நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !

நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! நூல் வெளியீடு : வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 17. தொலைபேசி : 044-24342810 பக்கம் : 94 விலை : 9௦ ***** கோபுர நுழைவாயில் : அசுவதி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்கள் இருபத்தியேழு ; வேதாகமத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஹூப்ரு மொழி எழுத்துக்களின் எண்ணிக்கை இருபத்தியேழு ; வெற்றி என்னும் பொருள் தரும் “விஜய” தமிழாண்டு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் எண் இருபத்தியேழு ; படைப்பாளிகள் எழுதும் கரங்களில் செயல்படும் எலும்புகளின் எண்ணிக்கையும் இருபத்தியேழு ; மனம் தளராத மாற்றுத்திறனாளியாம் ஹெலன் கெல்லர் பிறந்த தினம் இருபத்தியேழு ; இணையதளத்தில் உலாவரும் கவிஞர் இரா. இரவி அவர்களின் “அம்மா அப்பா” என்ற இலக்கியப் படைப்பின் எண்ணிக்கையும் இருபத்தியேழு ; நேசத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் இக்கவிதை நூல், முப்பத்தைந்து தலைப்புக்களை உள்ளடக்கிய முத்தான நூலாகும். பக்கத்திற்கு பக்கம் : அம்மா பற்றியதா? அப்பா பற்றியதா? அல்லது அப்துல் கலாம் பற்றியதா? என்று ஐயப்படும் அளவிற்கு ஏவுகணை நாயகன் கலாம் அவர்கள் பக்கத்திற்கு பக்கம் இந்நூலில் எட்டிப்பார்த்து விட்டுச் செல்கின்றார். கவிஞர் ஆணினமாக இருப்பினும், பெண்மைக்கு அளிக்கும் முக்கியத்துவம் பாராட்டக்கூடிய ஒன்று. திருநங்கையர் இந்நூலில் ஐந்தாறு பக்கங்களில் இடம் பெற்றிருப்பதோடு கவிஞர் எழுதியிருக்கும் விதத்தில் வாசிப்போர் இதயத்திலும் இடம்பிடித்து விடுகின்றார். சமூக அக்கறையை மனதில் கொண்டு இந்நவரத்தின மாலையை கவிஞர் கோர்க்க, அறிவியல் உண்மைகளை நூலிழையாக பயன்படுத்தியிருப்பது வாசிப்பவர்களின் பொதுஅறிவு மேம்பாட்டுத் திறனுக்கு உறுதுணை புரிகின்றது. பாரியோடு ஓரி ; ஏணியோடு தோணி ; வேதனையோடு சோதனை ; வேஷமில்லா நேசம் ; நித்தியமாய் பத்தியம் என தாயும் தந்தையும் பக்கத்திற்கு பக்கம் போட்டி போட்டுக்கொண்டு இந்நூலில் வலம் வருகின்றனர். ஆறு முதல் நூறு வரை : அனைவர்க்கும் புரியும்வகையில் எளிய நடையில் கவிதை புனைவது கவிஞர் இரா. இரவிக்கு கைவந்த கலை. சாலையோர நிகழ்வுகளையும் அன்றாட உலகநடப்புக்களையும் கருவாக வைத்து துரித உணவு போல் சமைத்து, வாசகர்களின் இலக்கிய பசியைப் போக்குவதில் இவருக்கு நிகர் இவரே. எறும்பு முதல் எட்டுக்கால் பூச்சி வரை, எலி முதல் புலி வரை தூக்கணாங்குருவி முதல் தகரப்பறவை வரை, நாற்காலி முதல் செயற்கைகோள் வரை, மிதிவண்டி முதல் ஏவுகணை வரை, தானம் முதல் வானம் வரை, மங்கை முதல் திருநங்கை வரை, படகோட்டி முதல் விமான ஓட்டுனர் வரை என மிக சாதாரணப் பொருளிலிருந்து அசாதாரணப் பொருள் வரை ஆதி முதல் அந்தம் வரை கருவெனக்கொண்டு கவிதை தொடுப்பதில் இவருக்கு இணையேது? கல்வெட்டா? சொல்வேட்டா? “அம்மாவிற்கு வலி பத்துமாதம் அப்பாவிற்கு வலி ஆயுள் உள்ளவரை” (ப.எண் 55) அனுபவ வரி(வலி)கள் சந்தித்த வினாடிகளில் அடைந்த இன்பத்தை சாதாரண வார்த்தைகளில் வடிக்க முடியாது (ப.எண் 60) சொல் விளையாடல் “திருமணம் விரும்பாத திரு மனம் பெற்றவர் கலாம்” (ப.எண். 63) வைர வரிகள் “வாய்ப்பு வழங்கினால் வாகை சூடுவார்கள் திரு நங்கைகள்” (ப. எண் 33) உள்ளங்கை நெல்லிக்கனி உயர்பதவியில் பெண் இருந்திட்ட போதும் உப்பிட்டு சமைக்க வேண்டும் இல்லத்தில்” (ப.எண் 21) மனமார… பல்வேறு பரிசுகளையும் பாராட்டுக்களையும் தன் இலக்கிய படைப்புக்களின் வழி பெற்றுக்கொண்டிருக்கும் கவிமுரசு கவிஞர் இரா. இரவி அவர்கள், “அம்மா அப்பா” என்ற இந்நூலின் மூலம் பாசம் எனும் சாலையில், ‘அன்பு’, ‘கருணை’, ‘இரக்கம்’, ‘தியாகம்’ என்னும் நாற்சக்கர வாகனத்தில் நமக்கெனப் பயணித்து, ‘நேசம்’ என்னும் எல்லையைத் தொட்டிருப்பது உண்மை. பெங்களூரில் உள்ள திரு. கவி கங்காதேஷ்வரர் ஆலயத்தில் சங்கராந்தி தினத்தில் ஒளிரும் சூரியக்கதிர்களாக கவிஞர் இரா.இரவியின் படைப்புக்கள் திகழட்டும் என இணையதள வாசகியர் சார்பில் வாழ்த்துகின்றோம். *****

கருத்துகள்