடந்தது. எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன், தோழமைகள் சுதன், சுந்தர் உரை நிகழ்த்தினர். படைப்புகளின் வகைக்கேற்ப, ஒரே மேஜையில் இருக்கும்படியாகவும், பார்வையாளர்கள் நின்று பார்வையிட போதுமான இடைவெளி விட்டு புத்தகங்களை காட்சிப்படுத்திய விதம் கவனத்தை ஈர்க்கும் வகையில், கண் கொள்ளா காட்சியாக இருந்தது. புத்தக திருவிழா ஒருங்கிணைப்பிற்கான அர்ப்பணிப்பில் தோழர் பௌஷர் மற்றும் அவரது நண்பர்களின் மெனகெடல் இம்முறையும் வியக்கும்படி இருந்தது. என் அலமாரியில் இருக்கிற பல புத்தகங்களை கண்காட்சியில் காணமுடிந்தது. நம்மிடம் இல்லாத புத்தகம், இதுவரை வாசிக்காத புத்தகம், வாசிக்க விரும்பிய புத்தகம் என வகைப்படுத்தி சில புத்தகங்களை வாங்கினேன். சமீபத்தில் வெளியான, அன்பு தோழி வெண்ணிலாவின் நீரதிகாரம், 2023 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகடாமி விருது பெற்ற தேவிபாரதியின் நீர்வழிப்படூஉம் என சில புத்தகங்களை வாங்கினேன்.தீவிரமான பலதுறை தேடல்களை, ஆய்வுகளை, முற்போக்கு சார்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மட்டுமே புத்தகவாசிப்பு மிகவும் பேருதவியாக இருக்கும் என்கிற பொதுப்புத்தி உடைக்கப்பட்டு சாமான்யனுக்கும் புத்தக வாசிப்பு பழக்கம், அவனது சராசரி வாழ்வியலில் ஒன்றாக கலந்துவிட்டது என்பதை புத்தக கண்காட்சிக்கு வந்து போகும் வாசகர்களையும், ஆர்வலர்களையும் கணக்கில் கொண்டு அவர்கள் மன நிலையை துல்லியமாக நம்மால் கணக்கிட முடிந்தது. புலம்பெயர்ந்து வாழும் எங்களை போன்ற தமிழர்கள் ஒருவரோடொருவர் சந்தித்துக்கொள்ளவும், உறவுகளைப் புதுப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஒரு நிகழ்வாக இந்த புத்தகக்கண்காட்சி இருந்தது. அந்த விதத்தில் இந்த புத்தகத் திருவிழா அறிவுத்தேடலுடன் கூடிய இன்னொருவகையான நினைவுகளின் தேடல் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு பண்பாட்டு பெருநிகழ்வில் சில மணி நேரங்கள் செலவழித்தது பயனுள்ளது என்பேன். இங்கிலாந்திலிருந்து சங்கர் 🎋

கருத்துகள்