நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.

நூல் மதிப்புரை: நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை. வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com பக்கங்கள் 84. விலை ரூபாய் 70 இனிய தமிழ் வணக்கம்!!! “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றும், "சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா" என்றும், "தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்றும், "சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! என்றும், "தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்" என்றும் நம் பாரதி தமிழ் மொழியை தன் கவிதைகளாலும் பாடல்களாலும் செந்தமிழால் சிறப்பித்து நமக்கு தமிழ் பேசவும், தமிழில் இயற்றவும், தமிழை பரப்பவும், தமிழை கொண்டாடவும் சொல்லி இன்றும் நம்முடன் வாழ்கிறார் தமிழால். உலகமே போற்றும் திருக்குறள் தந்த வள்ளுவரையும் தமிழ் நாட்டையும் பற்றி "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாரதி உச்சி முகர்கிறார். உலகில் உள்ள மொழிகளுள் மிகவும் தொன்மை வாய்ந்தது நம் தமிழ் மொழி. தமிழ் மொழியையும், தமிழ் படைப்புகளையும், இயல் இசை நாடகம் மூலம் தமிழின் பெருமையை வெளிப்படுத்தியும் நம் சான்றோர் பலர் தமிழ் காத்தவர்கள். பல்வேறு வடிவில் கிடைத்த தமிழ் பொக்கிஷங்களை தேடித் தேடி கண்டுபிடித்து ஒருங்கிணைத்தார்கள் நம் தமிழ் சான்றோர்கள். இன்றும் கவிஞர்கள்/எழுத்தாளர்கள் அழகுத் தமிழில் தம் கவிதைகளையும் நூல்களையும் இயற்றி தமிழைப் பெருமைப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழை பரப்புகிறார்கள்! தமிழ் சான்றோர்களை அறியச் செய்கிறார்கள்! தமிழ் நூல்களை அறியப்படுத்துகிறார்கள்! தமிழை கொண்டாடுகிறார்கள்! இவ்வகையில் இந்த "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" நூலின் ஆசிரியர் கவிஞர் திரு இரா.இரவி அவர்கள் தம் கவிதைகள் மூலம் தமிழை தாலாட்டி பாராட்டி சீராட்டி உள்ளார். கவிஞர் இரா.இரவி இந்நூலில் தமிழின் ஆழம், அகலம், நீளம், பெருமை, பழமை, உயர்வு, அழகு, பரவல் என அனைத்தையும் கவிதையாக வடித்துள்ளார். அருமை! சிறப்பு! ஏர்வாடி எஸ் இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்நூல் ஆசிரியர் குறித்து தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல உலகிற்சிறந்த மொழி, உன்னதமான மொழி என்றிருக்கிற தமிழை பாவேந்தர் "உயிருக்கு நேர்" என்று பாடினால், "உயிருக்கு மேல்" என்று கவிஞர் இரா.இரவி தமிழை உயர்த்தி சிறப்பித்துள்ளார். இந்நூலுக்கு "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்று பெயர் சூட்டி தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று முழங்கி கவிதை நூல் முழுவதும் தமிழ் செழுமை கொண்டுள்ளார். தமிழ் வளர்த்த மதுரை மண்ணின் தமிழை தம் கவிதையால் இன்னும் கொஞ்சம் இனிக்க செய்திருக்கிறார் கவிஞர். தவறான தமிழ் உச்சரிப்புக்கும், தமிங்கிலம் பேசுவோருக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பகுதியை படிக்கும் போது, இனிமேல் நாமும் சரியாக உச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் வரும்படியாயும், தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கவும் செய்துள்ளார் கவிஞர். தமிழ் படைப்புகளில் திருக்குறளை முதன்மையாகத் தொழுது பாராட்டி தம் கவிதைகளால் சிறப்பித்துள்ளார். "திருக்குறளை தேசிய நூலாக்குக" என்று அவர் மெய்யுருகிக் கேட்பதில் நமக்கும் அதீத உடன்பாடு. கீழடி ஹைக்கூ கவிதைகள் அருமை!!! தமிழின் பெருமை!! "உலகின் முதல் மொழியை உணர்ந்து படிப்போம், உலகின் முன்னே தமிழை உயர்த்திப் பிடிப்போம்!" அருமையான சொல்லாடல். தமது ஒவ்வொரு படைப்பிலும் தமிழ்ச் சான்றோர்களை குறிப்பிட்டு அவர்களின் புலமைகளை பெருந்தன்மையுடன் பாராட்டுவார் கவிஞர் இரா. இரவி. தமது இருபதாவது நூலான "இறையன்பு கருவூலம்" நூலில், இறையன்பு அவர்களின் படைப்புக்களை பேசும் போது அவரது தமிழை வெகுவாக போற்றி இருப்பார் கவிஞர். ஒவ்வொரு தமிழ் படைப்பாளிகளையும் தனித்தனியாக பாராட்டும் தன்மை மிகுந்த கவிஞர் இரவி அவர்கள் இந்நூலில் தமிழை மதிக்கவும், போற்றவும், பாரெங்கும் பரப்பவும் காரண காரியங்களோடு எடுத்துரைத்து உள்ளார். பெருமதிப்புக்குரிய கலைமாமணி திரு. ஏர்வாடி ராதாகிருஷ்ணன் அவர்களின் அணிந்துரை மகுடமாக "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" என்கிற கவிஞர் இரவி அவர்களின் இந்நூலுக்கு அமைந்துள்ளது சிறப்பு. நூல்களோடு நிற்காமல் அனுதினமும் இணையத்தில் தமிழ் கவிதைகளையும், தமிழ் படைப்புகளையும், தமிழ் கருத்துகளையும் பகிர்ந்து, ஓய்வின்றி தமிழுக்கு பெருமை சேர்த்துக் கொண்டுள்ளார் கவிஞர் இரா. இரவி. பெருமைக்குரிய செயல். நன்றிகளும்! பாராட்டுக்களும்! நிச்சயம் இந்நூலும் தமிழ்ப் பாடப் பகுதியாகும் வெகு விரைவில்! வாழ்த்துகள் !!!

கருத்துகள்